இதய வேந்தனுக்கு எழுத்துலகின் அஞ்சலிகள் !
இதய வேந்தனுக்கு எழுத்துலகின் அஞ்சலிகள்
தலித் இலக்கியத்தின் தனிக்குரலாய் ஒலித்த எழுத்தாளர் விழி. பா. இதயவேந்தன் இன்று இயற்கை எய்தினார். எழுத்துலகினர் முகநூலில் அஞ்சலி செலுத்தினர். நான் வாசித்த அஞ்சலிகள் தொகுப்பு…
நந்தனார் தெரு, வதைபடும் வாழ்வு, தாய்மண், சிதேகிதன், உயிரிழை, அம்மாவின் நிழல், இருள் தீ, சகடை என்ற சிறுகதைகளின் தொகுப்புகள், ஏஞ்சலின் மூன்று நண்பர்கள் என்ற குறுநாவல்கள், தலித் அழகியல், தலித் கலை, இலக்கியம் என்ற கட்டுரைத் தொகுப்புகள், கனவுகள் விரியும் கவிதைத் தொகுப்பு என கடந்த முப்பாதாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் படைப்புகளைத் தந்திட்ட
தோழர் விழி பா இதயவேந்தன் இன்று காலமானார். சில ஆண்டுகளுக்கு உடல்நலம் குன்றியிருந்த நேரத்தில் வீட்டுக்குப் போயிருந்தோம். நெகிழ்வான உரையாடல்.. அன்றைக்குப் பார்த்ததே கடைசி.
ஒடுக்கப்பட்டோரின் வாழ்வியல் பற்றிய எழுத்துகளின் பேசுபொருளும் மொழியோட்டமும் என்னவாக இருக்கவேண்டும் என்கிற கேள்விக்கு பதிலாக சுட்டப்படும் இடத்தில் இருப்பவை இவரது எழுத்துக்கள். தோழருக்கு அஞ்சலி.
ஆதவன் தீட்சண்யா
தமுஎகச மாநிலக்குழு
தோழர் விழி. பா. இதயவேந்தன் மறைந்தார். மிகவும் வருந்துகிறேன். ஆழ்ந்த இரங்கல்.
– பெருமாள் முருகன்
எழுத்தாளர் விழி.பா.இதயவேந்தன் மறைந்தார்!
ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வலிகளை காத்திரமாக படைப்பாக்கிய தலித் இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர் விழுப்புரம்
விழி.பா.இதயவேந்தன் உடல் குறைவின் காரணமாக இன்று காலை காலமானார்.
ஒடுக்கப்பட்ட சமூகத்திலும் பின்தங்கிய சமூகத்தில் பிறந்து தன் எழுத்துகளின் வழி விளிம்பு நிலை வாழ்வியலை ரத்தமும் சதையுமாக எழுத்தாக்கிய இந்த மகத்தான படைப்பாளனுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்டக்குழு வின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்துடன் பகிர்ந்துகொள்கிறேன்.
அண்ணாரது இறுதி நிகழ்ச்சி விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள எல்லிசத்திரம் சாலைக்கு பின்புறம் அமைந்துள்ள அவரது வீட்டில் நடைபெறும்.
-மதுசூதன் ராஜ்கமல் த. மு. எ. க. ச. விழுப்புரம்
விழி.பா. இதயவேந்தனென்னும் சிறுகதையாளர்
ஆறுமாதத்திற்கு முன்பு மதுரை உலகத்தமிழ்ச்சங்க அரங்கில் நீலம் அமைப்பு நடத்திய இருநாள் நிகழ்வில் கடைசியாகச் சந்தித்துக்கொண்டோம். அந்தச் சந்திப்பு நீண்ட இடைவெளிக்குப் பின்பான சந்திப்பு. புதுச்சேரியில் இருந்த எட்டாண்டுக்காலத்தில் மாதமொருமுறையாவது சந்திக்கும் வாய்ப்பு இருந்தது. தீவிர இடதுசாரி அரசியல் பின்னணியிலிருந்து தலித் இலக்கிய வகைப்பாடு உருவாகிவந்தபோது முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவராக விழி.பா. இதயவேந்தன் அறியப்பட்டவர். தமிழினி 2000 என்ற பெரும் நிகழ்வில் ‘தமிழகத்தில் தலித் இலக்கியம்’ என்ற கட்டுரையொன்றை எழுதி வாசிப்பதற்காக எல்லாவற்றையும் தொகுத்து வாசித்தபோது அவரது முதலிரண்டு தொகுப்புகளும் – நந்தனார் தெரு வதையுண்ட வாழ்வு, எனக்குக் கிடைத்தன. இந்திய/ தமிழகச் சாதிய வெளியில் இருக்கும் பிளவின் பருண்மையான அடையாளங்கள் ஊர்- சேரி. சேரிகளில் வாழும்படி ஒதுக்கிய சாதியச் சமூகம், அச்சேரிகளுக்கு வழங்காத பொருளாதார மறுப்புகள், சமூக விலக்கங்கள், ஏற்படுத்தும் அழிவுகள், சேரி மனிதர்கள் மீது செலுத்தப்பட்ட குரூரமான வன்முறைகள், பாலியல் அத்துமீறல்கள் போன்றவற்றை நேரடி