குப்பை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி முழுவதும் சிதைந்த கை – துறையூர் தூய்மைப் பணியாளருக்கு நேர்ந்த கொடுந்துயரம் !
குப்பை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி முழுவதும் சிதைந்த கை – துறையூர் தூய்மைப் பணியாளருக்கு நேர்ந்த கொடுந்துயரம் !
துறையூர் நகராட்சி அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக குப்பை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி சரசு என்ற 54 வயது தூய்மைப்பணியாளரின் கை முழுவதும் சிதைந்துபோனது துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் வீடுகள் தோறும் மற்றும் வீதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஓரிடத்தில் ஒட்டுமொத்தமாக சேகரித்து; பின்னர் அவற்றை மக்கும் குப்பை மக்காத குப்பை மற்றும் மறுசுழற்சிக்கு பயன்படும் குப்பைகள் என தரம் பிரித்து, பின்னர் இயந்திரத்தில் செலுத்தி அரைக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.
துறையூர் வாலிஸ்புரம் பகுதியில் செயல்படும் இந்த மையத்தில், குறிப்பாக அரவை இயந்திரத்தை இயக்கும் பொறுப்பு ஆண் தூய்மைப் பணியாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. குப்பைகளை வாரி தூய்மை செய்ய வேண்டிய பணியாளர்களை உரிய பயிற்சியும் பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாத நிலையில் இத்தகைய பணிகளுக்கு ஒதுக்கீடு செய்வதே முறைகேடானது.
ஆனாலும், இந்த நடைமுறைதான் தொடர்ந்து வந்திருக்கிறது.
இந்நிலையில்தான், மேற்படி இயந்திரத்தை இயக்கும் பொறுப்புக்கு மாற்று ஆள் கிடைக்காத நிலையில், போதிய முன் அனுபவம் இல்லாத 54 வயது நிரம்பிய சரசு என்ற பெண் தூய்மைப்பணியாளரை அந்தப் பணியை செய்யுமாறு நிர்ப்பந்தித்துள்ளனர்.
அவரும் வேறுவழியின்றி இன்று (ஜூலை-23) காலை 7 மணிக்கு இந்த மையத்திற்கு வந்திருக்கிறார்.
மேற்பார்வையாளரின் அறிவுறுத்தலின்படி, கன்வேயர் பெல்ட்டை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக கன்வேயர் பெல்ட் இயங்கத் தொடங்கியது. அசுர வேகத்தில் சகலப் பொருட்களையும் நொறுக்கித் தூளாக்கும் திறன் கொண்ட அந்த இயந்திரத்திற்கு, சிக்கியது துப்புறவுத் தொழிலாளி ஒருவரது கை என்று அறிந்துணரும் நுண்ணறிவைப் பெற்றிருக்கவில்லை.
தோள்பட்டை தொடங்கி, சுண்டுவிரல் விரையில் ஒரு பக்கம் கை முழுவதுமே கன்வேயர் பெல்ட்டில் சிக்கி சிதைந்து போனது.
மேற்படி, குப்பை அரைக்கும் இயந்திரம் கடந்த சில நாட்களாகவே பழுதடைந்து இருந்ததாகவும்; அப்பழுதடைந்த இயந்திரத்தை பழுதுபார்க்காமல் மேஸ்திரி அஜாக்கிரதையாக இருந்ததாலேயே இந்த கோர சம்பவம் நிகழ்ந்துவிட்டதாக தெரிவிக்கிறார்கள், உடன் பணியாற்றும் பணியாளர்கள்.
இயந்திரத்தின் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி கை சிதைந்த நிலையில், இரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார் தூய்மைப்பணியாளர் சரசு. உடனடியாக, துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது, திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார், சரசு.
காலை 7 மணிக்கு இந்த துயர சம்பவம் நிகழ்ந்த போதிலும்; காலை 10 மணிக்கெல்லாம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துவிட்ட போதிலும், மதியம் 3 மணி வரையிலும்கூட, துறையூர் நகராட்சி சார்பில் எந்த ஒரு அதிகாரியும் சம்பிரதாயமாகக்கூட நேரில் வந்து பார்க்க வரவில்லை என்பதாக வேதனை தெரிவிக்கிறார்கள், உடன் பணியாற்றும் தொழிலாளர்கள்.
