அங்குசம் பார்வையில் – ஆலகாலம் !
குப்பைத் தொட்டி அருகே விழுந்துகிடக்கும் தனது மகனைப் பார்த்துக் கதறுவது, அதன் பின் அவருக்குள் எரியும் கோபத் தீ தான் இந்த ஆலகாலத்தின் அஸ்திவாரம்.
அங்குசம் பார்வையில் – ஆலகாலம் !
தயாரிப்பு: ஸ்ரீஜெய் புரொடக்ஷன்ஸ். வெளியீடு: ’ஆக்ஷன் ரியாக்ஷன்’ ஜெனிஷ். டைரக்ஷன் & ஹீரோ: ஜெயகிருஷ்ணா. மற்ற நடிகர்—நடிகைகள்; ஈஸ்வரி ராவ், சாந்தினி, தீபா சங்கர், பாபா பாஸ்கர், தங்கதுரை, கோதண்டம், சிசர் மனோகர். இசை: என்.ஆர்.ரகுநந்தன், ஒளிப்பதிவு: கா.சத்தியராஜ், எடிட்டிங்: மு.காசி விஸ்வநாதன், ஆர்ட் டைரக்டர்: தேவேந்திரன், நிர்வாகத் தயாரிப்பு: மணி தாமோதரன். பி.ஆர்.ஓ.சக்தி சரவணன்.
‘குடி’ குடியைக் கெடுக்கும், குடும்பத்தையே அழிக்கும். ‘சரக்கு’ சகலத்தையும் சர்வநாசமாக்கும் என்பதைச் சொல்லிய ஏராளமான சினிமாக்களில் இந்த ‘ஆலகாலம்’ சினிமாவும் ஒண்ணு. ஆனால் இதில் க்ளைமாக்ஸ் தான் டிஃபெரண்டான ஒண்ணு.
விழுப்புரம் மாவட்டம் கிராமம் ஒன்றில் கூலித் தொழிலாளியாக இருக்கிறார் ஈஸ்வரி ராவ். இவரது கணவர் இளம் வயதிலேயே மாரடைப்பால் இறந்துவிட, தனது ஒரே மகனை நன்றாகப் படிக்க வைத்து, சென்னையில் உள்ள இன்ஜினியரிங் காலேஜிலும் சேர்க்கிறார். மகன் நன்றாகப் படித்து நல்ல வேலைக்குப் போய், தன்னைக் காப்பாற்றுவான் என நம்பிக்கையுடன் இருக்கார் தாய் ஈஸ்வரி ராவ்.
ஹீரோவும் டைரக்டருமான ஜெய கிருஷ்ணாவும் எலெக்ட்ரிக்கல் இன்ஜியரிங் படிப்பில் கவனம் செலுத்துகிறார். பணக்கார வீட்டுப் பையன் ஒருவன் சாந்தினியை ஒன்சைடு லவ் பண்ணுகிறார். ஆனால் பணக்கார சாந்தினியோ ஹீரோ ஜெயகிருஷ்ணாவை காதலிக்கிறார். இதனால் எரிச்சலாகும் அந்த ஆண்ட்டி ஹீரோவின் சூழ்ச்சியால் சரக்கடிக்கிறார் ஜெயகிருஷ்ணா.
கல்லூரியில் ஒழுங்கீனமாக நடந்ததற்காக ஜெயகிருஷ்ணாவும் சாந்தினியும் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள். அதன் பின் இருவரும் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். கட்டிட எலெக்ட்ரிக் வேலைக்குப் போகும் போது குடிக்கு அடிமையாகிறார் ஜெயகிருஷ்ணா. கர்ப்பிணியாக இருக்கும் சாந்தினி, வறுமையுடன் போராடுகிறார். கொடிய விஷமான சரக்கு என்ற ஆலகாலம் பண்ணிய கொடும் விளைவுகள் தான் க்ளைமாக்ஸ்.
ஹீரோவும் டைரக்டருமான ஜெயகிருஷ்ணா, இடைவேளைக்கு முன்பு வரை பெரும்பாலான சீன்களில் ’இம்சை அரசன் 23—ஆம் புலிகேசி’ வடிவேலு பாணியில் சிரித்துக் கொண்டே இருக்கிறார். ‘பேக்பெய்ன்’ வந்த மாதிரி நடக்கிறார். ரொமான்ஸ் சுத்தமா வரல. ஆனால் இடைவேளைக்குப் பிறகு இடது கால் கட்டான நிலையிலும் சரக்கைத் தேடி நாயாக அலையும் குடி நோயாளியாக, வீசி எறிந்த தம்ளர்களில் இருக்கும் துளியூண்டு சரக்கை நக்கிக் குடிக்கும் மன நோயாளியாக நன்றாகவே நடித்திருக்கிறார்.
ஜெயகிருஷ்ணாவின் மனைவி தமிழாக வரும் சாந்தினி சகலத்தையும் தாங்கும் தர்மபத்தினியாக, புருஷனுக்கு குவார்ட்டர் வாங்கிக் கொடுக்க வேண்டிய கட்டாய மனைவியாக நடிப்பில் ஜொலிக்கிறார். இவரின் சினிமாக்களில் இந்தப் படம் தான் கொஞ்சம் நல்ல பேர் வாங்கிக் கொடுக்கும் படம். சாந்தினிக்கு உதவும் கேரக்டரில் தீபா சங்கரும் பாஸ் மார்க் வாங்கிவிட்டார்.
நடிப்பில் நல்ல அனுபவசாலி என்பதை பல சீன்களில் நிரூபித்துவிட்டார் ஈஸ்வரி ராவ். அதிலும் க்ளைமாக்ஸில்.. குப்பைத் தொட்டி அருகே விழுந்துகிடக்கும் தனது மகனைப் பார்த்துக் கதறுவது, அதன் பின் அவருக்குள் எரியும் கோபத் தீ தான் இந்த ஆலகாலத்தின் அஸ்திவாரம்.
காட்சிகளின் செயற்கைத்தனம் தான் இந்த பலமான அஸ்திவாரத்தைக் கொஞ்சம் ஆட்டம் காணச் செய்கிறது. மற்றபடி “உலக சினிமாவின் உன்னத படைப்பு” என போஸ்டர்களில் இருந்த ‘ஓவர் பில்டப்புக்கு’ ஒர்த் இல்லை.
மதுரை மாறன்