அனுபவத்திலிருந்து எழுதிய எழுத்துக்கானவர். அவ்வெழுத்துகளில் சித்திரிக்கப்பட்ட நிகழ்வுகளை அனுபவிக்காதவர்களுக்குக் குற்றவுணர்வு உண்டாக்கும் மொழியில் எழுதப்பெற்ற சிறுகதைகளை அவ்விரு தொகுதிகளில் விரிவாகப் பதிவுசெய்திருந்தார். அவரது எழுத்தடையாளம் சிறுகதைகளே. அவ்விரு தொகுதிகளை வாசித்தபின்பு புதிய கோடாங்கி, தலித் போன்ற இதழ்களில் எழுதிய கதைகளைத் தொடர்ந்து வாசித்திருக்கிறேன். அவை இதுவரை 10 தொகுதிகளாக வந்துள்ளதாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பாக ஒன்றைக் கொண்டுவரும் வேலையில் இருப்பதாக மதுரையில் சந்தித்தபோது சொன்னார். அதன் வெளியீட்டு விழாவின் போது நீங்கள் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். விழுப்புரத்தில் நெம்புகோல் என்றொரு வீதி நாடகக் குழு தொடங்கப்பட்டபோது பயிற்சிகள் பெற்ற அனுபவங்களையும் சொல்லியிருக்கிறார். நண்பர் ரவிக்குமார் ஏற்பாட்டில் விழுப்புரத்தில் நடந்த பல நிகழ்வுகளில் அவரைச் சந்திப்பேன். சந்திக்கும் போதெல்லாம் பேசிக் கொள்வதற்கு செய்திகள் இருந்துகொண்டே இருந்தன.இனி அந்தச் சந்திப்புகளும் உரையாடல்களும் நிகழப்போவதில்லை. இல்லாமல் போவது எல்லாரும் எதிர்கொள்ளப்போகும் ஒன்றுதான். தெரிந்தவர்களும் நண்பர்களும் இல்லாமல் போவது நினைவைக் கலைக்கும் குமிழிகளாக மாறிவிடுகின்றன.
-அ. ராமசாமி
தோழர் விழி.பா.இதயவேந்தன் காலமானார்! பா.அண்ணாதுரை இயற்பெயர். நக்சல்பாரி இயக்க அரசியலால் ஈர்க்கப்பட்டுப் பொதுவாழ்விற்கு வந்தவர். பேராசிரியர்கள் கல்யாணி, த.பழமலய் போன்றவர்களை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட்டவர். புரட்சிப் பண்பாட்டு இயக்கம் தொடங்கி தன் இறுதி மூச்சு வரையில் இயன்றளவுச் செயல்பட்டவர். விழுப்புரம் நெம்புகோல் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டவர். விழுப்புரம் நகராட்சியில் பணியாற்றிவர். சென்ற அக்டோபர் 1 அன்று, விழுப்புரத்தில் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் சார்பில் நடந்த மனித உரிமை மாநாட்டில் மேடையில் சந்தித்தேன். அதுதான் கடைசி சந்திப்பாக அமையும் என்று நினைக்கவில்லை. பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். 1990-களில் அண்ணல் அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டிய தலித் எழுச்சியால் விளைந்த இலக்கிய ஆளுமை. தமிழகத் தலித் இலக்கிய முன்னோடி என்றுகூட சொல்லலாம். தொடர்ந்து எழுத்தும் செயலுமாக வாழ்ந்தவர். நந்தனார் தெரு, வதைபடும் வாழ்வு, தாய்மண், சிதேகிதன், உயிரிழை, அம்மாவின் நிழல், இருள் தீ, சகடை ஆகிய சிறுகதைத் தொகுப்புகள், ஏஞ்சலின் மூன்று நண்பர்கள் என்ற குறுநாவல், தலித் அழகியல், தலித் கலை, இலக்கியம் என்ற கட்டுரைத் தொகுப்புகள், கனவுகள் விரியும் கவிதைத் தொகுப்பு, வீதி நாடகத்தில் பங்கேற்பு எனத் தமிழுக்கும்,தமிழ்இலக்கியத்திற்குப் பெரும் பங்களிப்பு செய்தவர்.
இவரது சிறுகதைகள் ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது படைப்புகள் குறித்து இளம் முனைவர், முனைவர் பட்ட மாணவர்கள் ஆய்வு செய்து பட்டம் பெற்றுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக சிறுநீரகங்கள் செயலிழந்து “டாயாலிசிஸ்” மூலம் உயிர் வாழ்ந்தவர். சில நாட்களாக உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு, புதுச்சேரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். தமிழகம் மிகச் சிறந்த இலக்கிய ஆளுமையை, செயற்பாட்டாளரை இழந்துவிட்டது. என் மீது அளவற்ற அன்புகொண்ட தோழர்.
