போலீசாருடன் இணைந்து போதைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை நடத்திய மாணவர்கள் !
போதைப் பொருள் பயன்பாட்டின் தீமைகளை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வாக்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு உயர் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி, திருச்சி – துவாக்குடி அரசு கலைக் கல்லூரி போதை பொருள் தடுப்பு குழுவும் திருவெறும்பூர் உட்கோட்ட காவல் நிலையங்களும் இணைந்து போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பேரணியை நடத்தியிருக்கிறார்கள்.
ஆக-26 துவாக்குடி அரசு கலைக்கல்லூரி வளாகத்திலிருந்து துவங்கிய இந்த பேரணியை கல்லூரி முதல்வர் முனைவர் பி சத்யா மற்றும் திருவெறும்பூர் காவல் உட்கோட்டத்தின் துணை கண்காணிப்பாளர் (பயிற்சி) கா.விக்னேஸ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
போதை பொருள் எதிர்ப்பு வாசகங்களுடன் பதாகைகளை ஏந்தியபடி, மாணவர்கள் பேராசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் பங்கேற்ற பேரணி அண்ணா வளைவு பகுதி குடியிருப்புகளின் வழியாக அரசு தொழில்நுட்பக் கல்லூரி வரை சென்றடைந்தது. அப்போது, போதைக்கு எதிரான விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர். பொதுமக்களுக்கு தகவல் கையெழுத்து பிரசுரங்களை பகிர்ந்தனர்.
மாணவர்கள் சமூகத்தில் தங்களது பொறுப்பினை உணர்ந்து போதைப்பொருள் இல்லா கல்வி நிலையம் என்ற இலக்கை நோக்கி செல்வதற்கான உறுதியுடன் பங்கேற்றனர். முதல்வர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்றது மாணவர்களுக்கு ஊக்கத்தையும் பொறுப்புணர்வையும் ஏற்படுத்தியது. இந்த நிகழ்வின் சிறப்பான முன்னெடுப்பு எதிர்காலத்தில் இவ்வகை விழிப்புணர்வு செயல்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கான வழிமுறைகளை உருவாக்கி வைத்துள்ளது.
இத்தகைய நிகழ்வுகள் மாணவர்கள் மத்தியில் நல்லொழுக்கம் ஒழுங்கு மற்றும் சமூக நலனுக்கான ஆர்வத்தை வளர்க்கும் முயற்சியாக இருக்கும் போதை பொருள் பயன்பாடு நாளுக்கு நாள் மாணவர் சமூகத்தில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மாணவர்கள் ஆசிரியர்கள் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் ஒருமித்த உணர்வுடன் கலந்து கொண்டு போதைப்பொருள் நச்சு தாக்கங்களை குறித்த பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இத்தகைய விழிப்புணர்வு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும் என்ற மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் போதை பொருள் இல்லா சமுதாயம் உருவாகும் வரை நமது நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்ற உறுதியுடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.
— அங்குசம் செய்திப்பிரிவு.