திருச்சி KNR PLOTS நிறுவனத்தில் பணம் போட்டு ஏமாந்தவரா ? புகார் அளிக்க மீண்டும் ஒரு வாயப்பு !
திருச்சியில் KNR PLOTS என்ற பெயரில் இயங்கி வந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக்கிடைக்காமல் ஏமாந்தவர்கள் யாரேனும் இருந்தால், திருச்சி மன்னார்புரத்தில் இயங்கிவரும் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி புகார் அளிக்கலாம் என்பதாக போலீசார் அறிவித்திருக்கிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக eow போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”திருச்சி கே.கே.நகர், சுந்தர் நகர், எண்:9/5, உதயம் காம்ப்ளக்ஸில் KNR PLOTS என்ற பெயரில் இயங்கி வந்த நிறுவனத்தில் உரிமையாளராக இருந்த எதிரி 1. முருகன் மற்றும் மேனேஜர் எம்.குமார் ஆகியோர்கள் அதன் நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் 3 மடங்கு தொகை திருப்பித் தருவதாகவும்,
இந்த இடைப்பட்ட காலத்தில் மாதம் தோறும் முதிர்வுத்தொகை ரூ ஒரு லட்சத்துக்கு மாதம் தலா மூவாயிரம் மற்றும் அதன் பின்னிட்டு முதலீடு செய்யும் ஒவ்வொரு ஒரு இலட்சத்திற்கும் மாதம் தலா ஐயாயிரம் வீதம் தருவதாகவும் கவர்ச்சிகரமான பல திட்டங்கள் இருப்பதாக ஆசைவார்த்தைகள் கூறியதாகவும், அவர் அந்த தொகையை திருப்பித் தராமலும் ஏமாற்றி வந்துள்ளதாகவும் நிறுவனத்தை நடத்திய எதிரி 1. முருகன் மற்றும் மேனேஜர் குமார் ஆகியோர்கள் மீது குற்ற எண்:2/2023 இன்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த வழக்கில் புலன்விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால் மேற்படி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் எவரேனும் இருந்தால் அசல் ஆவணங்களுடன் திருச்சி மன்னார்புரத்தில் இயங்கிவரும் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசில் நேரில் ஆஜராகி புகார் கொடுக்கலாம்.” என்பதாக அறிவித்திருக்கிறார்கள். மேலும், தகவல்களுக்கு திருச்சி மாவட்ட eow அலுவலக தொலைபேசி எண் 0431 – 2422020 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
– அங்குசம் செய்திப்பிரிவு.