“காலங்காலமாய்
நின்றிருந்ததில்
திடீரென்று பாய்ந்தோட
நம்மால் முடியாது.
ஓடமுடியாவிட்டால் என்ன
நிற்காதே.
ஓரடி முன்னால் வைத்தபடி
நட.
களத்தில் ஓடுவது
நாளை நடக்கும்வரை
இப்போதைக்குத்
தைரியமாய் நட!”
– விழி.பா.இதயவேந்தன்
ஆழ்ந்தஇரங்கல் #வீரவணக்கம்
-கோ_சுகுமாரன்
விழி பா இதயவேந்தன் மறைந்தார்
எழுத்தாளர் விழி பா. இதயவேந்தன் மறைந்தார் என்ற செய்தி நிலைகுலையச் செய்துவிட்டது. நேற்று முன்தினம் அவரை மருத்துவமனையில் சென்று பார்த்தபோது மீண்டெழுந்துவிடுவார் என்றுதான் நம்பினேன். வென்டிலேட்டரில் இருந்த அவர் என்னை நன்றாக அடையாளம் கண்டுகொண்டார். தலையை உயர்த்தி எழுந்திருக்க முயற்சித்தார். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவரும் தெரிவித்தார். சுமார் 15 ஆண்டுகளாக டயாலிசிஸ் செய்துகொண்டிருந்தார். உடல் நலிவைத் தனது படைப்புகளால் வென்று வந்தார். இப்படி சட்டென்று மறைந்துவிடுவார் என நினைக்கவில்லை. தனது அண்மைக்கால சிறுகதைகளைத் தொகுப்பாக வெளியிடப் போகிறார் என்ற அறிவிப்பைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. மருத்துவமனையில் அவரைப் பார்த்தபோது இப்போது ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறார் என அவரது மனைவி தெரிவித்தார். அதை முடித்து வெளியிடுவார் என நம்பினேன்.எழுத்தோடு நிற்காமல் சமூக அக்கறையோடு ஒரு செயல்பாட்டாளராகவும் இருந்தவர். 1980 களின் முற்பகுதியில் அவரை முதன்முதலாக சந்தித்தேன். இந்த 40 ஆண்டுகளில் அவரது கடப்பாடும், உழைப்பும் மேலும் மேலும் உறுதியடைந்தே வந்திருக்கின்றன. பேராசிரியர் கல்யாணியால் அடையாளம் காணப்பட்டு கவிஞர் பழமலை, இந்திரன் முதலானவர்களால் ஆற்றுப்படுத்தப்பட்டவர். தலித் – இலக்கிய இதழில் அவரது சிறுகதைகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தேன். அவர் சம்பந்தப்பட்ட எல்லா நிகழ்வுகளிலும் பங்கேற்பாளர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். தோழர் சூரியதீபன் இரங்கல் நிகழ்ச்சியில் அவரும் பேசுவதாக இருந்தது. அன்றுதான் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்குச் சென்றார். தொலைபேசியில் விசாரித்தபோது ‘ ஆட்டோவில் சென்றபோது இடுப்பில் தசை பிடித்துக்
கொண்டது’ என்றுதான் சொன்னார். திடீரென அவரது உடல்நிலை இப்படி ஆகும் என யாரும் நினைக்கவில்லை. தமிழில் தலித் இலக்கியம் உருவானபோது அதற்குப் பெருமளவில் தனது சிறுகதைகளால் பங்களிப்புச் செய்தவர் அவர்தான். எழுத்தில் வாழ்வார்! அவருக்கு என் அஞ்சலி.
– ரவிக்குமார்
விழி.பா. இதய வேந்தனுக்கு அஞ்சலி: மனித குல மனசாட்சியை எழுத்தில் புனைவிலக்கியமாக வடித்த விழி பா இதய வேந்தன் மறைவு தமிழ் இலக்கியத்துக்கு இழப்பு. ஒரு வங்கி அதிகாரியாக சிவகங்கையில் இருந்து விழுப்புரத்துக்கு வந்த போது எனக்குக் கிடைத்த பொக்கிஷம் தான் அண்ணாதுரை எனும் துடிப்பு மிக்க ஒரு இளம் மாணவ சக்தி. நான் ஒன்று சொன்னால் அடுத்த நிமிஷமே அதைச் செயலாக மாற்றக்கூடிய தயார் நிலையில் விழிபா இதய வேந்தன் நிற்கும் விதமே காட்டிக்கொடுத்து விடும். என் மீதான அவரது நிஜமான அன்பு ஈடு இணை இல்லாதது. விழுப்புரத்தில் நான் இருந்தபோது எனக்கு அன்பாதவன், ரவி கார்த்திகேயன் ,விழிபா இதய வேந்தன், ஞான சூரியன், வசந்தன் என்கிற ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் தேடித்தேடி