கடந்த 28 வருடங்களுக்கும் மேலாக துறையூர் நகராட்சியில் பணியாற்றி வரும் தங்களை வயது மூப்பின் காரணமாகக் கூட அதற்கு தகுந்த பணிகளை ஒதுக்கீடு செய்யாமல்; கடுமையான பணிகளை ஒதுக்கி இன்னலுக்கு ஆளாக்கி வருவதாக குற்றஞ்சாட்டுகிறார்கள்.
இதுகுறித்து அதிகாரிகளிடத்தில் பலமுறை நேரில் கூறியும் எங்கள் மீது கொஞ்சம் கூட இரக்கம் காட்டுவதில்லை எனவும் ஆள் பற்றாக்குறை காரணமாக கூடுதல் பணிச்சுமைகளை தங்கள் மீது சுமத்தி வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
“நகராட்சி நிர்வாகத்தின் இத்தகைய போக்கின் காரணமாகத்தான், தற்போது குப்பை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி சரசு தனது வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார். இதற்கு ஓர் நிரந்தர தீர்வு காண வேண்டும்.
தவறும்பட்சத்தில் எங்களது சங்கத்தில் கலந்தாலோசித்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.” என்கிறார், துறையூர் நகராட்சி நிரந்தரப் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் வீரன்.
நடந்த சம்பவம் குறித்து கருத்தறிய, துறையூர் நகராட்சி சேர்மன் செல்வராணியை தொடர்புகொண்டோம்.
அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. துறையூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் விஜயகுமாரிடம் பேசினோம். “பழுதானதாக சொல்லப்படும் இயந்திரம் அதுவல்ல. அது வேறு இயந்திரம்.
இது நல்லமுறையில் இயங்கிவருவதுதான். அந்த அம்மாவும் ரெகுலராக வேலை பார்த்தவங்கதான். ஏதோ, அஜாக்கிரதையாக கையை விட்டுட்டாங்க.” என்றார். இதுபோன்ற இயந்திரங்களை இயக்குவதற்கென்று தனியே தொழிற்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்படவில்லையா? என்ற கேள்விக்கு, “அது இயந்திரமே அல்ல.
குப்பை அரைக்கிற மெஷின். சுவிட்ச்ச ஆன் பண்ணி, குப்பையை ஒரு பக்கம் போட்டா, அது தானா அரைச்சிடும் அவ்வளவுதான். அவங்களே பார்க்குற வேலைதான். அவங்கதான் செய்திட்டும் வர்றாங்க. டெக்னிக்கல் ஆள் எல்லாம் தேவை இல்லை.” என்கிறார், அவர்.
துறையூர் நகராட்சி ஆணையரை தொடர்புகொண்டோம். அவசரமான ஆய்வுப்பணி ஒன்றில் இருப்பதாக சொல்லி, சுகாதார ஆய்வாளரிடம் கொடுத்தார். “பாதிக்கப்பட்ட தூய்மைப்பணியாளர் சரசுவை நகராட்சி சார்பில் இன்னும் யாரும் பார்க்கக்கூட செல்லவில்லை என்பதாக சொல்கிறார்களே?” என்றோம். “ஒரு மீட்டிங்கில் இருக்கிறோம். மீட்டிங் முடிந்து செல்வோம்.” என்றார், சுகாதார ஆய்வாளர் விஜயகுமார்.
காலை ஏழு மணிக்கு நிகழ்ந்த சம்பவம். ஒரு கை முழுக்க சிதைந்து போயிருக்கிறது. நாம் அவர்களை தொடர்புகொண்டு பேசியபோது, இரவு ஏழு மணி ஆகியிருந்தது. அப்போது வரையில் நகராட்சி சார்பில் எந்த ஒரு அதிகாரியும் மருத்துவமனைக்கு எட்டிக்கூட பார்க்கவில்லை என்பதையெல்லாம் என்னவென்று சொல்வதென்றே புரியவில்லை.
மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணையை நடத்தி, எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் எதுவும் நிகழாவண்ணம் தூய்மைப்பணியாளர்களின் உயிர் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும்.
– ஆதிரன்.