போலீஸை பதற வைத்த கிரிஜா சிக்கலான கதை !
கூடா நட்பால் கேடாய் முடிந்த கிரிஜா என்றொரு பெண்ணின் கதை ! கல்லூரி ஒன்றில் பயின்றுவரும் அந்த இளைஞனுக்கு ஆசையாய் அக்கா ஒருத்தி இருக்கிறாள். அக்காவும் தம்பியுமாக பாசம் பொங்கி வழிந்த நாட்களை எண்ணி ஏங்கித் தவிக்கிறான். நம்மை விட்டுப் பிரிந்து சென்ற அக்கா எப்போது வீடு திரும்பி வருவாள் என்று நாளும் எதிர்நோக்கியிருக்கிறான். “நீ எங்களுக்கு பிள்ளையும் இல்லை. நாங்கள் உனக்கு பெற்றோரும் இல்லை” என்று போலீசு ஸ்டேஷனில் எழுதிக் கொடுத்துவிட்டு ஒதுங்கி சென்றிருந்தாலும், என்றாவது ஒருநாள் நம்மை தேடி வராமலா போய்விடுவாள் என்று வாட்டும் ஏக்கத்தோடு, வாழ்வில் ஏதோ ஒன்றை இழந்த துக்கத்தோடு நாட்களை நகர்த்தி வருகிறார்கள், அந்த துரதிர்ஷ்டமான பெற்றோர்கள்.
”அவன் ஃபிரண்டோட அக்காவுக்கு கல்யாணம் என்றாலோ, வளைகாப்பு என்றாலோ, பிள்ளைப்பேறு என்றாலோ … அக்கா நியாபம் வந்துவிடும் அவனுக்கு. நம்ம அக்கா எப்போ திரும்பி வருவாள்?” என்று வாடிய முகத்தோடு அவன் கேட்கும் கேள்விக்கு எங்களால் விடை சொல்ல முடியாது” என்று சொல்லும்போதே, குரல் உடைகிறது அந்த துர்பாக்கிய தாய்க்கு.
“என் வயித்துல பத்து மாசம் பெத்து எடுத்த என் சொந்த பொண்ணுதாங்க அவ. எங்களுக்கு சொந்த ஊரு திருவண்ணாமலை மாவட்டம். சென்னைக்கு பிழைக்க வந்தோம். வீட்டுக்காரு கடைநிலை அரசு ஊழியர். ரொம்ப வசதியானவங்களாம் இல்ல. ஆனாலும், பிள்ளைகளை எப்படியாவது படிக்க வச்சிறனும்னு டிகிரி வரைக்கும் படிக்க வச்சோம். நம்மதான் அடிமட்ட ஊழியரா அரசாங்க உத்தியோகம் பாக்குறோம். பிள்ளைகள எப்படியாச்சும் ஒரு அதிகாரியா உசத்திரனும்னு அவருக்கு அவ்ளோ ஆசை. எல்லாத்திலயும் மண்ணள்ளி போட்டுட்டு போயிட்டா”
“என் பொண்ண கான்வெண்ட்ல படிக்க வச்சேன் பாருங்க அதுதாங்க நான் பன்னுன தப்பு. நல்லா படிப்பாங்க என் பொண்ணு. ஸ்கூல் ஃபர்ஸ்டுதான் வருவா. அவளுக்கு நான் படிப்ப கொடுத்திட்டேன். இப்பவும் கெட்டுப்போகல, அவள எவ்வளவு வேணாலும் படிக்க சொல்லுங்க. எவ்வளவு செலவானாலும் நான் அனுப்புறேனு சொல்லுங்க. உங்களை கையெடுத்து கும்பிடுறேன். எப்படியாச்சும் என் மகளை எங்ககிட்ட கொண்டு வந்து சேர்த்துருங்க.” னு நா தழுதழுத்து அவர் பேசும்போதே, மொத்த சோகமும் நம்மை அப்பிக்கொள்கிறது.