படிக்கும் ஆசிரியர் ராமமூர்த்தி, வங்கியில் பணிபுரிந்த சந்திரசேகரன், பேராசிரியர் லோகியா என்று துடிப்புமிக்க ஒரு இளைஞர் கூட்டம் எனது வீட்டில் எப்பொழுதும் இருக்கும். விழி பா இதய வேந்தன் இவர்களில் ஒரு தளபதி போல இருந்து ஒரு செயல் புயலாக இயங்குவ தை நான் பார்த்து ரசித்திருக்கிறேன். கவிஞர் பழமலையின் கல்லூரி மாணவராக அறிமுகமான அண்ணாதுரை இந்நாளில் விழி பா இதய வேந்தன் எனும் ஒரு தமிழில் தலித் இலக்கிய முன்னோடியாக சிகரம் தொட்டிருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் அவர் தேடித்தேடி வாசித்த புத்தகங்களும் பேராசிரியர் பா கல்யாணி பேராசிரியர் பழமலை ஆகியோரின் வழிகாட்டலும்தான் . நக்சல்பாரி சிந்தனைகளால் புடம் போடப்பட்ட ஒரு எழுத்தாளர்தான் விழி.பா. இதய வேந்தன். காரல் மார்க்ஸ் ,பெரியார், டாக்டர் பி ஆர் அம்பேத்கர் சிந்தனைகளை செரித்துக் கொண்டவர் . நான் அடிக்கடி சொல்லும் “தலித் இயக்கம் என்பது இன்னொரு ஜாதி சங்கம் கட்டும் செயல் அல்ல .சாதி அமைப்பை உடைத்து போடுவதற்காகவே தலித் இயக்கம் இருக்கிறது.” என்பதால் அவர் வெகுவாக கவரப்பட்டு இருந்ததை அவர் என்னிடம் அடிக்கடி சொல்லுவார். எனது விழுப்புரம் வாழ்க்கையில் அன்பாதவனும் விழி.பா. இதய வேந்தனும் இரண்டு கண்கள் போல இருந்தார்கள். இனிய இல்லற வாழ்க்கையில் லட்சிய வாதம் மிக்க இரண்டு மகள்களை தன் துணைவியாரின் ஆதரவுடன் அவர் உருவாக்கிய விதம் பாராட்டத்தக்கது. அவர்களில் ஒரு மகள் ஆங்கிலத்தில் நாவல் எழுதி வெளியிட்டு இருக்கிறார் என்பது மிக முக்கியமானது. என்னை தன் ஆழ்ந்த வாசிப்பால் வியப்பில் ஆழ்த்தும் ரவிக்குமார் எம் பி முகநூல் பதிவில் மருத்துவமனையில் இருந்த போது கூட அவர் எவ்வளவு துடிப்போடு இருந்தார் என்பதை எழுதி இருந்ததை படித்த போது நான் ஒரு தொலைதூர நாட்டில் இருக்கும் போது நிகழ்ந்த இந்த பிரிவுச்செய்தி என்னை உருக்குலைக்கிறது.”அண்ணாதுரை , நீ சுறுசுறுப்பானவன் என்பது எனக்குத்தெரியும். அதற்காக மரணத்தை இவ்வளவு சுறுசுறுப்பாக அணைத்துக் கொள்ள வேண்டுமா?”
என்னைச் சுற்றி இருக்கும் மனிதர்கள் சாகிற போது எனக்குள் இருக்கும் உயிர் த் துடிப்புள்ள உலகங்கள் சாகின்றனவே …..என்ன செய்ய?
-இந்திரன்
எழுத்தாளர் விழி பா.இதய வேந்தன்…தொண்ணூறுகளில் கவிதையில் தொடங்கி ,கதைகளில் கால் பாவி,கோட்பாடுகளில் தடம் பதித்தவர்.வட தமிழ் நாட்டு அடித்தள மக்களை எழுதியவர். தலித் எழுச்சியை உணர்ந்து முன் வைத்தவர்.அரசியல்,அழகியல் சார்ந்த எழுத்து அவருடையது. பரந்த எழுத்துத் தோழமை கொண்டவர்.இன்று ஓரிரு படைப்புகளிலேயே ‘புகழ்’பெற்றுவிடும் எழுத்தாளர்கள் நடுவே முப்பதாண்டுகள் எழுதி அற்புதப் படைப்புகள் பல தந்த எழுத்தாளர் ஒருவர் வாழ்ந்த சுவடு தெரியாமல் எவ்வித அங்கீகாரமும் இன்றி மறைவது தமிழின் கெடு நிலையன்றி வேறு என்ன? புகழ் வணக்கம்… எம் தோழமையே….கண்ணீருடன்..
-இரா. காமராசு
எழுத்தாளர் விழி பா இதயவேந்தன் அவர்களுக்குப் புகழ் அஞ்சலி.
முப்பதாண்டுகளுக்கு மேலாக ஒடுக்கப்பட்டோர் எழுத்துகள், அழகியல் என இயங்கி இலக்கிய உலகில் மிகச்சிறந்த பங்களிப்பு செய்த எழுத்தாளர், கவிஞர் விழி பா இதயவேந்தன் இன்று நம்மைவிட்டுப் பிரிந்து சென்றார். குடும்பத்தினருக்கு ஆறுதல்…
விழி பா இதயவேந்தன் கவிதை
************
மூச்சு முட்டமுட்ட
உன் குரல்கள் நெறிக்கப்பட்டிருந்தன.
