ரகசியமாய் … ரகசியமாய் … திருச்சியில் ஒரு புத்தகக் கண்காட்சி !
திருச்சியில் புத்தகக்காட்சி நடைபெறப்போவதாக, திடீரென்று பிப்-11 அன்று திருச்சி மாநகரில் பேணர்கள் முளைத்திருந்தன. ”திருச்சியில் பிப்-14 இல் புத்தக திருவிழா தொடக்கம். அமைச்சர்கள் பங்கேற்பு; முன்னேற்பாடு பணிகள் தீவிரம்” என்ற தலைப்பில் அதே நாளில் தி இந்து தமிழ் நாளிதழில் விரிவான செய்தியும் வெளியாகியிருந்தது.
அதிலும் குறிப்பாக, பிப்-11 அன்று சரியாக மதியம் 12.22 க்குத்தான், மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமான முதல் அறிவிப்பையே வெளியிட்டிருக்கிறார். அப்படியிருக்க அதற்கு முன்னதாகவே, இவையெல்லாம் நடந்தது எப்படி? அதுவும் புத்தக கண்காட்சி எத்தனை நாள் நடைபெறுகிறது? யாரெல்லாம் பங்கேற்கிறார்கள்? எத்தனை அரங்குகள்? என்னென்ன நிகழ்வுகள் என்பது உள்ளிட்டு அவ்வளவு விரிவாக ஏற்பாடு பணிகளின் புகைப்படத்தோடு ”புலனாய்வு செய்தி” வெளியானது எப்படி?

திருச்சி மாவட்ட படைப்பாளர்களுக்கேகூட தெரியாமல், அவ்வளவு இரகசியமாக திருச்சியில் புத்தகக்கண்காட்சியா? என்பதாக திருச்சி மாவட்ட எழுத்தாளர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியிருக்கிறது, இந்த விவகாரம். எழுத்தாளர்களிடமிருந்து கண்டனங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.
பின்னணி என்ன ?
தமிழகத்தில் 49 ஆண்டுகளாக, இலட்சக்கணக்கான வாசகர்களின் பங்கேற்புடன் நடைபெற்று வரும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு கிடைத்த ஏகோபித்த ஆதரவை தொடர்ந்தே, புத்தக வாசிப்பை ஓர் இயக்கமாக மக்கள் மத்தியில் எடுத்துச்செல்ல வேண்டுமென்ற உயரிய நோக்கத்திலிருந்து, தமிழக அரசின் முன்னெடுப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதலாக திருச்சியில் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
திருச்சியில் கடைசியாக இதற்கு முன்னர், 2024 ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து, கடந்த 2025 ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சி நடைபெறவில்லை. இந்நிலையில்தான், இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
அவ்வளவு இரகசியம் ஏன் ?
“புத்தகத் திருவிழா நடத்துவதற்கு முன்னர் திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து இலக்கிய அமைப்புகளின் நிர்வாகிகளை உள்ளடக்கிய ஆலோசனை கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் நடத்தி அதன்படி ஒரு வரவேற்பு குழு அமைத்து விழாவை ஒருங்கிணைத்து நடத்தி வந்த நிலையில், தற்போது யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடத்துவது போல அறிவிப்பு வெளியாகியிருப்பதன்” பின்னணி என்ன? என கேள்வி எழுப்பியிருக்கிறார் திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் த.இந்திரஜித்.

”இதனை எப்போது, யார் திட்டமிட்டது. புத்தகத் திருவிழா ஏற்பாடுகளுக்கான ஆலோசனைக் கூட்டம் எதுவும் நடந்ததாக தெரியவில்லை. வரவேற்புக் குழுவில் யார் இருக்காங்க ? உடனே எப்படி விளம்பர பேணர்கள் வைக்கப்பட்டன ? அப்படி என்றால், இது ரகசியமாக நடைபெறுகிறது என்று பொருள். ஒப்பந்தங்கள் ரகசியமாக ? திருச்சி மாவட்டத்தில் ஏராளமான எழுத்தாளர் சங்கம், இலக்கிய அமைப்புகள் உள்ளன. தமிழ் அறிஞர்கள் உள்ளனர். இவர்கள் யாருக்கும் தெரியாமல் ஒரு புத்தகத் திருவிழா?” வா என காட்டமாகவே விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார், எழுத்தாளர் ஜவஹர் ஆறுமுகம்.
”கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற புத்தகத் திருவிழாவிற்குப் பொறுப்பாளராக மாவட்ட நூலக அலுவலர் சிவகுமார் இருந்தார். ஒருங்கிணைப்பாளராக மறைந்த எழுத்தாளர் கவிஞர் நந்தலாலா செயல்பட்டார். புத்தகத் திருவிழா நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னே யார்யாரைப் பேச அழைக்க வேண்டும் என்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புத்தகத் திருவிழாவை எந்தப் பொருண்மையில் நடத்துவது குறித்து அனைத்து இலக்கிய அமைப்புகளிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன.

