சூடுபிடிக்குது திருச்சி எம்பி தொகுதி: வாரிசு அரசியலுக்கு ஆப்பு வைக்க வரிந்துகட்டி களமிறங்கும் பாஜக!
சூடுபிடிக்குது திருச்சி எம்பி தொகுதி: வாரிசு அரசியலுக்கு ஆப்பு வைக்க வரிந்துகட்டி களமிறங்கும் பாஜக!
நடாளுமன்ற மக்களவைக்குத் தேர்தல் நடைபெற இன்னும் சரியாக ஓராண்டு உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தங்களைத் தயார்படுத்தி வருகின்றன. அதன் முதல் கட்டமாகக் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. புதிய அணிகள் உருவாவதும், கூட்டணியிலிருந்து விலகி புதிய கூட்டணியில் இணைவது போன்ற சுவாரஸ்ய செய்திகளுக்கு இனி பஞ்சமிருக்காது.
2022ம் ஆண்டு ஜனவரியில் பாஜக 2024ம் ஆண்டுக்கான தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டது என்பதை நம்மால் நம்பமுடியாது என்றாலும் உண்மை அதுதான். பாஜக தேசிய தலைமை தமிழக நாடாளுமன்ற தேர்தல் உத்தியாக அரசியல் தலைவர்களின் வாரிசுகள் போட்டியிடும் தொகுதிகளில் கடும்போட்டியை உருவாக்குவது, வாரிசு அரசியலுக்கு எதிராக தொடர் பிரசாரம் செய்து வெற்றியை ஈட்டுவது என்பதை வரையறுத்தது.
முதன்மை குறிக்கோள்
அதன்படி சென்னையில் தயாநிதி மாறன் (முரசொலி மாறன்), கலாநிதி (ஆற்காடு வீராசாமி), தமிழச்சி (தங்கபாண்டியன்), அசோக் சிகாமணி (பொன்முடி), ஆனந்த் (துரை முருகன்), கார்த்திக் (ப.சிதம்பரம்) போன்ற அரசியல் வாரிசுகளைத் தோற்கடிப்பது பாஜகவின் முதன் மை குறிக்கோள். ஆட்சி, அதிகார பலம், பண பலம் கொண்டுள்ள ஆளும்கட்சியைத் தோற்கடிக்க இந்தத் தொகுதிகளில் பாஜக சார்பில் பணபலம் கொண்ட சமூகநல ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் இவர்களை அணுகி, பாஜகவில் போட்டியிட வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதில் பலரும் பாஜகவின் வேண்டுகோளை ஏற்று போட்டியிட முன்வந்துள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.
தீவிர பிரச்சாரம்
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற ஒரு பிரசாரம் வெகு தீவிரமாக செய்யப்பட்டு வருவதால் அரசியல் பாதையில் தங்களை வளர்த்துக்கொள்ள நினைக்கும் முக்கிய பிரமுகர்கள் பலரும் பாஜகவில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ள தயாராகி வருகிறார்கள். அந்த வரிசையில் திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபரான எம்.முருகானந்தம் என்பவர் தன்னை பாஜகவில் இணைத்துக்கொள்ள ஆயத்தமாகி வருகிறார் எனக் கூறப்படுகிறது.
திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் அக்கட்சியின் தலைமைக் கழகச் செயலாளர் துரைவைகோ போட்டியிடுவார் என்ற செய்தி கிடைத்துள்ளது. அதே நேரத்தில் அதிமுக கட்சியை பொருத்த வரையும் தொடர்ச்சியாக மா.செ. குமார் இரண்டு முறை வெற்றிபெற்றதும் தற்போது மாநில அரசியலில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டதால் போன முறை தேமுதிக கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினர். கூட்டணி கட்சிகள் எல்லாம் விலகிய நிலையில் பிஜேபி சார்பில் வேட்பாளர் தேர்வு செய்யும் படலம் முடிந்து விட்டதாகவும், அதற்கான ஆயத்த பணிகள் எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது என்கிற தகவல் கசிய ஆரம்பித்துள்ளது.
