திருச்சி, தந்தை பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தந்தை பெரியார் 144ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா தொகுப்பு !

0

 

திருச்சி, தந்தை பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தந்தை பெரியார் 144ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது.

“தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளைப் போற்றி, புதியதோர் உலகம் செய்வோம்”
பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் எழுச்சியுரை
திருச்சி தந்தை பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்தநாள் விழா தமிழ்த்துறை சார்பில் 17.09.0222ஆம் நாள் காலை 11.00 மணிக்குக் கல்லூரி வளாகத்தில் உள்ள தந்தை பெரியார் கலையரங்கில் நடைபெற்றது. இவ் விழாவிற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் சுகந்தி தலைமை தாங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கா.வாசுதேவன் வரவேற்புரையாற்றினார்.

இவ் விழாவில் சி.பா.ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர், திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியின் மேனாள் தமிழ் இணைப்பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் கலந்துகொண்டு தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகள் என்னும் தலைப்பில் சிறப்புரையை எழுச்சியுரையாக ஆற்றினார்.

- Advertisement -

- Advertisement -

அவர் உரையிலிருந்து,“நான் தந்தை பெரியார் கல்லூரியின் முன்னாள் மாணவன் என்ற தகுதியோடு மட்டும் இந்த அவையில் நான் உரையாற்றவில்லை. நான் சுயமரியாதை திருமணம் செய்துகொண்டவன், தந்தை பெரியாரின் கொள்கைகளை வாழ்வின் நெறியாகக் கொண்டு வாழ்ந்து வருபவன். அதுமட்டுமல்ல, பெரியார் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்ற நூலை எழுதி அண்மையில் வெளியிட்டிருக்கிறேன். இந்தத் தகுதிகளோடுதான் தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகள் குறித்த உங்களிடம் உரையாற்ற வந்துள்ளேன்.

அறிவு என்பது பொதுஅறிவு, துறைசார் அறிவு, பகுத்தறிவு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தந்தை பெரியாரின் பகுத்தறிவு என்பது அறிந்த ஒரு செய்தியின் உண்மையைக் கண்டு அடைவது. பகுத்தறிவு என்பது அறிவியலை அடிப்படையாகக் கொண்டது. தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனை என்பது யார் மனத்தையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டது அல்ல. எல்லார் மனத்தையும் பண்படுத்தும் நோக்கம் கொண்டது என்பதை இங்கே கூடியிருக்கும் மாணவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.

வள்ளுவர் மொழியில் சொல்வது என்றால் ‘எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்பதுதான் பெரியாரின் பகுத்தறிவு சிந்தனையின் மையஇழையாகும்.
தந்தை பெரியார் அவர்கள் 1930களில் இரஷ்யா சென்று, அந்த நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களையும் பெண்கள் சமமாக நடத்தப்படுவதையும் அறிந்து தமிழகம் வருகிறார்.

வந்தபின்னர் பெண்கள் உரிமை பெறுவதற்கும், அவர்கள் விடுதலை பெறுவதற்குமான சிந்தனைகளை 1937 ஆம் ஆண்டில் திராவிடர் கழக மாநாட்டில் வெளியிடுகின்றார்.

அவை : பெண்கள் நீண்ட கூந்தல் வைத்துக்கொள்ளாமல் ஆண்களைப் போல கிராப் வைத்துக்கொள்ளவேண்டும். 16 முழம் புடவை அணிந்துகொள்வதை விடுத்து பேண்ட், தளர்வான சட்டைகளை அணிந்துகொள்ளவேண்டும். ஆண்களைப்போல பெண்கள் சைக்கிள், மோட்டார் சைக்கிள் ஓட்டவேண்டும். பெண்கள் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி வரை படிக்கவேண்டும். ஆண் பெறுகின்ற கல்வி என்பது அவன் குடும்பத்திற்கு என்றும் பெண் பெறுகின்ற கல்வி என்பது இந்த சமுதாயத்திற்கு என்று தந்தை பெரியார் கூறினார்.
பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்படவேண்டும். தற்போது உச்சநீதிமன்றம் இதற்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியுள்ளது.

