திருச்சி : அதிமுக – அமமுக வியூகத்தில் மதிமுகவின் வெற்றிக்கு நெருக்கடி !
சாதி சிந்தனையோடு திருச்சி மக்களவை தொகுதியில் வாக்களித்திருந்தால் 4 முறை அடைக்கலராஜ் தொடர்ந்து வெற்றிபெற்றிருக்க முடியாது. சேலம் சார்ந்த அரங்கராஜன் குமாரமங்கலம் இருமுறை இங்கே வெற்றி பெற்றிருக்க முடியாது.
திருச்சி : அதிமுக – அமமுக வியூகத்தில் மதிமுகவின் வெற்றிக்கு நெருக்கடி !
திருச்சி மக்களவை தேர்தலுக்கான வாக்குவேட்டை மற்றும் பரப்புரையால் தொகுதியில் அனல் காற்று வீசுகின்றது. களத்தில் திமுக கூட்டணியில் துரை.வைகோவும், அதிமுக கூட்டணியில் கருப்பையாவும், பாஜக கூட்டணியில் அமமுக சார்பில் செந்தில்நாதன் ஆகியோர் நாள்தோறும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். நாம் தமிழர் களத்தில் இருப்பதாக அறிகுறிகூடத் தென்படவில்லை.
வேட்பாளர்கள் தங்களின் வெற்றிக்கான வியூகங்களை வகுத்து வருகின்றனர். அமைச்சர் நேரு – துரை.வைகோ இடையே இருந்த மனக்கசப்பு தற்போது அடியோடு நீக்கப்பட்டு வெற்றிக்காக நேருவும் அன்பில் மகேஸ் ஆகியோர் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மேயர் அன்பழகன் மாநகராட்சி பகுதிகளில் துரை.வைகோவின் வெற்றிக்காகக் கடுமையாக உழைத்து வருகின்றார். காரணம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாவட்டச் செயலாளர்களிடம் பேசியபோது,“திமுக நிற்கும் தொகுதிகளில் தொண்டர்கள் வெற்றிக்காக உழைப்பதைவிட, கூட்டணி கட்சிகள் நிற்கும் தொகுதிகளில் திமுக தொண்டர்கள் வெற்றிக்காகக் கடுமையாக உழைக்கவேண்டும். கடந்த தேர்தலைவிட வாக்கு உயர்ந்திருக்கவேண்டும். வாக்கு வித்தியாசமும் அதிகரித்து இருக்கவேண்டும். வாக்கும், வித்தியாசமும் குறைந்தால் மாவட்டச் செயலாளராக இருக்கமுடியாது. 40 தொகுதிகளையும் வெல்லவேண்டும்” என்று கடுமையான கட்டளையை மாவட்டச் செயலாளர்களுக்கு இட்டுள்ளார். அதனால் மதிமுக வேட்பாளர் துரைவைகோவின் வெற்றிக்காகத் திமுகவின் கடைசி தொண்டன் வரை கடுமையாக உழைத்து வருகின்றனர்.
அதிமுக தரப்பில் வித்தியாசமான வெற்றிவியூகத்தை பின்பற்றி வருகின்றனர். அதிமுக வேட்பாளர் கருப்பையா கந்தர்வக்கோட்டை தொகுதிக்குட்பட்ட கறம்பக்குடியைச் சார்ந்தவர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் வழிகாட்டுதலில், திருச்சி மக்களவைக்குட்பட்ட கந்தர்வக்கோட்டை மற்றும் புதுக்கோட்டையில் அதிமுக முதலிடம் பெற வியூகம் வகுத்து அதிமுக செயல்படுகின்றது. துரைவைகோ இந்தத் தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவர். எங்கிருந்தோ வந்து இங்கே போட்டியிடுகின்றார். நாம் மண்ணின் மைந்தன் என்று கந்தர்வகோட்டை, புதுக்கோட்டையில் இந்த வியூகம் கொஞ்சம் வேலை செய்யத் தொடங்கியுள்ளது. அடுத்த கட்டமாக அதிமுக முக்குலத்தோர் சமுதாயத்தின் வாக்குகளை ஒருமுகப்படுத்தத் தொடங்கியுள்ளது. திமுக கட்சிக்காரர்கள் தவிர்த்து, பொதுவான முக்குலத்தோர் சமூகம் சார்ந்த திமுக ஆதரவாளர்களிடம்,“இங்கே உதயசூரியன் நிற்கவில்லை. அதிமுகவை ஆதரித்து இரட்டை இலைக்கு வாக்களிக்கவேண்டும்” என்ற வேண்டுகோள் சமுதாயம் சார்ந்த பொதுமக்களிடம் வைக்கப்படுகின்றது என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி ஒருமுகப்படுத்தப்படும்போது, திருவெறும்பூர் தொகுதியில் முக்குலத்தோர் சமூகத்தவர்கள் நிறைந்து வாழும் கூத்தைப்பார், வேங்கூர், நாடராஜபுரம் போன்ற பகுதிகளில் அதிமுகவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. காரணம் இந்த ஊர்களின் முக்குலத்தோர் சமூகத்தவர்கள் புதுக்கோட்டை என்னும் தெற்குப்பகுதி முக்குலத்தோர் சமூகத்தவர்களை ஏற்க மறுப்பவர்கள். மேலும் முக்குலத்தோர் சமூகத்தில் இருமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கே.என்.சேகரன், திருச்சி மாவட்ட ஊராட்சி அமைப்பின் துணைத்தலைவராக இருக்கும் கே.எஸ்.எம்.கருணாநிதி, வேங்கூர் புலவர் க.முருகேசன், மதிமுக ஒன்றியச் செயலாளர் திருமாவளவன் ஆகியோர் திமுக கூட்டணிக்கு எதிரான எல்லா முயற்சியை வெல்லக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள் என்பதால் அதிமுகவின் வெற்றிக்கான வியூகம் திருச்சி பகுதியில் எடுபடாமல் உள்ள நிலைமையே நீடித்து வருகின்றது.
