ஆட்டோ டிரைவர்கள், இரும்பு பட்டறை உரிமையாளர்களுடம் – திருச்சி மாநகர போலீஸ் ஆலோசனை !
திருச்சி மாநகர பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுத்து நிறுத்த காவல்துறையினர் தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு திருச்சி மாநகர் பகுதி முழுவதும் உள்ள ரவுடிகள் பலர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் ரவுடிகள் வைத்திருந்த ஆயுதங்கள், கள்ளத் துப்பாக்கிகள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து நேற்று செப்டம்பர் 28ஆம் தேதி திருச்சி மாநகர பகுதிகளில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் உடன் திருச்சி மாநகர துணை கமிஷனர் சக்திவேல் ஆலோசனை நடத்தினர். மேலும் கத்தி அரிவாள் உள்ளிட்ட கருவிகள் தயார் செய்யக்கூடிய இரும்புப் பட்டறை உரிமையாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர துணை கமிஷனர் சக்திவேல் கூறியது, ஆட்டோக்கள் வழியாகவே பெரும்பாலான குற்றங்கள் நடைபெறுகிறது. அதனால் ஆட்டோ டிரைவர்கள் விழிப்போடு இருக்கவேண்டும், மேலும் ஆட்டோ ஓட்டுநர்கள் சீருடையணிந்தே ஆட்டோ ஓட்டவேண்டும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் ஆட்டோவில் பயணம் செய்தால் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று ஆட்டோ டிரைவர்களிடம் ஆலோசனை வழங்கினார். மேலும் பட்டறை உரிமையாளர்களிடம் யாரேனும் கத்தி ஆயுதம் போன்றவற்றை செய்யச் சொல்லி வந்தால் அவர்களை பற்றிய விவரங்களை உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.