முனைவர் தி.நெடுஞ்செழியன் உரையாற்றுகின்றார். மேடையில் வலமிருந்து இடமாக, பேராசிரியர் சங்கரநாராணயன், முதல்வர் சுகந்தி, தமிழ்த்துறைத் தலைவர் கா.வாசுதேவன், பேராசிரியர் குணசேகரன்.

 

பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 50% ஒதுக்கப்பட வேண்டும். தொடக்கப்பள்ளி கல்வி நிறுவனங்களில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பெண்களை மட்டுமே ஆசிரியராக பணி அமர்த்தம் செய்யப்பட வேண்டும். காரணம் ஆண்கள் எப்போது ஆதிக்க உணர்வுடன் இருப்பவர்கள்.

4 bismi svs

பெண்களிடம் தாய்மை பண்பு இருப்பதால் இவர்கள் தரும் கல்வி குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று தந்தை பெரியார் எண்ணினார்.
பெண்கள் திருமணம் செய்துகொள்ளக்கூடாது. விரும்பினால், திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஆணோடு நட்புடன் பழகி, அவன் நல்லவனா? என்பதை ஆராய்ந்து அறிந்து திருமணம் செய்துகொள்ளவேண்டும்.

திருமணத்தில் வைதிக புரோகித திருமணத்தைப் புறம் தள்ளவேண்டும். சுயமரியாதை திருமணத்தை மட்டுமே ஏற்கவேண்டும். திருமணத்தில் மாலை மட்டுமே மாற்றிக்கொள்ளவேண்டும். பெண் தாலி கட்ட ஆணை அனுமதிக்கக்கூடாது. குடும்பத்தினர் வற்புறுத்தினால், பெண், ஆணுக்குத் தாலி கட்டவேண்டும். திருமணம் என்பது ஆணும் பெண்ணும் விரும்பினால் பிரிந்துபோகக்கூடிய உரிமையோடு திருமணம் ஒப்பந்த அடிப்படையில் நடக்கவேண்டும் என்று தந்தை பெரியார் கூறினார்.
மனைவி இறந்துவிட்டால் கணவன் உடனே மறுமணம் செய்துகொள்வதைப்போல, கணவன் இறந்துவிட்டால் பெண் விதவைக்கோலம் பூண்டு இல்லாமல், மறுமணம் செய்துகொள்ள வேண்டும். நரிக்குறவர் இனத்தில் விதவை என்ற சொல் இல்லை. அந்த இனத்தில் கணவன் இறந்துவிட்டால், உடல் அடக்கம் நடைபெறுவதற்கு முன்பு, கணவனை இழந்து பெண்ணுக்கு உடனே மறுமணம் செய்துவைக்கும் பழக்கம் இன்றைக்கும் உள்ளது. குடும்பவேலைகளை ஆணும் பெண்ணும் இணைந்தே செய்யவேண்டும். குடும்பத்தில் ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள் என்ற பாகுபாடு இருக்கக்கூடாது. சமூக முன்னேற்றத்திற்கான பணிகளில் பெண்கள் ஆண்களோடு இணைந்து செயலாற்றவேண்டும். பெண் ஆணுக்குச் சமமாக வாழவேண்டும் என்பதற்கான சிந்தனைகளைத் தந்தை பெரியார் பகுத்து ஆராய்ந்து வெளிப்படுத்தினார் என்றால் மிகையில்லா உண்மையாகும்.
தந்தை பெரியார் தன் பகுத்தறிவு சிந்தனை மூலம் புராணங்களைக் கடுமையாக எதிர்த்தார்.