கதறக் கதற
நீ கற்பழிக்கப்பட்டிருக்கிறாய்
அடையாளம் தெரியாதவாறு
உன் எலும்புகள்
நொறுக்கப்பட்டிருக்கிறது.
செல்லும் இடங்களிலெல்லாம்
உன்னைப் பற்றிய
செய்திகள்கூட எரிக்கப்பட்டிருக்கிறது.”
-சுகிர்தராணி
இன்று முகநூலைத் திறந்ததும் அதிரவைத்தது அன்பாதவன் பதிவு நண்பர் இதயவேந்தன் மறைந்தார்.சிலமாதங்களுக்கு முன்தான் தோழரின் மணிவிழாவிற்காக விழுப்புரம் சென்று வந்தேன். சர்க்கரை நோயின் பின்விளைவுகள் அவர் உடலை சிதைத்தாலும்,அவரின் உள்ள உறுதியே இத்தனை ஆண்டுகள்அவரை வாழவைத்தது என்று சொல்லலாம்மணிவிழாவில் பணி ஓய்விற்குப் பின்னான இனிவரும் நாட்களில் அவர் செய்யவிருக்கும் பணிகளாக சிலவற்றைக் குறிப்பிட்டார்.அதில் ஒன்று தன்வரலாறு எழுதுதல்.அது சாத்தியப்பட்டதா எனத் தெரியவில்லை.தலித் இலக்கியம் என்று சொன்னால் அதில் இதயவேந்தனைத் தவிர்க்க முடியாது.பெண் படைப்புலகம் கருத்தரங்கை அவரும் அன்பாதவனும் விழுப்புரத்தில் நடத்தியபோது அவரின் அசாத்தியமான உழைப்பை பார்க்க முடிந்தது. வள்ளுவன் வழியில் தன் மகள்களை அவைகளில் முந்தி இருக்கும் ஆற்றலோடு அவர்களை உருவாக்கியுள்ளார்.இன்னும் சிலகாலம் இருந்திருக்கலாம் என்பது நம் ஏக்கமாக இருக்கலாம்.நோயின் வலியிலிருந்தும்,வாதையிலிருந்தும் மரணம் அவரை விடுவித்திருக்கிறது.தன் நண்பனைப் பிரிந்து வாடும் நண்பர் அன்பாதவனுக்கும் இதயவேந்தன் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்.போய்வாருங்கள் தோழர்.
-சக்தி அருளானந்தம்
பெரும் அதிர்ச்சியாக உள்ளது சகோதரர் விழி.பா.
இதயவேந்தனின் மரணம்.
இருபது கதைகளையும் பிழைத்திருத்தி தமிழ்ப்பித்தனின் ஓவியங்களையும் முன்னுரையையும் சேர்த்து அனுப்பிவிட்டு தொகுப்பை உருவாக்கி அளிப்பதற்குள் இப்படி சட்டென மறைந்துபோவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
பெரியாரியம் அம்பேத்கரியம் மார்க்சியம் என அனைத்துவித விடுதலை கருத்தாக்கங்களையும் அதுசார்ந்த இயக்க மனித உறவாடுதல்களையும் தமக்கான வழிப்பாதையாக கொண்டு சற்று தனித்த நடையை வட மாவட்ட நிலப்ரப்பில் தமது இலக்கிய அரசியலாக முன்வைத்த பேரன்பு மிக்க எளியமனிதர். நீண்டகாலம் அவரது உடலை வதைத்து வந்த நோய்மை இன்று முற்றாக நம்மிடமிருந்து அவரை பிரித்துவிட்டது. மனதை துயரம் கவ்வுகிறது . கடைசிவரை எளிமையாகவே இருக்கவிரும்பிய இலக்கியவாதி
இதயவேந்தனுக்கு
மனப்பூர்வமான இரங்கலை
தெரிவித்துக்கொள்கிறோம்.
-கருப்பு நீலகண்டன்
நந்தனார் தெருவில்
தலித் அழகியலை உலாவர செய்தவர்.
ஒடுக்கப்பட்ட
அடக்கப்பட்ட
மக்களின் வாழ்வில் வலிகளை
உயிரும்,மெய்யுமாய்
உலகின் செவிகளுக்கு எட்டிட
எழுத்தாய்தம் ஏந்திவந்த
எங்களின் தோழர்.
விழி.பா.இதயவேந்தன்.
