திருச்சி தூய வளனார் தன்னாட்சி கல்லூரியில் பட்டமளிப்பு விழா !
திருச்சி தூய வளனார் தன்னாட்சி கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று (14.12.24) காலை நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்தின் உறுப்பினர் செயலர் முனைவர் வின்சென்ட் அவர்கள் கலந்து கொண்டு 2037 மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றினார்.
கல்லூரி அதிபர் அருள் முனைவர் பவுல்ராஜ்மைக்கில் முன்னிலையில். கல்லூரியின் செயலர் பட்டமளிப்பு நிகழ்வுகளை தொடங்கிவைத்தார். கல்லூரியின் முதல்வர் அருள்முனைவர் மரியதாஸ் வரவேற்புரை ஆற்றி, கல்லூரியின் செயல்பாடுகளையும் சாதனைகளையும் அறிக்கையாக வாசித்தார்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்தின் உறுப்பினர் செயலர் முனைவர் வின்சென்ட் அவர்கள் பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றினார். கல்வியும் அதன்மூலம் கிடைக்கப்பெற்ற அறிவும் திறமையும் வலிமையான கருவிகள். அவற்றைக் கொண்டு சமூக மாற்றத்திற்கு வித்திட வேண்டும். பட்டம் பெற்றிருக்கின்ற மாணவ மாணவியர் சமூகத்தில் தாங்கள் வேலை மற்றும் செய்யும் செயல்களில் ஒவ்வொன்றிலும் நேர்மறையான மாற்றங்களை கொண்டு புதுமைகளை படைக்க வேண்டும்.
மேலும் கற்றலை வாழ்க்கை முழுமைக்கும் தொடர்ந்திட வேண்டும். அதன்மூலம் அறிவுசார் மூகத்தினையும் முன்னேற்றத்திற்கான பல மாற்றங்களையும் சமூகத்தில் உருவாக்கிட முடியும். வாழ்க்கை எப்பொழுதும் எதிர்பார்த்ததுபோல் இருந்திடாது. மாணவ மாணவிகள் ஏற்படும் தடைகளை முறையாகக் கடந்து புதிய வாய்ப்புகளை உருவாக்கி வாழ்வில் வென்றிட இந்த பட்டங்களை பயன்படுத்திட வேண்டும் என்று பேசினார்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் பல்கலைக்கழக பதக்கங்களைப் பெற்ற 10 மாணவ மாணவியருக்கு தங்கப்பதக்கங்களை வழங்கினார். மேலும் ஒவ்வொரு துறையிலும் முதலிடம் பிடித்த 27 மாணவ மாணவியருக்கு தங்கப் பதக்கங்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து 734 முதுகலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கும், 1303 இளங்கலை மற்றும் இளம்அறிவியல் மாணாக்கர்களுக்கும் பட்டங்களை வழங்கினார்.
பட்டமளிப்பு விழாவிற்கு வர இயலாமல் போன மாணாக்கர்களுக்கான பட்டங்களை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் அலெக்ஸ் அவர்கள் கல்லூரி முதல்வர் அருள்முனைவர் மரியதாஸ் அவர்களிடம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் அவர்கள் உறுதிமொழியை வாசிக்க பட்டம் பெற்றவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்கள். இறுதியாக நாட்டுப்பண்ணோடு பட்டமளிப்பு நிகழ்வு நிறைவுபெற்றது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பட்டமளிப்பு விழாவில் கல்லூரியின் புலமுதன்மையார்கள், துறைத்தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், பேராசிரியர்கள், நிர்வாகப்பணியாளர்கள் மற்றும் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பெற்றோர்களுக்கு விழாவின் நிகழ்வுகள் இரண்டு பெரிய அரங்குகளில் நேரடி காட்சிகளாக பெரிய திரைகளில் காண்பிக்கப்பட்டது.