முதல்முறையாக .… புத்தகக்காட்சியில் அங்குசம் வெளியீடு !
முதல்முறையாக உங்கள் அங்குசம் செய்தி, திருச்சி புத்தகக் கண்காட்சியில் இடம்பெற்றிருக்கிறது.
திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் பிப்-14 தொடங்கி பிப்-22 வரையில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரையில், அரங்கு எண் : 66 இல் அங்குசம் அரங்கை வாசகர்கள் பார்வையிடலாம்.
கடந்த 2025 ஆம் ஆண்டு திருச்சி புத்தகக்காட்சி நடைபெறாத நிலையில், அதற்கு முந்தைய 2024 ஆம் ஆண்டில், நாமும் புத்தக்காட்சியில் பங்கேற்க பெருமுயற்சி மேற்கொண்டோம். அது முடியாமல் போனது.
இந்த முறை சாத்தியமானதிலும்கூட, சில சங்கதிகள் இருக்கவே செய்கின்றன.
சென்னை புத்தகக்காட்சியின் முன்னுதாரணத்தை கொண்டு, தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் புத்தக்கக்காட்சிகளை நடத்த வேண்டுமென்ற தமிழக அரசின் முன்முயற்சியின் அடிப்படையில், திருச்சியில் 2022 ஆம் ஆண்டு முதல் புத்தகக்காட்சி நடைபெற்று வருகிறது. அப்போதிலிருந்தே, அந்தந்த மாவட்டத்திலுள்ள எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள், பல்வேறு வாசகர் வட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முதல் முன்னுரிமை வழங்கி இதுபோன்ற நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டுமென்ற கோரிக்கையும் கூடவே எழுந்து வந்திருக்கிறது.
திருச்சியை பொருத்தமட்டில், மறைந்த கவிஞர் நந்தலாலா பொறுப்பில் இருந்த காலம் வரையில், அவரது அதிகார வரம்பிற்குட்பட்டு பல்வேறு இலக்கிய குழுக்கள், எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து புத்தக்காட்சியை ஒழுங்கமைத்தார்.
அவர் மறைவிற்கு பிறகு நடைபெறும் முதல் புத்தக்காட்சி என்பதால், தொடக்கமே சர்ச்சையானது.
குறிப்பாக, பொதுத்தேர்வு காலத்தில் இவ்வளவு அவசரம் அவசரமாக இந்த கண்காட்சியை நடத்த வேண்டிய அவசியம் என்ன? அதுவும் உள்ளூர் எழுத்தாளர்களுக்கே தெரியாமல், ஏற்பாடு பணிகள், விளம்பரம் வரையில் சென்றது எப்படி? உள்ளூர் ஆளுமைகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல், வெளி மாவட்டங்களை சேர்ந்த சில குறிப்பிட்ட ஆளுமைகளுக்கு மட்டுமே தொடர்ந்து முக்கியத்துவம் வழங்குவது ஏன்? என்பது உள்ளிட்ட கேள்விகளை பல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைத்தனர்.
நாமும், “ரகசியமாய்… ரகசியமாய் …. திருச்சியில் ஒரு புத்தக்ககண்காட்சி” என்ற தலைப்பில் விரிவான விமர்சன செய்தியையும் வெளியிட்டிருந்தோம்.
ரகசியமாய் … ரகசியமாய் … திருச்சியில் ஒரு புத்தகக் கண்காட்சி !
இதுஒருபுறமிருக்க, வழக்கம் போலவே, இந்த முறையும் மாவட்ட நிர்வாகத்திடம் ஸ்டால் ஒதுக்கீடு செய்யக்கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.
ஸ்டால் ஒதுக்கீடு வரையில் எல்லாமே முடிவடைந்த நிலையில்தான், பொதுவெளியில் புத்தக்காட்சி குறித்த அறிவிப்பே வெளியானது என்பதுதான் இதில் கூடுதல் சுவாரஸ்யம். பபாசி நிர்வாகம்தான் இந்த புத்தக்கண்காட்சியை ஒழுங்கமைக்கிறார்கள்.
மாவட்ட நிர்வாகம் அதற்குரிய வசதிகளை செய்து கொடுக்கிறது என்பதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பதிலளிக்கப்பட்டிருந்தது.
இந்த பின்புலத்தில்தான், ஏற்கெனவே இந்த புத்தக்காட்சியில் பங்கேற்பதற்காக விருப்பம் தெரிவித்து ஸ்டாலும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அறம் பதிப்பகத்தார் பங்கேற்கவியலாமல் போனது. இப்படி ஒரு தகவல் கிடைத்து, அறம் பதிப்பகத்தாரும் நமது அங்குசம் வெளியீடும் பரஸ்பரம் ஏற்படுத்திக்கொண்ட ஏற்பாட்டின்படிதான், இந்த தகவலை பபாசி நிர்வாகத்தினருக்கும் தெரியப்படுத்தி, அவர்களின் ஒப்புதலையும் பெற்றுத்தான், பங்கேற்புக் கட்டணமாக ஸ்டால் ஒன்றுக்கு ரூபாய் 9000/- செலுத்தி நாம் நமக்கான அங்குசம் அரங்கை உறுதி செய்திருக்கிறோம்.
நிச்சயம், விற்பணை இலக்கு அல்ல எமது நோக்கம். அறிமுக முயற்சி மற்றும் வாசிப்பை பரவலாக்க வேண்டுமென்ற நோக்கில், இப்புத்ததக்கண்காட்சியில் பங்கேற்றிருக்கிறோம்.
அங்குசம் வெளியீடு சார்பில் இதுவரை வெளியான நூல்கள் மட்டுமின்றி, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு எழுத்தாளர்கள் பதிப்பித்த நூல்களும் அரங்கை அலங்கரித்திருக்கின்றன.
அங்குசம் செய்தி இதழுக்கு ஆண்டு சந்தா செலுத்துபவர்கள் நேரடியாக, அங்குசம் வெளியீடு அரங்கு எண் : 66 இல் செலுத்தலாம்.
இனி, ஒவ்வொரு புத்தகக்காட்சியிலும் அங்குசம் வெளியீடு நிச்சயம் பங்கேற்கும், புதுபுதுத் தலைப்பிலான நூல்களோடு ! எப்போதும்போல, உங்களின் பேராதரவோடு!
என்றும் அன்புடன்,
ஜெ.டி.ஆர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.