அருந்ததியர் இடுகாட்டை சிதைத்து சாலை ! பேரூராட்சி அலுவலகம் முற்றுகை !
தேனி மாவட்டம் போடி தாலுகா, பூதிப்புரம் பேரூராட்சி நிர்வாகம் அருந்ததியர் சமுதாய மக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாட்டை அழித்து சிமெண்ட் சாலை அமைப்பு.
பூதிப்புரம் கிராமத்தில் “அருந்ததியர் சமுதாய மக்கள் சுமார் 1500 குடும்பங்கள், இறந்த பிரேதங்களை பல ஆண்டுகளாக பொது மக்களுக்கு இடையூறுமின்றி சுடுகாட்டில் புதைத்து வருகின்றனர்.
கடந்த 2018-2019 ம் ஆண்டு அரசு சார்பில் சுடுகாடு சுற்றுச்சுவர் மற்றும் இரும்பு கேட்டும் கட்டிக்கொடுக்கப்பட்டது.
மேலும் எரியூட்டும் கொட்டகையும் தாழ்த்தப்பட்ட சக்கிலியர் மக்களுக்காக அரசாங்கம் கட்டி கொடுத்தது. இது வரை இறந்த பிரதேகங்களை சுடுகாட்டில் புதைத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சுமார் 10 தினங்களுக்கு முன்பு அருந்ததியர் மயான சுடுகாடு சுற்று சுவரினை இடித்தும், வழிநடை பாதையில் இருந்த இரும்பு கேட் உடைத்தும், பாதையை மறைத்து பூதிப்புரம் பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் எவ்வித தகவலும் தெரிவிக்காமல் வேலை செய்யப்பட்டிருந்தது.
இதை கேள்விபட்டு அருந்ததியர் சமுதாய மக்களின் சார்பில் பூதிப்புரம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேஷ், சேர்மன் கவியரசு, பணியாளர் வினோத் மற்றும் கவுன்சிலர் பழனிவேல் உள்ளிட்டவர்களிடம் சுடுகாட்டு பாதையை அடைத்தும், கேட்டினை உடைத்தும், சுற்றுசுவர் கட்டியுள்ளீர்கள் எனக்கேட்டதற்கு முன்பு இருந்தது போலவே சரிசெய்து கொடுத்து விடுவதாக சொன்னார்கள்.
சுடுகாடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு புதைக்கின்ற இடத்தில் சிமெண்ட் ரோடு போடப்பட்டிருந்த செயல் அருந்ததிய சமுதாய மக்களை மனதளவிலும் உடலளவிலும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கி விட்டது.
சுடுகாடு சுற்று சுவர் மற்றும் இரும்பு கேட்டினை இடித்து சேதப்படுத்தியதோடு எங்களின் முன்னோர்களையும் அவமதிப்பு செய்து சுடுகாட்டினை ஆக்கிரமிப்பு செய்த பூதிப்புரம் பேரூராட்சி நீர்வாகத்தினர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுத்து,
இடிக்கப்பட்ட சுற்று சுவரினை கட்டிக்கொடுத்து பழைய நிலையிலேயே இரும்பு கேட் அமைத்து வழிநடை பாதையினை ஏற்படுத்தி கொடுத்திட அருந்ததியர் சமுதாய பொதுமக்கள் பூதிப்புரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.
— ஜெய்ஸ்ரீராம்