இதனால் திமுக கூட்டணி சார்பில் மதிமுக துரைவைகோவை எதிர்த்து பாஜகவின் சார்பில் தொழில் அதிபர் மற்றும் சமூக நல ஆர்வலர் எம்.முருகானந்தம் போட்டியிடுவார் என்ற நம்பகமான செய்தி அங்குசம் செய்தி இதழுக்குக் கிடைத்துள்ளது.
அண்ணாமலையுடன் சந்திப்பு
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை, முருகானந்தம் சந்தித்து பேசியுள்ளார் என்ற கூடுதல் செய்தியும் அங்குசம் செய்தி இதழுக்கு கிடைத்துள்ளது. தூய்மை அரசியலை முன்னெடுத்தும், ரோட்டரி முன்னாள் ஆளுநர் 2016-&17, எக்ஸல் குழுமத்தின் நிறுவனர், மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் எம்.முருகானந்தத்திற்கு உழைப்பாளர் தினத்தன்று சி பார்க் சென்னை என்ஜிஓ நிறுவனம் “உழைப்பால் உயர்ந்தவர்” என்று பட்டம் வழங்கி கௌரவித்தது.
14,000 வாக்குகள் பெற்றார்
2021ம் ஆண்டு மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் முருகானந்தம் திருவெறும்பூர் எம்எல்ஏ தொகுதியில் போட்டியிட்டு சுமார் 14,000க்கும் மேலாக வாக்குகளைப் பெற்றார். தோல்வியடைந்தாலும், அவர் பெற்ற வாக்குகள் அனைத்தும் முருகானந்தம் திட்டமிட்டு செய்த தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிடைத்த வெற்றியாகவே அரசியல் பார்வையாளர்கள் கணித்தனர்.
தாயின் நினைவு நாளில் நலஉதவி
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் முருகானந்தத்தின் தாய் மரகதவல்லி நினைவு நாள் பெரிய விழாவாக நடத்தப்பட்டது. அதில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு முருகானந்தம் வழங்கினார். பல்வேறு துறைகளில் ஆளுமை பெற்ற சமூகநல ஆர்வலர்களுக்கும் வழங்கினார். அவ்விழாவில் தன் தாயின் பெயரில் ரூ.60 கோடி மதிப்பில் புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. திருச்சி மக்கள் முருகானந்தத்தின் இந்த அறப்பணியைப் போற்றி பாராட் டினர் என்பதற்கு ஆயிரக்கணக்கில் மரகதவல்லி நினைவு நாளில் கூடியிருந்து கூட்டமே சாட்சியாக அமைந்திருந்து.
2 முறை வென்ற பாஜக
திருச்சி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தொழில் அதிபர் எம்.முருகானந்தம் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில், அவர் வெற்றியின் எல்லைக் கோட்டை தொட்டுவிடுவார் என்றே எண்ணத் தோன்றுகின்றது. காரணம், திருச்சியில் 2 முறை பாஜகவின் சார்பில் அரங்கராஜன் குமாரமங்கலம் வெற்றி பெற்றிருக்கிறார். இணைமந்திரியாகவும் செயல்பட்டார். மேலும் பாஜக மற்றும் அதிமுகவிற்கான வலுவான வாக்கு வங்கியுள்ளது.
மண்ணின் மைந்தர்
திமுக கூட்டணி சார்பில் துரைவைகோ போட்டியிட்டால், பாஜக சார்பில் வாரிசு அரசியல் ஒழிக்கப்பட வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைக்கும். முருகானந்தம் திருச்சி மண்ணின் மைந்தர் என்ற முழக்கத்தையும் சேர்த்து முன்வைக்கும். திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், புதுக்கோட்டை, கந்தவர்கோட்டை என்ற 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. வலுவான திமுக கூட்டணியை எதிர்கொள்வதில் அதிமுக-பாஜக கூட்டணிக்குச் சிக்கல் இருந்தாலும், அந்தச் சிக்கல்களைத் தன் தேர்தல் வியூங்களாலும், திட்டமிட்ட பிரச்சாரத்தாலும் MMM முருகானந்தம் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் வாய்ப்புள்ளதாகவே பிஜேபிஅரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அரசியல் கணக்கு இப்படியிருக்க….. காலத்தின் கணக்கு எப்படியிருக்கும் என்பதை விரைவில் அறிவிக்கும். காத்திருப்போம்!
-ஆதவன்
செய்திகள் அருமையாக உள்ளது