அமமுக சார்பில் களத்தில் உள்ள செந்தில்நாதன் அவர்களும் முக்குலத்தோர் சமூகம் சார்ந்தவர்தான். திருச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எல்.கணேசன் அவர்களின் சம்மந்தி உறவினர் என்ற தகவலும் உள்ளது. திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் அமமுக வாக்குவங்கி மிகவும் குறைவு. பாஜகவுக்கான வாக்குவங்கியும் மிகவும் குறைவு. அதிமுகவுக்கு இணையாக வாக்கு வாங்கிவிட வேண்டும் என்ற கட்டாயத்தில் அமமுக உள்ளது. இந்நிலையில் அமமுக வெற்றி வியூகமாக, திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர் தொகுதிகளில் உள்ள முக்குலத்தோர் சமூகம் சார்ந்த திமுக ஆதரவாளர்களிடம் அதிமுகவைப்போல்,“இங்கே உதயசூரியன் நிற்கவில்லை. எங்கிருந்தோ ஒருவர், இந்தத் தொகுதிக்குச் சம்மந்தம் இல்லாத துரைவைகோ என்பவர் போட்டியிடுகிறார். திமுக நின்றால் நீங்கள் உதயசூரியனுக்கு ஓட்டு போடலாம். ஏன் கூட்டணியில் போட்டியிடும் மதிமுவுக்கு ஓட்டுப்போட வேண்டும் என்ற கேள்வி முன்வைக்கப்படுகின்றது. அமமுகவின் இந்த வேண்டுகோள் முக்குலத்தோர் சமூகத்தினரிடம் மிகச்சிறிய அளவில் ஆதரவு கிடைக்க வாய்ப்பு உண்டு என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பாஜக ஆதரவு மனநிலையில் உள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூகம் சார்ந்த வாக்குகள் 30% உள்ளது. இச் சமூகம் சார்ந்த பொதுமக்களின் வாக்குகளைத் திமுக கூட்டணிக்குத் திருப்புவதில் மதிமுகவைச் சார்ந்த வெ.அடைக்கலம், மிசா சாக்ரடீஸ், திமுக மாநகராட்சி உறுப்பினர் ஓ.நீலமேகம், திமுக இளைஞர் அணி தெற்கு மாவட்டச் செயலாளர் அ.வெங்கடேஷ் குமார் மற்றும் திருவளர்ச்சிப்பட்டி திமுக செயலாளர் குமார், குண்டூர் சுதாகர் ஆகியோர் களத்தில் கடுமையாகப் பணியாற்றி வருகின்றனர். சிறுபான்மையினர் வாக்குகளைப் பெற்றிட மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொஹையாவும் கடுமையாகக் களப்பணியாற்றி வருகிறார். இதன் மூலம் மதிமுவின் வெற்றியை அதிமுகவோ, அமமுகவோ அவ்வளவு எளிதில் தட்டிப்பறித்துவிட முடியாது என்ற எண்ணவோட்டமே உள்ளது.
சாதி சிந்தனையோடு திருச்சி மக்களவை தொகுதியில் வாக்களித்திருந்தால் 4 முறை அடைக்கலராஜ் தொடர்ந்து வெற்றிபெற்றிருக்க முடியாது. சேலம் சார்ந்த அரங்கராஜன் குமாரமங்கலம் இருமுறை இங்கே வெற்றி பெற்றிருக்க முடியாது. ஒருமுறை இந்த மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தலித் எழில்மலை வெற்றி பெற்றிருக்க முடியாது என்ற வரலாற்று பதிவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, திமுக கூட்டணி வேட்பாளர் துரைவைகோவின் வெற்றிக்கு அதிமுக மற்றும் அமமுக சின்ன நெருக்கடியைத் தர முயற்சி செய்கின்றன என்றே எடுத்துக்கொள்ளலாம்.
ஆதவன்