அந்த பாசக்கார பெண் பிள்ளையின் பெயர் கிரிஜா. வயது 28. சென்னையில் பெற்றோர்களுடன் தங்கி பள்ளிப் படிப்பை முடித்தவள், இளங்கலை அக்ரி படிப்பிற்காக திருவண்ணாமலை கல்லூரியில் சேர்கிறாள். அங்கே பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார். இந்திய மாணவர் சங்கமும் மாதர் சங்கமும் களத்தில் இறங்க, சர்ச்சைக்குள்ளான பேராசிரியரும் குற்றச்சாட்டை முன்வைத்த கிரிஜாவும் வெவ்வேறு கல்லூரிக்கு மாற்றப்படுகிறார்கள்.
திருவண்ணாமலையில் விட்ட படிப்பை, திருச்சி இலால்குடி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை பொறியியல் கல்லூரியில் தொடர்கிறாள் கிரிஜா. மகளுக்கு ஆதரவாக, அறை எடுத்துக் கொடுத்து பாதுகாப்புக்கு தாயும் உடனிருந்து கவனித்துக் கொள்கிறாள். இவையெல்லாம் சிலகாலம்தான்.
“காலேஜூக்கு போனதிலிருந்தே அவ போக்கு மாறிடுச்சு. அம்மாவ ஊருக்கு அனுப்பிட்டா. ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறேனு சொல்லிட்டா. சரி அவ விருப்பம்னு விட்டோம். இப்ப எங்க பொண்ணே இல்லைனு ஆயிடுச்சு.” என்கிறார், கிரிஜாவின் தந்தை.
அந்த கிரிஜா யாரென்று ஊகிக்க முடிகிறதா, உங்களால்? ஆம். அதே கிரிஜாவேதான். கடந்த ஆண்டு காதலித்து கரம் பிடித்த மாமன் மகன் தன்னை கைவிட்டுச் சென்றுவிட்டான் என்றும் தனது அந்தரங்க புகைப்படங்களையும் வீடியோவையும் காட்டி மிரட்டி வருகிறான் என்றும் நள்ளிரவில் புகார் கொடுக்கச் சென்று பரபரப்பை ஏற்படுத்திய அதே கிரிஜாதான். புகார் கொடுக்க சென்ற இடத்தில், புகாரை விசாரிப்பதுபோல அணுசரனையாக பேசி பின்னர் மெல்ல ஆபாச உரையாடலை தொடர்ந்தார் என்று திருச்சி காந்தி மார்க்கெட் ஆய்வாளர் சுகுமாறன் மீது பாலியல் குற்றச்சாட்டை பகிரங்கமாக முன்வைத்த அதே கிரிஜாதான்.
கடந்த வாரத்தில், திருச்சியில் போக்குவரத்து போலீசாரிடம் தகராறு செய்தார், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தார் என்ற குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டும்; கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட போது, பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார் ஒருவரின் சட்டையைப் பிடித்து இழுத்து தகராறு செய்ததற்காக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் அதே கிரிஜா வின் கதை தான் முன் சொன்னவையெல்லாம்.
என்ன நடந்தது?
திருச்சி நெம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் சரக்கு வாகனம் ஒன்று காஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியிருக்கிறது. வாகனத்தில் இருந்த சிலிண்டர் ரோட்டில் உருண்டோடியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருக்கிறது. அந்த வழியே சென்ற கிரிஜா அதனை செல்போனில் வீடியோ எடுக்கிறார். கூடவே, போக்குவரத்து போலீசாரையும் வார்த்தைகளால் வறுத்தெடுக்கிறார். தான் ஒரு ரிப்போர்ட்டர் என்கிறார். வழக்கறிஞர் என்கிறார். எஸ்.பி. உள்ளிட்டு ஒட்டுமொத்த போலீசையும் ஒருமையில் பேசுகிறார். வரம்பு மீறிய அட்ராசிட்டிக்காகத்தான் அந்தக் கைது நடவடிக்கை. ஆனாலும், அசரவில்லை, கிரிஜா. மருத்துவ பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் ஆஜர் படுத்தியபோது, அங்கிருந்த மருத்துவர்களிடமும் செவிலியர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பாதுகாப்புக்கு உடன் சென்ற பெண் போலீசின் சட்டையைப்பிடித்து வம்பு பன்னுகிறார். ஒரு வழியாக வழக்கைப்போட்டு சிறையில் தள்ளியிருக்கிறார்கள் திருச்சி மாவட்ட போலீசார்.
