தீபம் ஒளி தர வேண்டும்! சமூகம் இருட்டில் மூழ்கிட வழிவகுக்கக் கூடாது ! – பிரின்ஸ் கஜேந்திர பாபு வலியுறுத்தல்
மதுரை மக்கள் சகோதரத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் பெரும் பண்புடையவர்கள். அறியாமையின் விளைவாக தன் உறவுக்காரர்களே தவறு செய்தால் கூட, அதை முன்னின்று தட்டிக் கேட்கும் பண்பாளர்கள் மதுரை மண்ணில் தொன்றுதொட்டு வாழ்ந்து வருகின்றனர்.
மதுரையில் திருப்பரங்குன்றம் பல்வேறு இறை நம்பிக்கையின் சங்கமம். சமணம், சைவம், இஸ்லாம் உள்ளிட்ட பல நம்பிக்கைகள் கொண்டவரும் அக்கா – தங்கை, அண்ணன் – தம்பி, அத்தை – மருமகள், மாமன் – மச்சான், என்ற உறவுகள் சொல்லி ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்வது மதுரையின் பண்பாடு.
சிக்கந்தரை சித்தப்பு என்று சின்னராசு அழைப்பதும், மாரிமுத்துவை மாமா என்று மகமது பாட்சா அழைப்பதும் இயல்பான மதுரையின் வாழ்வியல் மொழிகள்.
ரம்ஜான் பண்டிகைக்கு காதர் வீட்டு பலகாரத்தை கந்தசாமி குடும்பம் விரும்பி சாப்பிடும். அம்மனுக்கு படையல் போட்டு கறிக் குழம்பு சாதம் ஆவுடையப்பன் பரிமாறும் போது ஊரே கூடி அமர்ந்து சாப்பிடும்.
இன்று மதுரை மக்கள் படும் துயரங்களில் ஒன்று மதுரையில் எய்ம்ஸ் (AIIMS) என்று அறிவித்துவிட்டு இராமநாதபுரம் மருத்துவக் கல்லுரியில் தற்காலிக வகுப்புகளாக மருத்துவ மாணவர்கள் படிக்க வேண்டிய அவலம். கிட்டத்தட்ட பத்தாண்டுகள். AIIMS வலைதளத்தில் நிஜத்தில் இல்லாத வண்ணமயமான கட்டிட படங்கள். படம் காட்டுவது என்று சொல்வார்களே அது இதுதானா? என்று ஏக்கத்துடன் கேட்கின்றனர்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் பல ஆண்டுகளாக துணை வேந்தர் இல்லாமல் இயங்குகிறது. ஆளுநர் பிடிவாதத்தால் சீரழியும் உயர் கல்வி நிறுவனத்தைக் காக்க, “வழக்கை விரைந்து முடிப்போம்” என்று எந்த நீதிமன்றமும் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
மாணவர்கள் சேர்க்கை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டும், சென்னை துரைப்பாக்கம் அரசு உதவிபெறும் தனியார் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை நடத்தவில்லை. மாணவர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகியபோது, நீதிமன்றப் பாதுகாவல் பணியில் உள்ள சிஐஎஸ்எப் காவலர்களை துணைக்கு அனுப்பி, கல்லூரியில் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்க எந்த நீதிமன்றமும் முன்வரவில்லை.
நீதிமன்றத்தின் பாராமுகத்தால் துரைப்பாக்கம் கல்லுரியின் அரசு உதவிபெறும் பாடப் பிரிவுகள் இல்லாமலே போனது. அதே நிலை மதுரையில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கும் வந்துவிடுமோ என்று மதுரை மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.
பட்டியல் சாதியினர் கோவிலுக்குள் நுழைய, அர்ச்சகராக பணி புரிய பலகாலமாக போராடி வருகின்றனர்.
எந்த நீதிமன்றமும் தனது சொந்த பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்ட பாதுகாவலரை உடன் அனுப்பி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 14 மற்றும் 21 காக்கப்படுவதை உறுதிப்படுத்தவில்லை.
