சீனியர் அமைச்சரை சந்தித்த தொழிலதிபர் ! பின்னணி இதுதானா ?
சீனியர் அமைச்சரை சந்தித்த தொழிலதிபர் ! பின்னணி இதுதானா ?
ரோட்டரி இன்டர்நேஷனல் நிர்வாக இயக்குநர்களுள் ஒருவரும் திருச்சியை சேர்ந்த தொழிலதிபருமான MMM முருகானந்தம், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவை, தீபாவளி பண்டிகை காலத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரை நாளொன்றுக்கு நூறு பேருக்கும் குறையாமல், சந்தித்து சால்வை அணிவிக்கிறார்கள். அதுபோல, பத்தோடு பதினொன்றாக நடைபெற்ற சந்திப்பாக இதை எளிதில் கடந்துவிட முடியாது என்றே கணிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
“நான் பிறந்து வளர்ந்த ஊரில், நான் படித்த அதே பள்ளியில் ஓட்டுப் போடும் வாய்ப்பைப் பெற்றவன். இன்னும் சொல்லப்போனால், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது அதே ஓட்டுச்சாவடியில் எனக்கான வாக்கை பதிவு செய்யும் வாய்ப்பைப் பெற்றவன். கண்டிப்பாக, எனது மண்ணில்தான் எனது போட்டி இருக்கும்.” என்பதாக மிக சமீபத்தில் நெகிழ்ச்சியோடு பதிவு செய்திருந்தார் MMM முருகானந்தம். இந்த பின்னணியில்தான் இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.

திருச்சியிலிருந்து கொச்சி, விளிஞ்சம், தூத்துக்குடி, சென்னை என எல்லாமே 300 கி.மீ. தூரத்திற்குள் அமைந்திருப்பதை குறிப்பிட்டு, கப்பல் போக்குவரத்துக்கு ஏற்ற மண் இது. மற்ற மாவட்டங்களைவிட இங்குதான் அதிகளவிலான தொழிற்சாலைகள் அமைந்திருக்கனும், என்றவர், இது நிறைவேறாம போனதுக்கு காரணம் சரியான தலைவர் இங்கிருந்து உருவாகவில்லை. அமைப்பு ரீதியாக இதனை யாரும் முன்னெடுக்கவில்லை.” என்பதாக தனது ஆதங்கத்தையும் பதிவு செய்திருந்தார்.
மிக முக்கியமாக, தன்னை உலகளவில் உயர்த்திய மண்ணுக்கு எந்த வகையிலாவது ஏதேனும் செய்துவிட வேண்டுமென்ற வேட்கையிலிருந்தே இந்த விருப்பத்தை முன்வைப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
சொந்த தொகுதியை சேர்ந்தவர், ஒரே சமூகத்தை சார்ந்தவர் என்பதால் இதுவரை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் நெருக்கம் காட்டி வந்தவர், திடீரென்று அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்ததன் பின்னணி என்ன என்பதுதான் பலரின் தூக்கத்தை தொந்தரவு செய்திருக்கிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதே, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கனவே, ஜெயித்த திருவெறும்பூர் தொகுதியை விட திருச்சி கிழக்கு தொகுதிக்குத்தான் குறி வைத்திருந்தார். கிறிஸ்தவ சிறுபான்மையினர் என்கிற அடையாளத்துடன், மேலிட சிபாரிசில் இனிகோ இருதயராஜ் அதை எளிதாக பெற்றுவிட, வேறு வழியின்றி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு மாறினார் என்கிறார்கள்.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நின்று வென்ற இனிகோ இருதயராஜும், இரண்டு அமைச்சர்களின் அரசியலை ஈடு கொடுத்து சமாளிக்க முடியல என தன்னை சந்திக்கவரும் அனைவரிடமும் வெளிப்படையாகவே புலம்பும் அளவுக்கு போனதாக குறைபட்டு கொள்கிறார்கள். மாவட்டத்தில் தன்னை யாரும் மதிப்பதில்லை என்ற வருத்தத்தையும் தலைமைக்கு தெரிவித்துவிட்டாராம், இனிகோ இருதயராஜ். அதன்பிறகே, “தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்திட்ட சிறப்புக்குழுவின் உறுப்பினர்” பதவியை கொடுத்து தொகுதிக்குள் முடங்கிக்கிடக்காமல், தமிழகத்தை வலம் வாருங்கள் என்று அனுப்பி வைத்திருக்கிறதாம் தலைமை. தளபதி சொல் பேச்சு தவறாமல், அவரும் சுற்றுப்பயணத்தை தொடங்கிவிட்டாராம்.
திருச்சி கிழக்கு தொகுதியை பொறுத்தமட்டில், சிறுபான்மையினர் நிறைந்த தொகுதியாக இருந்தாலும் . ஏற்கெனவே, இங்கு அன்பில் பெரியசாமி நின்று வென்றிருக்கிறார். திருவெறும்பூரில் நிறைந்திருக்கும் அதே சமூகத்தின் வாக்குகளை இங்கும் கவர்ந்துவிட முடியும் என்ற நம்பிக்கை தரும் தொகுதி. அந்த நம்பிக்கையில்தான், தற்போதைய திமுக நகர செயலர் மதிவாணனும் இதே தொகுதிக்கு மல்லுக்கு நிற்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
அதே நேரத்தில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் எம்.பி அடைக்கலராஜ் மகன் தொழில் அதிபர் ஜோசப் லூயிஸ் சீட்டு கொடுக்க வேண்டும் என்கிற குரல்களும் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஒலிக்க துவங்கியுள்ளது.