போகுமிடமெல்லாம் பஞ்சாயத்துதான் !
ஒன்று இரண்டல்ல. பெற்றோரை விட்டு பிரிந்து வந்து நண்பர்களுடன் தங்கியிருந்த கடந்த மூன்று ஆண்டுகளில் இதுபோல நூற்றுக்கணக்கான சம்பவங்களை அடுக்க முடியும். திருச்சியில் கிரிஜாவை பற்றி தெரியாத போலீசு ஸ்டேஷன் எதுவும் இல்லை என்று சொல்லுமளவுக்கு அத்தனையும் அட்ராசிட்டி ரகமானவைதான். ஆனாலும், கிரிஜாவுக்கு எதிராக யாரும் துணிந்து புகார் கொடுத்துவிடவும் முடியாது.
மீறி கொடுத்தாலும், ஸ்டேஷனுக்கு வரும் மற்ற புகார்களைப்போல அவ்வளவு எளிதாக போலீசார் விசாரித்து தீர்வு கண்டுவிடவும் முடியாது. கிரிஜாவை கண்டாலே, கிலி கொண்டு பம்மிவிடுவார்கள் போலீசார்கள். வேறு என்ன? “நம்ம மேலயும் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துவிடுவாரோ” என்ற அச்சம்தான் காரணம்.
ஒருநாள் நள்ளிரவில் வெங்கடேசன் என்ற அவரது நண்பருடன் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தை வலம் வருகிறார். ரோட்டோர கடை ஒன்றில் வறுகடலை வாங்குகிறார். வாயில் போட்டபடியே நகர்கிறார். கொஞ்ச நேரத்தில், சொத்தைக் கடலை ஒன்று அவரது நாவை கெடுத்துவிடுகிறது. அவ்வளவுதான், வறுகடலை வியாபாரியை வார்த்தைகளால் வறுத்தெடுக்கிறார். நூறுக்கு போன் செய்கிறார். போலீசும் மெனக்கெட்டு விசாரணை நடத்தி அனுப்பி வைக்கிறார்கள்.
ஆனாலும், “இப்போது மணி அதிகாலை மூன்று. தரமான உணவு பொருளை விற்காத வியாபாரியை தட்டிக் கேட்டதற்காக, என்னுடன் வந்த பத்திரிகை “நிபுணரான” இவரை ஸ்டேஷனில் வைத்து அவமரியாதை செய்து அனுப்பியிருக்கிறார்கள்” என்று அங்கிருந்தபடியே லைவ் வீடியோ போடுகிறார்.
ஆசிரியராக பணியாற்ற சொல்லிவிட்டு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார்கள் என்று திருச்சி பொன்மலை போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை நீட்டுகிறார். அதே பகுதியில் இயங்கிவரும் பாரம்பரியமான பள்ளி ஒன்றின் நிர்வாகத்தை அழைத்து என்ன ஏதென்று விசாரிக்கிறார்கள் போலீசார். “அந்த பொண்ணு வேலை கேட்டு வந்துச்சு. நாங்களும் சரி பாடம் நடத்து. உன்னோட ஃபெர்மாமன்ஸ் வச்சிதான் வேலை தர முடியும்னு சொல்லி பாடம் எடுக்க சொன்னோம். மூனு நாள் பாடம் எல்லாம் நல்லாதான் நடத்துனாங்க. ஆனால், அந்த மூனு நாளுக்குள்ளேயே அவங்களோட நடவடிக்கைகள் எங்களுக்கு பிடிக்கல. அதனால இனி வரவேண்டாம்னு சொல்லிட்டோம். அதுக்குனு மூனு நாள் பாடம் எடுத்ததுக்கு எட்டாயிரம் ரூபாய் சம்பளம் கொடுனு மிரட்டுனா எப்படி?” என்று கதறியிருக்கிறார்கள், அந்த பள்ளி நிர்வாகத்தினர். அதன்பிறகு, இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடந்த போதிலும், பஞ்சாயத்து இன்னும் தீர்ந்தபாடில்லை. கிரிஜா கொடுத்த பெட்டிசன் பெண்டிங்கில்தான் இருக்கிறது.