தீண்டாமையின் விளைவாக ஒருவரின் வழிபாட்டு உரிமையை மற்றவர் பறித்தபோது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 17 படி நடவடிக்கை எடுக்க தனது பாதுகாவலரை அனுப்பி வைக்க 75 ஆண்டுகளாக எந்த நீதிமன்றமும் துணியவில்லை.
ஏற்றப்பட்டு ஒளிர்ந்துக் கொண்டிருக்கும் திருப்பரங்குன்றம் தீபத்தை மதுரை மக்கள் தரிசிக்கவிடமால், மதுரை மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்களில் பங்கேற்காத பட்டயக் கணக்காளர் உள்ளிட்ட சிலர் கூச்சலிட்டால் உடனே நீதிமன்றம் தனது பாதுகாப்பிற்கு நிற்கும் காவலரை அனுப்பி குழப்பவாதிகளுக்கு துணை நிற்கச் சொல்வது வினோதமான காட்சி.
திருப்பரங்குன்றத்தில் சில விஷமிகள் தங்களின் சொந்த நலனுக்காக கலவரத்தைத் தூண்ட பலவகையிலும் முயற்சி செய்கிறார்கள். அத்தகைய கலவரக்காரர்களை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு, மதுரை மாவட்ட நிர்வாகம் முயன்று வருகிறது.
நீதிமன்றத்தில் உள்ள வழக்கு, கலவரைத்தைத் தூண்டும் விஷமிகளுக்கும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அரசுக்கும் இடையிலானது. இதில் கோவிலோ, தர்காவோ சம்மந்தபடவில்லை.
மக்கள் தாங்கள் வணங்கும் கடவுளை தரிசிக்க எந்த இஸ்லாமியரும் தடையேதும் ஏற்படுத்தவில்லை. எந்த முருக பக்தரும் இஸ்லாமிய சகோதரர்களிடம் எதையும் கோரவில்லை. பரஸ்பர அன்பும் மதிப்பும் மரியாதையும் கொண்ட மதுரை திருப்பரங்குன்றத்தில் வாழும் மக்கள் அவரவர் வழிபாட்டில் அவரவர் கவனம் செலுத்துகின்றனர்.
கலக்காரர்களுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையில் நடக்கும் சட்டம் ஒழுங்கு தொடர்பான வழக்கில் ஏன் தர்கா நிர்வாகம் மனு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் எதிர்பார்க்கிறது என்றே புரியவில்லை.
டிசம்பர் மூன்றாம் தேதி கலவரக்காரர்கள் நடத்திய நாடகத்திற்க்கும் தர்காவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.
திருப்பரங்குன்றத்தில் வழக்கமான கார்த்திகை தீபத் திருவிழா, வழக்கமான உற்சாகத்துடன், தீபம் ஏற்றப்பட்டு மக்கள் கொண்டாடி உள்ளனர்.
திருப்பரங்குன்றத்தில் விழாவை முன்னிட்டு வெளியில் இருந்து வரும் அன்பர்களை வரவிடாமல் செய்யும் வகையில் கலவரக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் முருகனின் பக்தர்கள் வருகைக்காக வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய காத்திருந்து, வியாபாரம் நடக்காமல் நஷ்டம் அடைந்துள்ளனர். தேவையில்லா பதற்றத்தால் குழந்தைகள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.
மாநில அரசின் உறுதியான நடவடிக்கையால் கலவரக்காரர்களின் சதித்திட்டம் ஓரளவு முறியடிக்கப்பட்டுள்ளது. திருக்கோவில்களில் தீபம் ஏற்றுவது தொடங்கி பல வகையான பூசைகள் செய்வதுவரை ஒரு பாரம்பரிய நடைமுறை பின்பற்றப்படுகிறது.
யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தங்களின் விருப்பப்படி விளக்கேற்றுவது உள்ளிட்ட எந்த செயலையும் கோவிலுக்குள் அல்லது கோவில் தொடர்பான இடங்களில் செய்துவிட முடியாது.