எழுத்தாளர் அண்ணாதுரை என்கிற விழி பா இதயவேந்தன் இந்த விழுப்புரம் நகரத்தின் தமிழினத்தின் செம்மார்ந்த அடையாளம். ஒரு துப்புரவு பணியாளரின் மகன் அதே அலுவலகத்தில் Manger ஆக வரமுடியுமா? வந்தார். அவரின் எழுத்துகள் மூச்சை பிடித்தபடி நகர்ந்த தமிழிலக்கியத்தை சட்டையினை பிடித்து இழுத்து நிறுத்தி கொடுமையின் அநியாயங்களின் கதையினை சொன்னது. அவர் சொல்லாவிட்டால் துப்புரவு பணியாளருக்கு சாம்பார் பிடிக்காது என்பது எத்தனை பெருக்கு தெரிந்திருக்கும். அம்மா பாக்யம் வந்திருக்கிறேன் என்று தூரத்தில் நின்ற பாக்யத்தை அவரது தாயினை தமிழ்த்தாய்க்கு வேறு யார் அறிமுகம் செய்திருப்பார்கள்?
நெம்புகோலில் பலபேர் இருந்தார்கள் எல்லோருக்கும் கொஞ்சமாவது சமூக பின்னனி செல்வாக்கு இருந்தது ஆனால் அண்ணாதுரைக்கு எதுவுமே இல்லாத சூழலில் அவர் ஆற்றிய பணிகளை நினைத்தால் உயிர் சிலிர்க்கும்.கண்ணகியின் சிலம்பு மட்டும் அல்ல தமிழ்த்தாயின் கைகளில் அன்னக்கிளியின் செருப்பும் அவள் கரங்களில் அண்ணாதுரையின் எழுத்தால்.
தமிழ்மொழிக்கு நந்தனார் தெரு எப்படி தெரிந்திருக்கும்? அரசு மரியாதையினை அவருக்கு அளிக்கவேண்டும். உரியவர்கள் தமிழ்நாடு அரசின் பார்வைக்கு கொண்டு செல்லவும்.
-ஜி. கே. ராமமூர்த்தி
கள்ளங்கபடமில்லா வெகுளித்தனம், தன்னைப் போல விளிம்புநிலை மனிதர்கள் மீதான அன்பு, அவ்வன்பு அழைத்துச் சென்ற தூரம் அனைத்தும் சளைக்காமல், அலுக்காமல் போகின்ற அர்ப்பணிப்பு, அகங்காரமற்ற படைப்பாளி இக்குணங்களின் அழகிய வார்ப்பு எழுத்தாளர் விழி.பா.
இதயவேந்தன். இறுதிக் காலங்களில் நேரில் சென்று காண முடியாத குற்ற உணர்வு எனக்கு. எவருக்கு எது இறுதிக்காலம் என்பதை யாரே அறிவர்? அவரது தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பைக் கருப்புப்பிரதிகள் வெளியிட ஏற்பாடு செய்து வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அது முழுமை அடைவதையும் காண முடியவில்லை. வாழ்வு என்பது தற்செயல்களை இணைத்துக் கட்டிய கூடு. அதே போன்ற ஒரு தற்செயல் கூட்டையும் ஒருநாள் தகர்த்து எறிந்து விடும். தகரும் வரை அக்கூடு எத்தனை உயிர்களுக்கு இடம் கொடுத்தது என்பதே பொருள் பொதிந்த கவிதையின் அழகை அதற்குத் தருகிறதா இல்லையா என்பதை நிர்ணயிக்கிறது.அவரது வாழ்க்கை ஒரு கவிதை. நல்ல கவிதை வாழும். அவரும் நம் மனங்களில் வாழ்வார்.அஞ்சலி!
-ம. மதிவண்ணன்
விழி.பா.இதயவேந்தன் மறைந்திருக்கிறார். நினைவுகள் பின் நோக்கிச் சுழல்கின்றன. தொன்னூறுகளின் பிற்பகுதி அது. கொட்டும் மழையிலும் எதிர்க் காற்றிலும் சித்தாபுதூர் மேட்டில் சைக்கிள் அழுத்தி காந்திபுரம் போய் ‘கணையாழி’ வாங்கி வரும் காலம் ஒன்றிருந்தது. அதில்தான் இதயவேந்தன் பெயரை எல்லாம் முதன் முதலில் பார்த்தேன். மிக எளிய மனிதர்களைப் பற்றிய கதைகள் அவை. ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலித்த எழுத்துகள். அப்போது எனக்கு இலக்கியம் என்பதே புதிய வஸ்து என்பதால் இது என்ன வகை இலக்கியம் என்றெல்லாம் பிரித்தரிய தெரியாது. ‘ஓ இப்படி எல்லாம் எழுதலாமா?’ என ஆச்சர்யமாய் இருக்கும். அவரை ஒரே ஒரு முறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். அப்போதும் இதைத்தான் சொன்னேன்.
நெருங்கிப் பழகும் வாய்ப்பு உருவாகமலே நெருக்கமான உணர்வைக் கொடுத்த எழுத்தாளர். அவருக்கு என் அஞ்சலிகள். இனியாவது மூத்த படைப்பாளிகளைத் தேடிச் சென்று உரையாட வேண்டும் என்ற குற்றவுணர்வு மனதில் கவிகிறது. இந்த வருடம் முதல் நன்றாக ஊர் சுற்ற வேண்டும் என நினைக்கிறேன். பார்ப்போம்.
-இளங்கோ கிருஷ்ணன்
விழி.பா. விழி மூடிவிட்டதாக
நண்பர்கள் சொல்கிறார்கள்.
