ஸ்ரீரங்கத்தின் ஏழு அதிசயங்கள் என்ன தெரியுமா ? ஆன்மீக பயணம்! புதிய தொடர் !
கடவுள் என்றாலே அனைவருக்கும் பொதுவானவர் தான். அதுல பிரிவினை வேறுபாடு ஏது? மதத்திற்கு ஏற்றார் போல் வழிபாட்டு முறைகள் தான் மாறுபடுமே தவிர கடவுள் ஒன்றுதான். இப்போ நாம, ஆன்மீகப் பயணத்துல பாக்க போற தெய்வம் நம்ம ஷாட் ஷாத் பெருமாள் தான். ஆமாங்க! அவரே தான். இப்போ வாழ்ந்துட்டு இருக்கிற இந்த கலியுகத்துல கலியுக கடவுளாகவே நமக்கு காட்சியளிப்பவர் இவர்தான்.

அதில் ஸ்ரீ ரங்கநாத ஸ்வாமியை பற்றி தான் பார்க்கப்போறோம். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மிகவும் பழமையானதும் பெரியதுமான வைணவ திருத்தலமாகும். இது திருச்சிராப்பள்ளி காவிரி ஆற்றில் நடுவே உள்ள ஒரு தீவு போல் அமைந்திருக்கிறது. இதன் ராஜகோபுரம் 72 மீட்டர் அதாவது 236 அடி உயரத்துடன் தென்னிந்தியாவிலேயே, பெரிய கோபுரமாக விளங்குகிறது. ராஜகோபுரம், பல மன்னர்களால் கட்ட முடியாத நிலையில், ஒரு 92 வயது பெரியவரால் கட்டி முடிக்கப்பட்டது ஒரு அதிசயமாகும். இந்த கோவில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது என்று சமய தமிழ் கூறுகிறது.

இக்கோவில் பல்வேறு சோழ, பாண்டிய மற்றும் விஜயநகர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டு இருக்கிறது. வைகுண்ட ஏகாதசி மார்கழி மாதத்தின் வளர்பிறை ஏகாதேசியானது, வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த விழா திருவரங்கத்தில் 21 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதனால் ஸ்ரீரங்கம் திருக்கோவில் பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் நாளில், ஸ்ரீரங்கத்திலிருந்து திருப்பதி ஸ்ரீ வெங்கட முடையானுக்கு வஸ்திரம் மரியாதை அனுப்பும் சிறப்பு வழக்கம் உள்ளது. இந்த வழக்கம், ஸ்ரீரங்கத்தில் படையெடுப்பு ஏற்பட்டபோது பெருமாள் திருப்பதியில் பாதுகாக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் நடைபெறுகிறது.
இந்தியாவிலேயே, ஸ்ரீரங்கம் கோவில்தான் 7 பிரகாரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி 21 கோபுரங்கள் உள்ளன. அதில் உள்ள கல்வெட்டுக்கள், சிற்பங்கள் அனைத்தையும் பார்ப்பதற்கு இரண்டு கண்கள் போதாது. அவ்வளவு அற்புதங்களும், அதிசயங்களும் நிறைந்த சிற்பங்கள். அவற்றில் சில ஐந்து குழி, மூன்று வாசல், 7 பிரகாரங்கள், திருப்பதிக்கு வஸ்திரம் கொண்டு செல்லுதல், ராஜகோபுரம் கட்டிய விதம் போன்றவற்றை குறிப்பிட்டிருக்கும்.
இந்த ஐந்து குழி, மூன்று வாசல் என்பது ஸ்ரீரங்கம் கோயிலில் தாயார் சன்னதிக்கு அருகே உள்ள ஐந்து புள்ளிகளில் ஐந்து விரல்களை விட்டு பார்க்கும் போது பரமபதம் தெரியும் என்று நம்பப்படுகிறது. இத்திருக்கோவிலில் ஏழு பிரகாரங்கள் உட்பட அனைத்துமே ஏழாக இருக்கின்றன. கோவிலின் மதில்கள் ஏழு, உற்சவம் ஏழு, திருவடிசேவை ஏழு. இது மட்டுமல்லாமல் ஸ்ரீதேவி, பூதேவி, துலுக்க நாச்சியார், சேர குல வள்ளி நாச்சியார், கமலவல்லி நாச்சியார், கோதை நாச்சியார், ரங்க நாச்சியார் என ஏழு தாயார்கள் ஆலயத்தில் உள்ளனர். எனவே, இந்த கோவிலில் அனைத்துமே ஏழு அதிசயங்கள் நிறைந்ததாக உள்ளன.

ரங்கநாதர் கோயிலுக்கு செல்லும் ஒவ்வொருவரும் முதலில், கோயிலின் பிரதான நுழைவு வாயிலில் உள்ள ராஜகோபுரத்தை வணங்கிவிட்டு, கோயிலுக்குள் செல்ல வேண்டும். கோயிலில் உள்ளே முதலில் தாயார் சன்னதியில் வழிபாடு செய்து பின் மூலவர் ரங்கநாதரை தரிசிக்க வேண்டும். கோயிலில் அமைதியாகவும் மனதில் பக்தி சிறத்தையுடனும் வழிபாடு செய்தால், ஸ்ரீரங்கநாதனின் முழு அருள் பெற்று உங்களின் குடும்பம் செழிப்பு மற்றும் மகிழ்ச்சி அடையும். நன்றி!
பா. பத்மாவதி.
ஆன்மீகப் பயணம் தொடரும்!
ஆசிரியர் பற்றி சிறு குறிப்பு :
என் பெயர் பத்மாவதி இல்லத்தரசியாக இருந்து கொண்டு என்னால், இயன்ற சில பணிகளை செய்து வருகிறேன். நான் என் சொந்த ஊரில் ஒரு மழலையர் பள்ளியில் ஆசிரியர் மற்றும் பகுதி நேர எடிட்டராக பணியாற்றிக் கொண்டு இருந்தேன். அங்கு பணிச்சுமை சற்று அதிகம் என்பதால் என்னால் என் முழு உழைப்பையும் கொடுக்க முடியவில்லை. உடலும் ஒத்துழைக்கவில்லை. இல்லத்தரசி என்றாலே, கணவன், பிள்ளைகள், வீட்டுப் பணி என்று எல்லா பெண்களைப் போலவே நானும் உழன்று வருபவள். அன்பான கணவரும், அவர் கொடுக்கும் அன்பினை இரண்டு மடங்காக பங்கிட்டு கொடுக்க இரு அன்பிற்கு உரித்தான குழந்தைகளுமாக இனிதான குடும்பம் என்னுடையது.
தற்சமயம், நான் சற்று இளைப்பாற சிறிது நாழிகை கிடைத்திருக்கிறது. இருப்பினும் இளைப்பாறும் மணித்துளிகளை வீணாக்க வேண்டாம் என்று ஒரு எண்ணம் எனக்குள். எழுத்துக்கள் மீதும் கற்பனைகள் மற்றும் ஆன்மீகம் மீதும் கொஞ்சம் ஆர்வம் கூடிப்போனது. சிறுவயது முதலே எழுத்தின் மீது பேரார்வம் எனக்கு. இதுவரை சரியான தளம் அமைந்ததில்லை. இதோ, அங்குசம் இதழ் தந்த வாய்ப்பில் உங்களோடு உரையாடலை தொடரவிருக்கிறேன். ஆன்மீகம், சமையல், பெண்ணியம் சார்ந்து தொடர்ந்து எழுத முனைகிறேன்.