திடீரென ஒருவர் “நான் விளக்கேற்ற வேண்டும்” என்று கோருவதும், ” நீ போய் ஏற்றிக் கொள், நான் பாதுகாவலர் அனுப்புகிறேன்” என்று நீதிமன்றம் கூறுவதும், ஆகம விதிப்படி சரியானதா? என்பதை ஆகமத்தை ஏற்றுக் கொண்ட நண்பர்கள் தெளிவுபடுத்த வேண்டும் .
பொதுவாக ஊரில் பல ஆண்டுகள் பூசை நடக்காமல் இருக்கும். கோவில் நடை திறக்கப்படாமல் அல்லது திருவிழா நடக்காமல் இருக்கும். திருவிழா ஆகிய நிகழ்வுகளை மீண்டும் நடத்த முன்வரும் போது பல்வேறு நடைமுறைகளை பின்பற்றி அதன் பின்னர்தான் விழா நடத்த கிராம மக்கள் முற்படுவார்கள்.
“இதுநாள் வரை கோவில் திறக்கவில்லை, இன்று நான் திறக்கிறேன, இன்று பூசை செய்கிறேன்”, என்று யாரும் உத்திரவிட்டு நடந்துக் கொள்ள இயலாது. இத்தகைய நடைமுறைகள் அனைவருக்கும் நன்றாகத்தெரியும். இதற்கு காரணம் நம்பிக்கை. தாங்கள் வணங்கும் கடவுள் சக்தி உள்ளவர். அவரிடம் உரிய வகையில் மன்னிப்பு கோரி, அவர் அனுமதி பெற்றே அவருக்கு செய்ய வேண்டிய பூசை செய்ய துணிவார்கள்.
கடவுள் நம்பிக்கை ஏதும் இல்லாத, கடவுள் மீது எந்த மதிப்போ, பயமோ, பக்தியோ எதுவும் இல்லாத ஒரு கூட்டம் கலவரத்தில் ஈடுபட்டு, மக்களை குழப்பி, சமூக அமைதியை சீர்குலைக்க கார்த்திகைத் தீபத் திருவிழாவை பயன்படுத்தி இருக்கிறது.
சூழ்ச்சியின் தன்மையை நன்கு உணர்ந்த தமிழ்நாடு அரசு சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல் அமைதியை நிலைநாட்டி உள்ளது. மக்கள் அன்பானவர்கள். அமைதியை மட்டுமே விரும்புபவர்கள். மக்களுக்கு தேவை நல்ல கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரத்திற்கு வேலை ஆகியவையே.
தான் நம்பும் இறைவன் தன்னையும், தன் மக்கள் அனைவரையும் காப்பார், அதற்கான சக்தி தனது இறைவனுக்கு உண்டு என்று அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட தமிழர்கள், சர்வ சக்தி படைத்த தனது கடவுளைக் காப்பாற்ற மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை வருவதாக சொன்னால், அதை எந்த காலமும் ஏற்க மாட்டார்கள். தொழிற்சாலையைக் காப்பற்ற உருவாக்கப்பட்டப் பிரிவு, கோவிலை காக்க வேண்டிய அவசியம் இல்லை. இது கோவில், இது தொழிற்சாலை இல்லை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
கலவரக்காரர்கள் ஏற்படுத்திய கலவரத்தை அடுத்து, தற்போது வழக்கு உயர் நீதிமன்றத்திலும் மற்றும் உச்ச நீதிமன்றத்திலும் விசாரணையில் உள்ளது.
கனம் நீதிமான்களே! சட்ட வல்லுநர்களே! அரசின் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகளே! ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
திருப்பரங்குன்றத்தில் கோவிலுக்கும் தர்காவிற்கும் இடையில் எந்த சிக்கலும், வழக்கும் இல்லை. இல்லாத வழக்கை உருவாக்காதீர்கள்.
