எஸ்.ஐ. உள்ளிட்டு நான்கு போலீசார் சஸ்பெண்ட் ! அதிரடி காட்டிய திருச்சி எஸ்.பி. ! கலக்கத்தில் போலீசார் !
எஸ்.ஐ. உள்ளிட்டு நான்கு போலீசார் சஸ்பெண்ட் ! அதிரடி காட்டிய திருச்சி எஸ்.பி. ! கலக்கத்தில் போலீசார் ! சட்டவிரோதமாக ஏர்கன்னை பயன்படுத்தி பறவைகளை வேட்டையாடியதற்காக வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க இலஞ்சம் வாங்கியதான குற்றச்சாட்டின் அடிப்படையில் எஸ்.ஐ. உள்ளிட்டு போலீசார் நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வழக்கான காவல்நிலைய பணிகளோடு, தனிச்சிறப்பான தேவைகளுக்காக எஸ்.பி.யின் தனிப்பட்ட மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்படுவது வழக்கமான நடைமுறை. இதன்படி, புத்தாநத்தம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் லியோனி ரஞ்சித்குமார் தலைமையில், வையம்பட்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் வீரபாண்டி (1667) மற்றும் ஷாகுல் ஹமீது (1787) மற்றும் மணப்பாறை காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர் மணிகண்டன் (1706) ஆகியோரை கொண்ட தனிப்படை செயல்பட்டு வந்தது.
கடந்த மே-09 ஆம் தேதியன்று வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னகோனார்பட்டியில் பணியில் இருந்த சமயத்தில், சட்டவிரோதமாக ஏர் கன் (Air Gun) ஒன்றினை வைத்துக்கொண்டு பறவைகளை வேட்டையாடிக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சதாசிவம், ராமசாமி, ஆகியோரைப் பிடித்து சம்பந்தபட்ட தனிப்படை போலீசார் விசாரித்திருக்கின்றனர்.
விசாரணையின் நிறைவில், மேற்கொண்டு வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் இருக்க வேண்டுமெனில், ஒரு இலட்சம் ரூபாய் இலஞ்சமாக கொடுக்க வேண்டுமெனவும் டீல் பேசியிருக்கின்றனர். தனிப்படை போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் சிக்கிய சதாசிவம் என்பவரின் உறவினர் விஜயகுமார் என்பவரிடமிருந்து அதே நாளில் வளநாடு கைகாட்டியில் உள்ள ஏரிக்கரைக்கு அருகில் வைத்து இலஞ்சப் பணத்தையும் பெற்றிருக்கின்றனர்.
பொதுவில், மாவட்டத்தின் பொறுப்பு அதிகாரியான எஸ்.பி.யை சாமானியர்கள் எளிதில் சந்தித்து எந்த ஒரு புகாரையும் தகவலையும் சொல்லிவிட முடியாது. கீழ்மட்ட போலீசாரின் வழியாகவே தகவல் சென்று சேரும். இந்நிலையில், பொதுமக்கள் யாரும் எந்நேரமும் எந்த தகவலையும் எஸ்.பி.யின் உதவி எண். (9487464651) ணில் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு திருச்சி மாவட்டத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது.
அவ்வாறு, எஸ்.பி.யின் உதவி எண்ணுக்கு மேற்படி தகவல் எஸ்.பி.வருண்குமாரின் கவனத்திற்கு சென்று சேர்ந்திருக்கிறது. அதனடிப்படையில், மேற்கண்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்)-ருக்கு உத்தரவிட்டிருந்தார்.
அவரது விசாரணையில் மேற்படி சம்பவம் உறுதியானதையடுத்து, சர்ச்சையில் சிக்கிய எஸ்.ஐ. உள்ளிட்ட போலீசார் நான்கு பேரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார் எஸ்.பி.வருண்குமார். மேலும், இதுபோன்ற குற்றசெயல்களில் ஈடுபடும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
அதிரடிக்கு பெயர்போன திருச்சி எஸ்.பி. வருண்குமாரின் இந்த நடவடிக்கையால், மாவட்ட முழுவதுமுள்ள போலீசார் மத்தியில் கலக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
– ஆதிரன்.