தீபாவளி வசூல் வேட்டையில் வகையாய் சிக்கிய திருச்சி தீயணைப்புத்துறை அதிகாரிகள் !
பொதுவாகவே பல்வேறு விதமான அரசின் நிர்வாக நடவடிக்கைகளுக்காக, இலஞ்சம் பெறுவது தவிர்க்கவியலாத ஒன்றாக மாறிவிட்ட நிலையில், தீபாவளி போன்ற பண்டிகை நேரங்களில் இலக்கு வைத்து வசூல் வேட்டை நடத்தப்படுவதும் வழக்கத்தில் இருந்து வருகிறது.
தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தற்காலிக பட்டாசு கடைகளை அமைப்பதற்கு, தீயணைப்புத்துறையினரின் தடையில்லா சான்று பெறுவது கட்டாயம். குறுகிய கால வியாபாரமாக இருந்தாலும் கணிசமான அளவு இலாபத்தை பார்த்துவிடலாம் என்பதால், பலரும் போட்டி போட்டுக்கொண்டு தற்காலிக தீபாவளி பட்டாசு கடைகளை தொடங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்புத்துறையினர் இதுபோல பட்டாசு கடைகளுக்கான அனுமதி வழங்குவதற்காக இலஞ்சம் பெறுவது தொடங்கி, தீபாவளி இனாமாக பல்வேறு நிறுவனங்களிடமிருந்து வசூலில் ஈடுபட்டு வருவதாகவும் இலஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு கிடைத்து ரகசிய தகவலையடுத்து, திருச்சி மாவட்ட இலஞ்ச ஒழிப்புப் போலீசு டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனையை மேற்கொண்டனர்.
போலீசாரின் அதிரடி சோதனையில், கணக்கில் வராத ரூ.97,000 ரொக்கத்தை பறிமுதல் செய்திருக்கிறார்கள். மாவட்ட தீயணைப்புத்துறை அதிகார் ஜெகதீஸ் என்வரின் ஜீப்பிலிருந்து மட்டும் ரூ.87,000-த்தை கைப்பற்றியிருக்கின்றனர். அலுவலகத்திலிருந்து பத்தாயிரத்தை கைப்பற்றியிருக்கின்றனர்.
குடும்பத்தோடு குதூகலமாக தீபாவளியை கொண்டாடுவதற்குப் பதிலாக, இலஞ்சத்துக்கு ஆசைப்பட்டு நிம்மதியை இழந்து தவிக்கிறார்கள், புகாரில் சிக்கிய தீயணைப்புத்துறை போலீசார்கள்.
– அங்குசம் செய்திப்பிரிவு.