தேவையில்லாமல் சம்மந்தேமே இல்லாத தர்கா நிர்வாகம் இதில் இணைக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. கோவிலின் ஆகம விதிப்படி விளக்கு ஏற்றப்பட்டுள்ளது. ஆகம விதிகளுக்கு புறம்பாக திடீரென ஒரு கல்லைக் காட்டி அதை தீபத் தூண் என்று சித்தரித்து பதற்றம் உருவாக்க முயற்சி நடக்கிறது.
இந்த வழக்கை சட்டம் ஒழுங்கு வழக்காகத்தான் பார்க்க வேண்டும்.
கோவிலில் ஆகம விதிப்படி விளக்கு ஏற்றப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றங்களுக்கு தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை விளக்க வேண்டும். இதில் தர்காவையோ, தர்கா நிர்வாகத்தையோ இணைக்க அனுமதிக்கக் கூடாது.
கோவிலுக்கும் தர்காவிற்கும் இடையில் எந்த சிக்கலும் இல்லை என்பதை நீதிமன்றங்களுக்கு புரிய வைக்க வேண்டும். கலவரக்காரர்கள் கூறும் கல், தீபத் தூண் இல்லை.
மீண்டும் மீண்டும் இல்லாத ஒன்றை இருப்பது போன்று சித்தரித்து “பொய்யும் மெய் போலவே” என்பது போல் சூழ்ச்சிக் காரர்கள் இல்லாததை இருப்பதாக மனதில் பதிய வைக்க நீண்ட நாட்கள் இந்த வழக்கை தவறான திசையில் நடத்த முயற்சி செய்யலாம்.
கலவரக்காரர்கள் சுட்டிக் காட்டும் ‘கல்’, தீபம் ஏற்றும் தூண் அல்ல என்பதே உண்மை. அதை நீதிமன்றம் உணர வேண்டும். நீதிமன்றத்திற்கு அரசு உணர்த்த வேண்டும். தேவையில்லாத நபர்கள், தொடர்பே இல்லாத தர்கா இந்த வழக்கில் இணைவதை அனுமதிக்கக் கூடாது.
அந்தந்த வழிபாட்டு தளங்கள், அதற்குரிய வழி தளங்கள் தொடர்ந்து அவரவர் பயன்படுத்தி வருகின்றனர், அதற்கு எந்த சிக்கலும் யாரும் ஏற்படுத்தவில்லை. அதே நிலை தொடர வேண்டும்.
கலவரக்காரர்கள் தங்களின் சூழ்ச்சியை நிறைவேற்ற நீதிமன்றத்தை பயன்பட்டுத்த அனுமதிக்கக் கூடாது.
தமிழ்ச் சமூகத்தின் மீது கலவரக்காரர்கள் கொண்டுள்ள வன்மத்தின் வெளிப்பாடே திருப்பரங்குன்றத்தில் நடந்த கலவரம்.

நாளிதழ்களும், செய்தி ஊடகங்களும் கலவரக்காரர்களின் சதிக்கு இரையாகாமல், திருப்பரங்குன்றத்தில் வழக்கமான கோவில் நடைமுறைப் படி கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது என்ற உண்மையை உரக்கக் கூற வேண்டும். பரபரப்பு செய்திகள் மூலம் வன்முறைக்கு வழிவகுக்கக் கூடாது.
தீபம் ஒளி தர வேண்டும். சமூகம் இருட்டில் மூழ்கிட வழிவகுக்கக் கூடாது.
கடவுளை வைத்து நாடகமாடி மக்களை பிரிக்க கலவரக்காரர்கள் முயல்வார்கள் என்று உணர்ந்ததால்தான் “சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட் பெரும் சோதி” என்று அருட் பிரகாச வள்ளல் இராமலிங்க அடிகளார் அவர்கள் ஜோதிக்கு விளக்கம் தந்தார்.
தீப ஒளி அமைதியைத் தரட்டும். சங்கடத்தை அல்ல என்பதை பொதுப்பள்ளிக்கான மாநில மேடை , பொதுச் செயலாளர், பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு தொிவித்துள்ளார்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.