175 மீட்டர் வரை துல்லியமாக சுடும் இலகுரக துப்பாக்கிகள் ! திருச்சி ஓ.எஃப்.டி. தொழிலாளர்கள் அசத்தல் !
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே மத்திய அரசின் பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை (ஓ.எஃப்.டி.) செயல்பட்டு வருகிறது. உள்நாட்டிலேயே முழுக்க முழுக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளின் மூலம் டிரிக்கா (திருச்சி கார்பைன்ஸ்) வகை துப்பாக்கிகளை உருவாக்கியிருக்கிறார்கள். 3.5 கிலோ எடை கொண்ட இந்த துப்பாக்கிகளைப் பயன்படுத்தி 175 மீட்டர் வரை துல்லியமாக சுட முடியும். காலாட்படை போர்வீரர்கள், ஹெலிகாப்டர் மற்றும் பாராசூட் மூலம் தரையிறங்கும் வீரர்கள், விமானநிலைய பாதுகாப்பு படையினர் உள்பட உயர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் வீரர்கள் எளிதில் கையாளும் வகையில் இதனை வடிவமைத்திருக்கிறார்கள்.

முதற்கட்டமாக, 92 டிரிக்கா வகை துப்பாக்கிகளை கேரளா காவல்துறைக்கு வழங்கியிருக்கிறார்கள். தொழிற்சாலையின் நிர்வாக இயக்குநர் சஞ்சய்ஸ்ரீவஸ்தவா, பொதுமேலாளர்கள் குணசேகரன், கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலையில் கேரளாவைச் சேர்ந்த காவல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதனை தொடர்ந்து, அசாம் வனத் துறை மற்றும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடமிருந்தும் ஆர்டர்களை பெற்றிருக்கிறார்கள். திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் பணியாற்றும் அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த தொழிலாளர்களின் கூட்டுழைப்பில் உருவான டிரிக்கா வகை துப்பாக்கிகளுக்கு நாட்டின் பல்வேறு பாதுகாப்பு படைப்பிரிவினர்களிடையே வரவேற்பை பொற்றிருக்கிறது.
— அங்குசம் செய்திப்பிரிவு.