புராணங்கள் என்பது அடிப்படை ஆதாரம் இல்லாத கதைகள். புராணங்களில் சொல்லப்படும் செய்திகள் அனைத்தும் அறிவியலுக்கு எதிரானது என்றும் அவற்றை வரலாறு என்று நிறுவ முற்படக்கூடாது என்று தந்தை பெரியார் தொடர் பரப்புரை செய்துவந்தார். தந்தை பெரியார் இராமாயணத்தை எதிர்த்தார். இது வடநாட்டவர் பண்பாட்டை நம்மீது திணிக்கும் முயற்சி என்று கூறினார். இந்திய மொழிகளில் வெளிவந்த 18 இராமாயணத்தையும் நேபாளி மொழியில் வெளிவந்த இராமாயணம் என் 19 இராமாயணங்களையும் படித்த ஒரே சிந்தனையாளர் தந்தை பெரியார் ஒருவர் மட்டுமே.

பின்னர் இராமாயண ஆராய்ச்சியில் ஈடுபட்டு, இராமாயணம் 16 ½ இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்று சொல்கிறார்கள். அப்படியானால் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த புத்தரைப் பற்றியக் குறிப்பு இராமாயணத்தில் இடம்பெறுவதன் அடிப்படையில் இராமாயணம் 2500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு கதையாகும். ஒவ்வொரு மொழிக்கும் இராமாயணத்தின் கதை அமைப்பு மாறி இருக்கிறது. தெலுங்கு இராமாயணத்தில்தான் முதன்முதலில் அணில் இராமனுக்குப் பாலம் கட்ட உதவியது என்ற கட்டுக்கதை இடம் பெற்றது. நேபாளி மொழி சிந்தி இராமாயணத்தில், சீதையை மீட்க இலங்கை சென்ற இராமன் அங்கே இராவணனால் கொல்லப்பட்ட செய்தி இடம் பெற்றுள்ளது.

அப்படியானால் உண்மையான இராமாயணம் எது? என்று தந்தை பெரியார் கேள்வியை எழுப்பினார். அந்தக் கேள்விகளுக்கு இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை.
ஆரியர்களின் பண்டிகையான தீபாவளியைத் தந்தை பெரியார் எதிர்த்தார். நரகாசுரன் என்பவர் தேவர்கள் வளர்த்த யாகங்களுக்கு இடையூறு செய்தார் என்றும் மக்களைக் கொடுமைப்படுத்தினார் என்பதால் கிருஷ்ணன் நரகாசுரனைக் கொன்றார். கொல்லப்பட்ட அந்த நாளில் ஆரியர்கள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் மகிழ்ந்தனர் என்று புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

சமண சமயத்தின் 23ஆவது தீர்த்தங்கரர் இறந்த நாளை சமண, ஜைன சமயத்தினர் தீப ஆவளி என்று இன்றைக்கும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், தந்தை பெரியார் குறிப்பிடுகின்றார், இந்தியாவுக்கு 15ஆம் நூற்றாண்டில்தான் சீனாவிலிருந்து வெடிகள் இறக்குமதி செய்யப்பட்டன. தமிழ்நாட்டில் கிருஷ்ணதேவராயர் ஆட்சிக் காலத்தில்தான் இங்கே வெடி வெடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புராணகாலத்தில் எப்படி வெடி வெடித்திருக்கமுடியும் என்ற தன் பகுத்தறிவு சிந்தனையின் மூலம் தகுந்த பதிலடியைத் தந்தை பெரியார் கொடுத்தார் என்பது வரலாறு.
விழா கொண்டாடுவதை எதிர்த்த தந்தை பெரியார், பொங்கல் திருநாள் எந்த மூடநம்பிக்கையும் இல்லை என்பதால் இந்த விழா கொண்டாடப்பட வேண்டும் என்ற கருத்தை ஆதரித்தார். காரணம் பொங்கல் விழா என்பது உழைக்கும் மக்களான உழவர்களின் திருவிழா. இதை பண்டிகை என்று கொண்டாடக்கூடாது என்பதற்காக தந்தை பெரியார் பொங்கல் விழாவை ‘தமிழர் திருநாள்’ என்று அறிவித்தார். பொங்கல் விழா இந்துக்களின் பண்டிகை அல்ல. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும் பொங்கல் விழாவைத் தமிழர் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என்றும், பொங்கல் விழாவின்போது அனைத்து இல்லங்களுக்கும் திருக்குறள் நூல் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். திருக்குறளுக்கு ஆதரவாக மாநாடுகளைத் தந்தை பெரியார் நடத்தினார். காரணம் பிறப்பில் வேற்றுமை பாராட்டாமல், பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று பிறப்பில் எல்லா உயிரும் ஒன்றுதான் என்ற வள்ளுவரின் கருத்தைத் தந்தை பெரியார் ஆதரித்து வந்தார்.
தந்தை பெரியார் சொல்கிறார்,