என்ன அவசரம்?
நட்பின் இதழ்கள் உதிர்கின்றபோது
அழ முடியவில்லை.
ஒருவேளை அன்பாதவன் அருகில் இருந்தால்…
கைப்பிடித்து கண்ணீர்விட முடியுமோ..
நட்பு அழகியலின்
ஒரு மலர் உதிர்ந்துவிட்டது.
அம்மாவின் யாசிப்பில்
எப்போதாவது கிடைக்கும்
எனக்குத் துணி
சேற்றிலும் துர்நாற்றத்திலும் ஊறிப்போன
அம்மா நெட்டி முறித்து
அழகு பார்ப்பாள் என்னை
விழி. பா. இதயவேந்தன்.
-புதிய மாதவி
சிறுகதை,கவிதை,குறுநாவல்,வீதி நாடகம்,புரட்சி அரசியல்,தலித் இயக்க செயல்பாடு என பன்முகம் கொண்ட விழி.பா.இதயவேந்தன் மறைவுக்கு அஞ்சலி.
-வெளி ரங்க ராஜன்
விழி.பா.இதயவேந்தன். தமிழ் இலக்கியத்திற்கு புதிய பரிமாணம் சேர்த்த எழுத்தாளர். தமிழகத்தில் தலித் இலக்கியம் காத்திரமான மொழியோடும் பார்வையோடும் அதற்கென்ற தனித்துவமான அழகியலோடும் உருவாக பங்களித்த முன்னோடி. அவருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கமும் அஞ்சலியும்.
-பி. கே. ராஜன்
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பாட்டாளிவர்க்கமும் தலித்தியமும் இணையும் புள்ளியில் தாராளப்
பொருள்முதல் வாதமும் அறிமுகமான காலத்தில் எழுதத் துவங்கிய முன்னோடிப்
படைப்பாளிகளில் ஒருவர் விழி பா இதய வேந்தன் கவிதைகள் கதைகள் என அவை அடையாள அரசியலிலும் வித்தியாசங்களின் அரசியலிலும் கவனம் ஈர்த்தவை.இனவரைவியல் கூறுகளிலும் தனித்த பண்பாட்டு அழகியலை முன் வைத்தவை என்றும் நினைவு. இலக்கிய வரலாற்றின் பக்கங்களில் அவருக்கு ஒரு இடம் இருக்கிறது.
சமகால நண்பரின் இழப்பிற்கு வருந்துகிறேன்.
-யவனிகா ஸ்ரீ ராம்
#எழுத்தாளர்விழிபா_இதயவேந்தன் (பா.அண்ணாதுரய்) நந்தனார்தெரு, வதைபடும்வாழ்வு போன்ற எளிய மக்களின் வாழ்க்கைப் படைப்புகளை எழுதியவர். விழுப்புரம் நகராட்சியில் பணிபுரிந்தவர். ஐயா பழமலய், பேரா பா.கல்யாணி போன்றவர்களுடன் இணைந்து அடித்தட்டு மக்களின் மேம்பாட்டிற்காக களப்பணியாற்றியவர். தொடக்க காலத்தில் அண்ணன் விழி பாவும் நானும் நடுநாட்டின் நாயகர் ராஜேந்திரசோழன் அவர்களிடம் சென்று சிறுகதை எப்படி எழுத வேண்டுமென அவரிடம் கேட்க ஆசைப்பட்டோம். நல்ல மனிதர். இன்று இயற்கையெய்தியிருக்கிறார். அன்னாரின் ஆன்மா அமைதியடைய வேண்டுகிறேன்.
-கண்மணி குணசேகரன்
எழுத்து ஒருவித அரசியல் என்றால் அதை எழுதும் விதமோ ஒரு பேரரசியல். எழுத்தையே ஆதர்சனமாய் வரித்து, கல்லூரிப் பருவத்திற்கே உரிய உற்சாகத்தோடு நான் தேடித்தேடிச் சென்றடைந்தவை சிற்றிதழ்களும் அவை தெளிக்கும் படைப்பாளிகளும்தான்.
நான் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்வையெல்லாம் நான் சொல்ல நினைக்கும் சொற்களையெல்லாம் வடித்துக்கொண்டிருந்த படைப்பாளிகளின்மீது எல்லையற்ற மதிப்பும் விகசிப்பும் கூடிக்கொண்டே இருந்தது. இருக்கிறது. பாமா, சிவகாமி, ராஜ்கெளதமன்,சந்ரு, ரவிக்குமார், அன்பு.பொன்னோவியம், இன்பக்குமார், என்.டி.ராஜ்குமார், வள்ளிநாயகம், உஞ்சை.அரசன், அரச.முருகுபாண்டியன், பிரதீபா.ஜெயசந்திரன், அன்பாதவன், அழகியபெரியவன், ஆதவன் தீட்சண்யா, யாழன் ஆதி, சுகிர்தராணி, பூங்குயில் சிவக்குமார், ஜெயராணி, கெளதம சன்னா, குடியரசு, கெளதம சித்தார்த்தன் என இன்னும் நீண்டு எனை வசீகரித்த ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர் #விழிபாஇதயவேந்தன். நந்தனார் தெரு என்ற சிறுகதை படைப்பினூடே தமிழிலக்கியப் பரப்பிற்கு அறிமுகமாகி தான் தேர்ந்துகொண்ட கோட்பாட்டில் தன்னெழுத்தை நிலைநிறுத்திக்கொண்ட படைப்பாளி. இன்று அவர் நம்முடன் இல்லை எனினும் இச்சமூகத்தை ஊடறுக்கும் எழுத்து அவருடையது.
