குழந்தையைப் போலத் தத்ரூபமாக இருக்கும் பொம்மைகள் !
தற்போது இணையத்தில் குழந்தையைப் போலத் தத்ரூபமாக இருக்கும் ரீபான் (Reborn) பொம்மைகள் பிரபலமாகி வருகிறது. இது நாம் வாங்கும் வழக்கமான பொம்மைகள் போன்று இல்லாமல் உண்மையான குழந்தைகளைப் போன்று உள்ளன. இதனை மக்கள் ஆர்வமுடன் கையில் வைத்து மகிழ்கின்றனர். இந்த பொம்மைகளைத் தயாரிக்கும் கலைஞர்கள் நுணுக்கமாகக் கையினால் செய்வதாகக் கூறுகின்றனர்.

இந்தப் பொம்மைகளை முதலில் பார்த்தால் உயிரோட்டம் உள்ள ஒரு குழந்தை போன்று தோன்றுகிறது. சமீபத்தில் கூட இது தொடர்பான பல வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி காண்பவரே நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும் பார்ப்பதற்குக் கவரும் வகையிலும், உணர்ச்சிகரமான வகையிலும் இந்தப் பொம்மைகள் இருப்பதால் மக்கள் இதனை ஆர்வத்துடன் வாங்குகின்றனர்.

ரியோ டி ஜெனிரோ நகர சபை (the rio de janeiro city council), இந்த ரீபான் பொம்மைகளை உருவாக்கும் திறமையான கலைஞர்களைக் கௌரவிக்க மசோதா நிறைவேற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தச் சட்டம் இப்போது நகர மேயரின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஒரு பெண் இந்த ரீபான் பொம்மையை அவசர உதவிக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வது போல் வீடியோ வைரலானதை தொடர்ந்து, பிரேசிலின் பிற பகுதிகளில் இந்தப் பொம்மைகளுக்கு மருத்துவ உதவி கோரும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
–மு. குபேரன்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.