என்னுடைய முதன்மையான பணி கடவுள் மறுப்பு அல்ல. சாதி ஒழிப்புதான். சாதியை ஒழிப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்தபோது, சாதியை மதம் தாங்கிப்பிடித்துக் கொண்டிருக்கின்றது.

மதத்தை கோயில்கள் நிறுவனமயமாக்கிக் கொண்டிருக்கின்றன. கோயில் நிலைபெற காரணமாக கடவுள் சிலையும் நம்பிக்கையும் உள்ளது. இந்நிலையில் சாதியை ஒழிக்கவேண்டும் என்றால், கடவுளையும், கோயில்களையும், மதங்களையும் ஒழித்துவிட்டால் சாதி தானாகவே அழிந்துவிடும் என்பதால்தான் தந்தை பெரியார் கடவுள் மறுப்பை முன்னொடுத்தார்.

சாதிகள் அற்ற சமுதாயம் அமையவேண்டும் என்பதே தந்தை பெரியாரின் பெருங்கனவாகும். இந்தப் பெருங்கனவு தற்போது மெல்ல…. மெல்ல நனவாகி வருவதை நாம் உணரலாம்.
தந்தை பெரியார் அவர்கள் பிராமணர்கள் எதிர்ப்பை இறுதிவரை கைவிடவில்லை. தந்தை பெரியார் அதற்குச் சொன்ன காரணங்கள் “என்னை விட ஒருவன் கல்வியில் உயர்ந்தவனாக இருக்கலாம், செல்வ நிலையில் உயர்ந்து இருக்கலாம். கார் வைத்திருக்கலாம். விமானத்தில் பறக்கலாம். மாடி வீடு கட்டிக்கொண்டு வாழலாம். ஆனால் பிறப்பில் ஒருவன் என்னைவிட உயர்ந்தவன் என்று ஒருவன் இருக்கமுடியாது. பிரம்மாவின் முகத்தில் பிறந்தததால் பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்பதை என்னால் ஏற்கமுடியாது. காலில் பிறந்த சூத்திர்கள் இழிவானவர்கள் என்பதையும் என்னால் ஏற்கமுடியாது. பிறப்பில் வேற்றுமை பாராட்டுகின்ற மனுநீதியை ஏற்கமுடியாது என்று தந்தை பெரியார் அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.

இப்படி பகுத்தறிவோடு சமூக நலனை முன்னிறுத்தி சிந்தித்தத் தந்தை பெரியார்,“நான் சொல்கிறேன் என்பதற்காக என் கருத்துகளை அப்படியே யாரும் ஏற்றுக்கொள்ளக்கூடாது.

உங்களின் அறிவைக் கொண்டு, புத்தியைக் கொண்டு சிந்தித்து நல்லது என்றால் ஏற்றுக்கொள்ளவேண்டும். கெட்டது என்றால் விட்டுவிடவேண்டும்” என்று கூறிய உலகின் முதன் சிந்தனையாளர் தந்தை பெரியார் ஒருவர் மட்டுமே. அவரின் பகுத்தறிவு சிந்தனைகளோடு சாதிகளற்ற புதியதோர் உலகம் படைக்க மாணவர் சமுதாயம் முன்வரவேண்டும் என்று தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்தநாளில் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று உரையை முடித்துக்கொண்டார்.

விழாவின் இறுதியில் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் சங்கரநாராயணன் நன்றி கூறினார். தமிழ்த்துறைப் பேராசிரியர் குணசேகரன் நிகழ்ச்சித் தொகுத்து வழங்கினார். விழாவில் கல்லூரியின் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்களும் என சுமார் 800பேர் கலந்துகொண்டனர்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.