இதயவேந்தனுக்கு எப்போதும் என் புகழஞ்சலி.
-உமா தேவி
தமிழ் இலக்கியத்தில் முப்பதாண்டுகளுக்கு மேலாக ஒடுக்கப்பட்டோர் எழுத்துகள், அரசியல், அழகியல் என இயங்கி வந்த எழுத்தாளர் கவிஞர் விழி.பா. இதயவேந்தன் உடல்நலக் குறைவால் காலமானார். விழுப்புரம் மாவட்டம் மயிலத்தைச் சேர்ந்தவர். கடலூரை அடுத்த நெல்லிக்குப்பம் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழ் இலக்கியத்தில், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தலித் இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர். எழுத்தாளர் விழி. பா. இதயவேந்தன் அவர்கள் சிறுகதை, கவிதை, கட்டுரை, குறுநாவல், வீதிநாடகம் என்று பன்முகம் கொண்ட எழுத்தாளர். இவரின் படைப்புகள் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட இதழ்களில் வெளி வந்துள்ளது. எழுத்தாளர் விழி.பா. இதயவேந்தன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் திங்கள்கிழமை (நவம்பர் 7) காலமானார். அவருடைய மறைவுக்கு எழுத்தாளர்கள், வாசகர்கள், இயக்கங்கள் இரங்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்
அடித்தட்டு மக்களின் வாழ்வியல் வலிகளை எழுதுவது மட்டுமே எனக்கான பணி என்று
கடைசி மூச்சு வரை பயணித்தவர் விழி.பா.இதய வேந்தன். உடல் துன்பங்களில் இருந்து விடுபட்டு போய் வாருங்கள் தோழர்.
-செஞ்சி தமிழினியன்
மறக்க இயலாத
உடன்பிறந்தார்..
செயல்
எழுத்தாளர்.
இழப்பின்
வலி
கண்ணீரோடு
– அறிவுமதி
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம் காலத்தின் சிறந்த படைப்பிலக்கியவாதிகளில் ஒருவரை இழந்துவிட்டோம்.
– ஆ.சிவசுப்ரமணியம்
துப்புரவுத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்து, சுயமாகவே எழுத்தாற்றல் கற்று, தலித் இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் ஜனநாயக அரசியல் பண்பாட்டுக்கும் பெரும் பங்களிப்புச் செயதவரும் தமிழ்ப் பற்றாளருமான தோழர் விழி.பா.இதயவேந்தனுத்கு வீரவணக்கம்.
– எஸ்.வி.ராசதுரை
விளிம்புநிலை மக்களின் வாழ்வியலைப் படைப்புகளாக்கிய எழுத்தாளர் விழி. பா. இதயவேந்தனின் மரணம்… மாபெரும் இழப்பு. எழுத்தாளர் அன்பாதவனோடு ஒருமுறை பார்த்து உரையாடியிருக்கிறேன். அந்த பொழுது நினைவிலாடுகிறது.
-விஷ்னுபுரம் சரவணன்.
எனது அஞ்சலி.
– வாஸந்தி
1980 களில் சந்தித்திருக்கிறேன்.
அஞ்சலி
– பிரசன்னா ராமஸ்வாமி
இன்று காலை செய்தி அறிந்து அதிர்ந்து போனேன் அண்ணா…இதய அஞ்சலி..
– லார்க் பாஸ்கரன்
ஆழ்ந்த இரங்கல் . நல்ல மனிதர்
-க.பஞ்சாங்கம்
தலித்தியப் படைப்பாளி. விழி.பா. இதயவேந்தன் இன்று மறைந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. இவரது எழுத்துகள் குரலற்றவர்களின் குரலாக இருந்தது. தோழரின் மறைவு ஈடுசெய்ய முடியா இழப்பு.
-தமிழ் இயலன்
நல்லதொரு விழிப்புணர்வு
சிந்தனையாளனைஇழந்து விட்டது
செந்தமிழ் உலகம். வருத்தம் அளிக்கிறது.விழி.ப.இதயவேந்தன்ஆன்மா சாந்தி பெறட்டும்!
-கல்லை மலரடியான்.
எழுத்தாளர் விழி.பா. இதயவேந்தன். நடுத் தமிழ்நாட்டு எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர். இன்னும் கூட இவர் பரவலாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆழ்ந்த இரங்கல்.
-கெங்கவல்லி ஆ. மணவழகன்