அனுபவங்கள் ஆயிரம் (1) – “முருகன் அருளால் மறைந்த வலி”
நாங்கள் திருச்செந்தூர் சென்ற போது எனக்கு நேற்பட்ட ஓர் அனுபவம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன். நாங்கள் சேலத்தில் இருந்து காரில் திருச்செந்தூருக்கு புறப்பட்டோம். காலை 7 மணிக்கு கிளம்பிய பயணம், சுமார் 7 மணி நேரத்திற்குப் பிறகு, பிற்பகல் 3 மணியளவில் முடிந்தது. பயண களைப்பை போக்க ஓய்வெடுத்துவிட்டு, மாலையில் கடவுள் தரிசனம் செய்துவிட்டு கடலில் குளித்து சோர்ந்து தூங்கிவிட்டோம்.
ஆனால் விடியற்காலையில், 3 மணியளவில் கடுமையான வயிற்றுவலி என்னை எழுப்பியது. மாதந்திர நாட்களுக்கு இன்னும் சில தினங்கள் இருக்க, பயண அலைச்சலால் அது முன்னதாகவே வந்து விட்டது. வலி மிகுந்து பொறுக்கமுடியாமல் படுக்கையிலேயே தாங்கிக்கொண்டிருந்தேன். மணி 6 ஆனதும், என் அம்மாவை எழுப்பி நிலைமையைச் சொன்னேன். அருகில் எங்காவது மருந்துக் கடை இருக்கும் என நினைத்து இருவரும் வெளியே சென்றோம். என்னால் நடக்க கூட முடியாமல் நடந்து சென்றேன். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் தெரு மூலையில் உள்ள டீக்கடைக்கு சென்று டீ சொல்லிவிட்டு, அம்மா கடைக்காரரிடம், “தம்பி, பக்கத்தில் எங்காவது மருந்துக் கடை இருக்கா?” என்று கேட்டார்.
அவர், “இப்போ திறக்காது அம்மா, இன்னும் மூணு மணி நேரம் ஆகும். தலைவலி, காய்ச்சல் மாதிரி இருந்தா என்கிட்ட சில மருந்து இருக்குது…” என்றார். அம்மா தயக்கத்துடன், “இல்ல தம்பி, என் பொண்ணுக்கு மாதந்திர வயிற்றுவலி… அதுக்குத்தான் மருந்து தேவை…” என்றார்.
அப்படியே எதிரில் உட்கார்ந்திருந்த ஒரு பெண்மணி இதைக் கேட்டு எழுந்தார். “என்ன பிரச்சனை அக்கா?” என்று கேட்டார். அம்மா சொல்லியதும், அந்தப் பெண் சிறிதும் தயங்காமல் தனது பையில் இருந்து ஒரு மருந்து அட்டையை எடுத்தார். அதிலிருந்து இரண்டு மாத்திரைகள் எடுத்து,
“என் பொண்ணு டாக்டர் தாங்க. பயப்படாம இதை சாப்பிடுங்க. உடனே சரியாகிடும்…” என்று கூறி, அந்த மருந்தை என் அம்மாவிடம் கொடுத்து விட்டு சட்டென்று சென்றுவிட்டார். அந்த நேரத்தில் எனக்குள் ஒரு சிறிய பயம்“அறிமுகமில்லாத ஒருவர் கொடுத்த மருந்து…” என்ற எண்ணம். ஆனால் மருந்தின் பெயரைப் பார்த்ததும் நான் திகைத்தேன். அது என்னுடைய மருத்துவர் முன்பு பரிந்துரைத்த அதே மருந்து தான்! பொதுவாக அந்த நேரத்தில் சாப்பிடும் மருந்து….
ஹோட்டல் அறைக்கு திரும்பி மருந்தை சாப்பிட்டுவிட்டு தூங்கினேன்… அரை மணி நேரம் கழித்து எழுந்த போது வலி முற்றிலும் அகன்று, உடலும் மனமும் இலகுவாகி இருந்தது. அந்த நிமிஷத்தில் எனக்குள் ஒரே ஒரு எண்ணமே, முருகனே அந்தப் பெண்ணின் வடிவில் வந்து அந்த மருந்தை வர பிரசாதமாக அளித்ததாக ஓர் உணர்வு…
தெரியாத ஊர், தெரியாத மனிதர்கள் நடுவில், இவ்வளவு தெய்வீக அனுபவம்…
அது மனிதன் கொடுத்த உதவி அல்ல ,முருகன் அருளின் வெளிப்பாடே!!!
— மதுமிதா








Comments are closed, but trackbacks and pingbacks are open.