ஆசையாய் சேர்ந்த அக்ரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு, 12-ஆம் வகுப்பு கல்வித்தகுதியின் அடிப்படையில் திருச்சி சட்டக்கல்லூரியில் ஐந்தாண்டு சட்டப்படிப்பில் சேர்கிறார் கிரிஜா. கல்லூரியில் அவர் காலெடுத்து வைத்து இரண்டு மாதங்கள்கூட முழுமை பெறவில்லை. ஆனாலும், மொத்த கல்லூரியும் கிரிஜாவை கண்டு கதி கலங்கிக் கிடக்கிறது. எப்போது, யார் மீது எந்த அஸ்திரத்தை எடுத்து வீசுவார் என்று? அன்றொருநாள் அப்படித்தான். கல்லூரியில் கலைவிழா. நாட்டியமாடியிருக்கிறார் கிரிஜா.
விழா முடிந்து எல்லோரும் கல்லூரி வளாகம் விட்டு சென்றுவிட, மாலை 6 மணி நெருங்கும் வரையில் கிரிஜாவும் அவரது தோழி ஒருத்தியும் வகுப்பறையிலே இருந்திருக்கின்றனர். கல்லூரி காவலர் ஒவ்வொரு வகுப்பறையாக சோதித்து கதவை தாழிட்டு வருகிறார். அவர்களிருவரையும் அந்த வகுப்பறையில் கண்ட அவர் சத்தம் போடுகிறார். ”மொத்த காலேஜே வீட்டுக்கு கிளம்பிருச்சி. ஆறு மணி வரைக்கும் நீங்க இங்க என்ன பன்னிட்டு இருக்கீங்கனு” கேட்டிருக்கிறார், அந்த காவலர்.
கிரிஜாவை பொறுத்தவரையில், அவர் மட்டுமே மற்றவர்களிடம் கேள்வி கேட்பார். மற்றவர்கள் அவரிடம் கேட்டுவிடக்கூடாது. அன்று நடந்த கூத்தும் அதேதான். முதல் வார்த்தையே மிகவும் கொச்சையான தடித்த வார்த்தைகளால், “எங்களுக்குத் தெரியும் நீ * போ” என்று அந்த காவலரை வசைபாடுகிறார் கிரிஜா. கல்லூரியில் மிகவும் சாந்தமானவர் என்று பெயரெடுத்த முன்னாள் இராணுவ வீரரான அந்த காவலரை அந்த வார்த்தை கோபம் கொள்ள வைக்கிறது. பதிலுக்கு குரல் உயர்த்தி நியாயம் கேட்கிறார். கிரிஜாவின் செல்போன் வீடியோ ஆன் ஆகிறது. அந்த வீடியோ சகலருக்கும் தீயாய் பரவுகிறது. அதோடு விட்டாரா? முதல்வரிடம் புகார் கடிதத்தையும் நீட்டுகிறார். பத்து பைசா பிரயோஜனம் இல்லாத இந்த விவகாரத்துக்கு கல்லூரி தரப்பில் விசாரணை நடத்த வேண்டிய கொடுமை.