இனிகோ இருதயராஜுக்கு மீண்டும் சீட் கிடைத்தாலும், கண்டிப்பாக திருச்சி கிழக்கு தொகுதி இருக்காது என்று ஆரூடம் சொல்கிறார்கள்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் கட்சி ரீதியான கட்டுப்பாட்டில், மணப்பாறை, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிகள் இருக்கிறது. இதில், மணப்பாறையை பொருத்தமட்டில், தொடர்ச்சியாக கூட்டணி கட்சிகளுக்கானது என்ற முத்திரை குத்தப்பட்டு விட்டது. இல்லை என்றால் அந்தபகுதியில் அதிக அளவில் இருக்கும் கவுண்டர் லாபியை பொறுத்து அமையும்.
எஞ்சியிருப்பது, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர் இரண்டு தான். இந்த இரண்டில், திருவெறும்பூரிலிருந்து திருச்சி கிழக்குக்கு மாறுவதா? இல்லை, திருவெறும்பூரை குறிவைக்கும் MMM முருகானந்தத்தை சமாதானம் செய்து திருச்சி கிழக்குக்கு தள்ளிவிடுவதா? என்பதாக நகர்வுகள் நடந்து கொண்டிருக்கிறதாம். அந்த நகர்வுகளுக்கான அறிகுறிகளுள் ஒன்றுதான் மீசைக்காரருடன் நடைபெற்ற இந்த சந்திப்பு என்கிறார்கள், அரசியல் வட்டாரத்தில்.

எது எப்படியோ, MMM முருகானந்தத்தை பொறுத்தமட்டில் சொந்த மாவட்டத்தில் என்பதைவிட, சொந்த மண்ணில் அதுவும் தான் வளர்ந்த திருவெறும்பூர் தொகுதியில் வேட்பாளராக களம் காண வேண்டும் என்பதுதான் அவரது விருப்பமாக இதுவரை பதிவு செய்திருக்கிறார். தான் விரும்பும் கட்சி எந்தக்கட்சி என்பதை இதுவரை சூசகமாகக்கூட சொன்னதில்லை. மக்கள் நீதி மையத்திலிருந்து விலகும்போதுகூட, அதற்கான அரசியல் காரணங்களை, காத்திரமான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதில் மையமானது, கட்சித் தலைமையின் முதிர்ச்சியற்ற பக்குவமற்ற அணுகுமுறை.
MMM முருகானந்தம் வழக்கமான அரசியல்வாதியாக எப்போதும் காட்டிக் கொண்டதுமில்லை. அவருக்கான தனித்துவத்தை எப்போதும் விட்டுக் கொடுத்ததுமில்லை, என்கிறார்கள். இந்த பின்புலத்தில், அரசியல் முதிர்ச்சியோடு அவரை யார் அணுகப்போகிறார்கள்? யார் அவரை வென்றெடுக்கப்போகிறார்கள்? என்ற விவாதத்திற்கான பாதி விடையை இந்த சந்திப்பு தந்திருப்பதாகவே அரசியல் களத்தில் பேசிக்கொள்கிறார்கள்.
மித்ரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.