சிறப்பிக்கப்பட வேண்டிய தமிழ்ச் சான்றோர்களின் பட்டியலும் இந்த அமைப்புகளின் பங்களிப்போடுதான் இறுதி செய்யப்பட்டன. புத்தகத் திருவிழா தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு மாவட்ட ஆட்சித் தலைவர் புத்தகத் திருவிழாவிற்கான இலச்சினையை (Logo) வெளியிடுவார். இந்தச் செய்தி அனைத்து நாளிதழ்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளியிடப்பட்டு, புத்தகத் திருவிழா செய்தி திருச்சி வாழ் பொதுமக்களைச் சென்றடையும். ஆனால், இந்தமுறை இதுபோல் எதுவுமே நடக்கவில்லையே?” என கேள்வி எழுப்புகிறார், பேராசிரியர் தி.நெடுஞ்செழியன்.
திருச்சியில் ஆளுமைகளே இல்லையா ?
புத்தகக் கண்காட்சி ”நிகழ்ச்சி சொற்பொழிவுகளில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆளுமைகளை பயன்படுத்தவேண்டும் என்றும் கூறி வருகிறோம். மற்ற அமைப்புகளும் இதே கருத்தை வலியுறுத்துகின்றனர். திருச்சி மாவட்ட படைப்பாளிகளின் நூல்கள் இடம்பெறும் வகையில், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத்திற்கு தனி ஸ்டால் கொடுக்கப்பட்டது. இதுப்பற்றி தற்போது ஒரு வார்த்தை கூட மாவட்ட நிர்வாகம் எங்களிடம் கேட்கவில்லை” என மாவட்ட நிர்வாகத்தை குற்றஞ்சாட்டுகிறார், த.இந்திரஜித்.
இந்த கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில், “சென்னை மற்றும் வெளியூர்களில் இருந்து வழக்கமான சில தமிழ் வியாபாரிகள் மாவட்ட புத்தகத் திருவிழாவை ஆக்கிரமிக்கும் போக்கு.” என்ற காத்திரமான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார், ஜவஹர் ஆறுமுகம்.

இளம் படைப்பாளர்களின் ஏக்கம்
“இதுபோன்று அரசு சார்பில் முன்னெடுக்கப்படும் நிகழ்வுகளில், என்னை போன்று வளரும் இளம் பேச்சாளர்களுக்கு, பெரும்பாலும் அங்கீகாரம் கிடைப்பதில்லை. அதை உடைத்து எம்மை போன்றவர்களுக்கு 2024 திருச்சி புத்தக காட்சியில் கன்னி வாய்ப்பு வழங்கப்பட்டது. இளம் படைப்பாளர்களின் பங்களிப்பையும் உறுதிபடுத்த வேண்டும் “ என்ற கோரிக்கையை முன்வைக்கிறார், சென்னைப்பல்கலை மாணவர் வசீர் அஹ்மத்.