பாலக்கரையில் அவர் தங்கியிருக்கும் வீட்டு உரிமையாளருடனும் பஞ்சாயத்துதான். முன்பின் அறிமுகம் இல்லாத ஆண், பெண் பலரும் வந்து போகிறார்கள். வீட்டை காலி செய்துகொள் என்கிறார் வீட்டின் உரிமையாளர். அவரிடமும் லா பாயிண்டுகளை அள்ளிவீசி முடிந்ததை பார் என்றிருக்கிறார், கிரிஜா. தனக்கு தெரிந்த நண்பரும் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரின் உதவியை நாடுகிறார் அந்த வீட்டின் உரிமையாளர். ”எப்படியாவது அந்த பெண்ணை வீட்டை விட்டு காலி பண்ண வச்சிருங்க. எவ்வளவு பணம் வேணும்னாலும் தாரேன்” என்கிறார். “நீ பத்து லட்சம் தந்தாலும் என்னால முடியாது. ஆளை விடுடா சாமி”னு எஸ்கேப் ஆகிவிடுகிறார் அவர்.
திருவண்ணாமலையில் தொடங்குகிறது வழக்கு. திருச்சி வரையில் கிரிஜா மீது பல்வேறு வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. இந்த எண்ணிக்கையை காட்டிலும் பல பத்து மடங்கு இருக்கும் இவர் அரசு அதிகாரிகளுக்கு எதிராகவும், போலீசுக்கு எதிராகவும் கொடுத்திருக்கும் புகார்களின் எண்ணிக்கை.
அட இதையெல்லாம் விட கொடுமையானது. பெற்றோர்களையே போலீசு ஸ்டேஷனில் நிறுத்தியதுதான். கல்வி சான்றிதழ்களை தரமறுக்கிறார்கள் என்று சொல்லி, சென்னை போலீசில் பெற்றோருக்கு எதிராகவே புகார் கொடுக்கிறார் கிரிஜா. போலீசார் சமரசம் பேசுகிறார்கள். சர்டிபிகேட்டை வாங்கி தர முடியுமா? முடியாதா? இல்லைன்னே கமிஷனர் ஆபிசில் போய் உட்காருவேன் என்கிறார் கிரிஜா. அந்த பஞ்சாயத்தில்தான், நீ எனக்கு பிள்ளையும் இல்லை. நான் உனக்கு மகளும் இல்லை என்று இருதரப்பிலும் எழுதி கொடுத்திருக்கிறார்கள்.
”அவளோட சேர்மானம் சரியில்லை. திருச்சிக்கு போனதுக்கு அப்புறம்தான் இவ்வளவு மாற்றமும். பெத்தவங்க நாங்க இருக்கோம். திருச்சியில இருந்து பத்திரிகைகாரன்னு வெங்கடேசன், செந்தில்னு ரெண்டு பேரும்தான் எம் பொண்ணுக்கு சப்போர்ட்டா வந்தாங்க. என் பொண்ணு வாழ்க்கை சீரழிஞ்சதுக்கு அவங்க ரெண்டு பேருதான் காரணம். அதுல செந்திலுங்கிறவன் பைக் திருடன்னு சொல்றாங்க. வெங்கடேசன் பத்திரிகை காரனு சொல்லிகிட்டு இருக்க போலீசு அதிகாரிங்க, அரசு அதிகாரிங்களை மிரட்டி காசு வாங்குறதா சொல்றாங்க. எங்கிருந்தோ காசு பணம் வருதுனு எம் பொண்ணும் அவனுங்க கூட சுத்திகிட்டு இருக்கா. அவனுங்க ரெண்டு பேரோட ஆதரவு இல்லைன்னா, கண்டிப்பா எங்க பொண்ணு எங்ககிட்ட திரும்பி வந்துருவா.” என்கிறார், கிரிஜாவின் தந்தை.
போலீசு வட்டாரத்திலும் இதே கதையைத்தான் அச்சுப்பிசகாமல் சொல்கிறார்கள். கிரிஜாவுக்கு ஆதரவாக இரண்டு மூன்று வழக்கறிஞர்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். அவர் எப்போதும் வழக்கில் சிக்கினாலும் அவர்கள்தான் ஆதரவுக்கரம் நீட்டிவருவதாகவும், அவர்கள் வழங்கும் தைரியமும் கிரிஜாவுக்கு கிரீடம் வைத்தது போல் ஆகிவிடுகிறது என்கிறார்கள். சிறியதும் பெரியதுமாக பல தகராறுகள் எஃப்.ஐ.ஆர். ஆகாமலேயே முடித்து வைக்கப்பட்டிருக்கின்றன. ”லெமன் பகார்டி”தான் அவளது விருப்பமான சரக்கின் பெயர் என்பதாக குறிப்பிடுகிறது, போலீசின் விசாரணை அறிக்கை ஒன்று.
