தீபாவளி பண்டிகை கால போக்குவரத்து நெரிசல் : 5 கி.மீ. தூரத்துக்கு அணிவகுப்பு !
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்களால் மதுரையில் கடும் போக்குவரத்து நெரிசல். 5கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் வாகன ஓட்டிகள் கடும் அவதி. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் வேலை பார்க்கும் பெரும்பாலானோர் இன்று முதல் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். இதற்காக தமிழக அரசு சிறப்புப் பேருந்துகளை தமிழகம் முழுவதும் இயக்கி வருகிறது.
பேருந்து, ரயில்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் சொந்த வாகனங்களிலும் பயணித்து வருகிறார்கள். மதுரையில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் பயணிகள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி, பாண்டி கோவில், கோரிப்பாளையம் , சிம்மக்கல், தெற்குவாசல் மாநகர வழி சாலை என அனைத்துப் பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. 5கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்களால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். குறிப்பாக மதுரை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி பேருந்துநிலையம் முன்பு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நெரிசல் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் பாண்டிகோவில் வரை நீடிப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வாகனத்தை ஓட்டி செல்கின்றனர். பேருந்து நிலையம் முன்பு இதற்கு தீர்வாக போக்குரவத்து காவல்துறையினர் சிக்னல் அமைத்துள்ளனர். ஆனால், சிக்னல் போடும் போது மதுரை மேலூர் சாலைகளில் நீண்ட வரிசையில் இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் திரும்ப முடியாமல், சிரமப்படுகின்றன.
சிக்னல் போட்டதும் ஏற்கெனவே சிக்னலில் காத்திருக்கும் வாகனங்கள் கே.கே.நகர், ஒத்தக்கடையை நோக்கி நகருவதற்குள் அடுத்து சிக்னல் விழுந்து விடுவதால், பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் செல்ல முடியாமல் தினமும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்த நிலையில் தீபாவளி முன்னிட்டு அதிகமாக வாகனங்கள் வந்து செல்வதால் கூடுதலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அதுபோல் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள், மதுரை மேலூர் சாலையைக் கடந்து வெளியேற முடியாமலும், கோரிப்பாளையம் மற்றும் ஆவின் நிலையம் வழியாக செல்லும் சாலைகளில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாலும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.