வாய்வீச்சுப் பிரபலங்களை வைத்து விழாவா ?
இவற்றையெல்லாம்விட, மாவட்ட அளவில் நடத்தப்படும் புத்தகத்திருவிழாவில் ’வெளியூர் ஆட்டக்காரர்களை’ இறக்குவது ஏன்? என்ற கேள்வியும் எழாமலில்லை.
“எழுத்தாளர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், அறிவுஜீவிகளுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் புகழ் வாய்ப்புகள் பெருமைகள் விருதுகள் செல்வாக்கு எல்லாமே மலினமான பட்டிமன்றப் பேச்சாளர்கள் வாய்வீச்சுப் பிரபலங்களுக்கே போய்ச்சேர்கிறது. அவர்களில் பலர் மாநில அளவிலான நிரந்தரமான நிலைய வித்வான்களாக தமிழகத்தில் எந்த ஊரில் நிகழ்ச்சி நடந்தாலும் வாய்ப்புப் பெற்று, மாலை மரியாதை, ஏசி சூட், ஓசி கார், பெருந்தொகை கறந்து, சுகவாழ்வு நடத்துவது யாவரும் அறிந்த விஷயமாகவும் இருக்கிறது.
இதில், இந்நாள் முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ், அதிகாரிகள் தொடங்கி சில தொண்டரடிப்பொடியாழ்வார்கள் வரை பட்டியலில் உண்டு.
கிட்டத்தட்ட ஒரு இலட்சத்தைத் தொடும் பென்சன் பெறுகிற சிலருக்கு அரைலட்சம் வெகுமதி கொடுத்து உளறவைத்து, கஞ்சிக்கு லாட்டரி அடிக்கும் ஏழை எழுத்தாளர்களைக் கடைசி வரிசையில் உட்கார வைத்துக் கைதட்ட வைக்கும் கருணை சிலிர்ப்பூட்டுவது.
அவர்களில் பெரும்பாலானோர்க்கு குறைந்தபட்ச வாசிப்புப் பழக்கம் கூட இல்லை என்பதும்; பல பத்தாண்டுகளாக கேட்டுக்கேட்டு அலுத்துப்போன அறுவை ஜோக்குகள் வாட்ஸப்பில் வலம்வரும் ரீல்ஸ் தாண்டி அவர்களிடம் எந்தக் கச்சாப்பொருளும் இல்லை என்பதும் உலகறிந்த ரகசியம்.

பேசிப்பேசி அலுத்துப்போய் சலிப்புற்று இந்த வேடிக்கை நாடகங்களைக் கண்டுகொள்ளாமல் நமக்குத் தெரிந்த அரங்குகளுக்குச் சென்று நமக்குப் பிடித்த புத்தகங்களை வாங்கிக்கொண்டு பதவிசாகத் திரும்புபவர்கள் பாக்கியசாலிகள். அரசு நடத்தும் அறிவுசார் நிகழ்ச்சிகளிலும் இதுவே தொடர்வது இழுக்கு.” என்று புத்தகக் கண்காட்சி என்ற பெயரில் நடைபெறும் ”வியாபார” அரசியலை அப்பட்டமாக தோலுரித்து காட்டுகிறார், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தைச் சேர்ந்த கவிஞர் கோ.கலியமூர்த்தி.
புத்தகக்காட்சிக்கு நாலு பேர் வர வேண்டாமா?
இதெல்லாம்கூட, எப்போதும் இருக்கிற ”இலக்கிய அரசியல்” என்றே ஒதுக்கிவிடுவோம். புத்தகக்காட்சியின் நோக்கம் என்ன? நாலு பேர் புத்தக்காட்சியை பார்வையிட வர வேண்டாமா? குறிப்பாக, பள்ளி – கல்லூரி மாணவர்கள் பங்கேற்க வேண்டாமா?
”2025 கல்வியாண்டு முடியப் போகும் சூழலில், மாணவர்கள் இறுதித் தேர்வுக்காக படிக்க வேண்டிய காலம் இது. சட்டமன்றத் தேர்தலில் அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம். இது புத்தகத் திருவிழா நடத்தும் நேரமா ? கல்வித்துறை அதிகாரிகள் மூலம் மாணவர்களை வரச் சொல்லி கூட்டம் சேர்ப்பது திருவிழா ஆகாது. மக்கள் வர வேண்டும்.
இவர்களை எல்லாம் யார் இயக்குவது? திருச்சி அமைச்சர் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இது பற்றி யோசிக்க வேண்டாமா? திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் இது பற்றி எல்லாம் சிந்திக்காமல் எப்படி செயல்படுகிறார்? அரசு மீது எங்களுக்கு மரியாதை இருந்தாலும் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டும் கடமையும் உள்ளது. உண்மையான உள்ளூர் இலக்கியவாதிகளைப் புறக்கணித்து விட்டு, எப்படி ஒரு புத்தகத் திருவிழா?” என்று அடுத்தடுத்து கேள்விக்கணைகளை தொடுத்திருக்கிறார், ஜவஹர் ஆறுமுகம்.
இவற்றையெல்லாம் கூட்டிக்கழித்துப் பார்த்தால், தேர்தல் நேரத்தில் தார்ச்சாலைகள் போடப்படுவதைப்போல, கணக்குக்காட்டுவதற்காக நடத்தப்படுகிறதா? என்ற மையமான கேள்வியையும் எழுப்பத்தவறவில்லை.
– இளங்கதிர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.