நரகலின் மீது கல்லெறிந்தால் நமக்குத்தான் அசிங்கம் என்ற பழமொழிக்கேற்ப, கிரிஜாவை கண்டாலே ஒதுங்கித்தான் போயிருக்கிறார்கள் போலீசார் பலரும். இந்தமுறை அவரது கெடுவாய்ப்பு. திருச்சி எஸ்.பி.வருண்குமாரிடம் வகையாய் சிக்கிக்கொண்டார். நடைபெற்ற சம்பவம் குறித்த தகவல் அவருக்கு சென்று சேர்ந்த உடனே, துணிந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறார், எஸ்.பி.வருண்குமார்.
”கூடா நட்பு கேடாய் முடியும்” என்ற பொன்மொழிக்கு பொருத்தமான உதாரணமாகிவிட்டார் கிரிஜா. கிரிஜாவின் லீலைகளை, அவரது அட்ராசிட்டிகளை, பாலியல் குற்றச்சாட்டுகளை கிசுகிசு பாணியில் பேசுவதல்ல பிரச்சினை. அல்லது, அவற்றுக்கெல்லாம் உரிய தண்டனையை அவருக்குப் பெற்றுத்தரவேண்டும் என்பதுமல்ல நமது வாதம்.
அழகான குடும்பத்தைவிட்டு, கிரிஜா வழிதவறி சென்ற தருணம் எது? தீய வழி நடத்திய நண்பர்களின் பின்னணி என்ன? பெற்றோர்களை விடவும் அவருக்கு ஆதரவாக சிலர் நிற்பதற்கு பின்னுள்ள விவகாரங்கள் என்ன? அவர்களால் கிரிஜாவுக்கு என்ன ஆதாயம்? அல்லது கிரிஜாவால் அவர்களுக்கு என்ன ஆதாயம்? இவையெல்லாம் கிரிஜா விவகாரத்தில் விடை தெரியாமல் நீளும் மர்மங்கள். இந்த மர்மங்கள் போலீசாரின் புலன்விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
சிறையிலடைக்கப்பட்டிருக்கும் கிரிஜாவை பிடித்தாட்டும் பித்து தெளியும் வரையில், அரசின் கண்காணிப்பில் அரசு காப்பகம் ஒன்றில் பாதுகாப்பாய் தங்க வைக்கப்பட வேண்டும். அவருக்கு உரிய உளவியல் கவுன்சிலிங் வழங்கப்பட வேண்டும். மனம் திருந்தி பெற்றோருடன் சேர்வதற்கான வாய்ப்புகளை அந்தப் பெண்ணுக்கு ஏற்படுத்தித் தரவேண்டும்.
கிரிஜாவின் தனிப்பட்ட விவகாரமாக மட்டுமே அணுகினால், சுவாரஸ்யமான கதையாடலாக கடந்து போகும். கட்டற்ற பெண் சுதந்திரம் என்ற வாதமும் போதைப்பழக்கமும் கூடா நட்பும்தான் கிரிஜாவை குற்றவாளியாக சமூகத்தின் முன் நிறுத்தியிருக்கிறது.
பெண் ஏன் அடிமையானாள்? என்ற கேள்வியெழுப்பி பெண் சுதந்திரத்திற்காக குரல் கொடுத்த பெரியாரின் பிறந்தநாள் அன்றுதான், பெரியார் விரும்பிய பெண் சுதந்திரத்திற்கு முற்றிலும் நேர் எதிரான எதிர்மறை முன்னுதாரணமாக கிரிஜா கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார், என்பது முரண்நகைதான்.
இளங்கதிர்.