அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தேர்தல் களம் 2026 : ஸ்ரீரங்கம் தொகுதி  ! ஒரு அலசல்  !

திருச்சியில் அடகு நகையை விற்க

தமிழகத்தின் நட்சத்திர அந்தஸ்து பெற்ற சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்று ஸ்ரீரங்கம் தொகுதி. கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக பொதுச்செயலர் செல்வி ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற தொகுதி. திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுள் இதுவும் ஒன்று.

இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த மொ.பழனியாண்டி இருந்து வருகிறார். தற்போது, திமுக வசம் இத்தொகுதி இருந்தாலும், கடந்த கால வரலாறுகள் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகவே இருந்திருக்கிறது. 1951 முதல் 2021 வரையில் ஒரு இடைத்தேர்தல் உள்ளிட்டு 17 முறை சட்டமன்றத் தேர்தலை இத்தொகுதி எதிர்கொண்டிருக்கிறது. இதில், அதிமுக 9 முறை வென்ற தொகுதி இது. இதற்கு அடுத்து, காங்கிஸ் கட்சி மூன்று முறையும், திமுக 2 முறையும் இத்தொகுதியை தன்வசமாக்கியிருக்கிறது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

அதிமுகவின் கோட்டையாக ஸ்ரீரங்கம் :

1977, 1980, 1984 ஆகிய அடுத்தடுத்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிமுகவின் சார்பில் இரா.சவுந்தரராஜன் ஹாட்ரிக் வெற்றியை வசமாக்கியிருக்கிறார். சினிமா துறையை சேர்ந்தவர் என்பதோடு, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆருக்கு மிக நெருக்கமானவர். எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற தலைவராக இருந்தவர். எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில், மக்கள் நல்வாழ்வுத்துறை, சத்துணவு, உள்ளாட்சி, சமூக நலன், கதர் உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக அசைக்க முடியாத ஆளுமையாக ஆட்சி செய்தவர்.

முதல்வர் பிறந்தநாள்

எம்.ஜி.ஆரின் மறைவு, ஜெ அணி, ஜானகி அணி என்பதாக அதிமுக இரண்டாக பிளவுபட்ட காலத்திற்கு பிறகு, கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். 1989 இல் ஜெ.அணி சார்பில், கு.ப.கிருஷ்ணன் இத்தொகுதியின் வேட்பாளராக களமிறங்கி தோல்வியுற்றார். பின்னர், 1991 இல் வெற்றிபெற்றார். மீண்டும், 2021 இல் தோல்வியை தழுவிய நிலையில், அதிமுக கட்சியிலிருந்து விலகி தற்போது தவெகவில் ஐக்கியமாகியிருக்கிறார்.

கு.ப.கிருஷ்ணனை அடுத்து அதிமுகவின் முகமாக, மு.பரஞ்சோதி களமிறக்கப்பட்டார். இவரும் 1996 இல் தோல்வியை தழுவி, இரண்டாவது முறையாக 2006 இல் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இடையில், தொகுதி மாறி மண்ணச்சநல்லூரில் போட்டியிட்டு அமைச்சரும் ஆனார்.

2015 இல் சொத்துக்குவிப்பு வழக்கில் செல்வி ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர் தகுதி இழந்த நிலையில் நடைபெற்ற இடைத்தேர்தலில், சீ.வளர்மதி களமிறக்கபட்டார். ஜெயலலிதா வாங்கிய ஓட்டுகளைவிட, சுமார் 46233 வாக்குகள் அதிகமாக பெற்று அமோக வெற்றியை வசமாக்கினார். இதனை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலிலும் சீ.வளர்மதியே வெற்றிவாகை சூடினார்.

2011 இல் ஜெயலலிதா களம் கண்டபோதும்; 2015 இல் இடைத்தேர்தல் கண்டபோதும் திமுக சார்பில் களமிறக்கப்பட்டவர் என்.ஆனந்த். திருச்சியின் அசைக்க முடியாத சக்தி கே.என்.நேருவால் களமிறக்கப்பட்டவர். அவரது தம்பி ராமஜெயத்தின் கடுமையான களப்பணியால், வெறும் 11,337 ஓட்டுக வித்தியாசத்தில்தான் ஜெயலலிதாவே வெற்றி பெற முடிந்தது. அந்த அளவுக்கு டஃப் கொடுத்தவர்.

இதன் தொடர்ச்சியாகத்தான், 2021 இல் முதல்முறையாக களம் கண்ட மொ.பழணியாண்டி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட கு.ப.கிருஷ்ணனை, 19915 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.

முத்தரையருக்கான தொகுதியா ஸ்ரீரங்கம்?

தொடர்ச்சியாக, திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் சார்பில் முத்தரையர் சமூகத்தினரே வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டனர். இதன்காரணமாகவே, இத்தொகுதி முத்தரையருக்கான தொகுதி என்பதாக பெயரெடுத்தும் விட்டது. உண்மையில், ஸ்ரீரங்கம், திருவாணைக்காவல் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் முத்தரையர்கள் பட்டியல் சமூகம், உடையார், பிராமணர்கள்,  வெள்ளாளர், கிறித்தவர்கள், இவர்களுக்கு இணையாக பட்டியல் இனத்தவர்களையும் பரவலாக கொண்ட தொகுதிதான் ஸ்ரீரங்கம். அதுமட்டுமா?

கடந்த 1971  சட்டமன்றத் தேர்தலின்போது, தாழ்த்தப்பட்டோருக்கான தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டு தேர்தலை எதிர்கொண்டது என்பதுதான் கடந்த கால வரலாறு. அப்போது ஸ்தாபன காங்கிரசு சார்பில் களம் கண்ட ஜோதி வெங்கடாசலம் வெற்றிபெற்றார். அடுத்த இடத்தை திமுகவின் ஆர்.காமாட்சியம்மாள் பிடித்தார்.

பரந்து விரிந்த தொகுதி :

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 1 முதல் 6 வரையிலான வார்டுகளையும்; ஸ்ரீரங்கம் வட்டத்தில் பனையபுரம், உத்தமசேரி, கிளிக்கூடு, மல்லியம்பத்து, தொடங்கி, சோமரசம்பேட்டை, குழுமணி, திருப்பராய்த்துறை, அல்லூர் வரையில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை கொண்ட தொகுதி. மேலும், சிறுகமணி பேரூராட்சி மற்றும் மணப்பாறை வட்டத்தில் தொப்பம்பட்டி தொடங்கி மாதம்பட்டி வரையில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களையும் உள்ளடக்கிய தொகுதியாகவும் ஸ்ரீரங்கம் தொகுதி அமைந்திருக்கிறது. சுமார் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களை கொண்ட தொகுதியாக இருக்கிறது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

போட்டியில் யார்? யார்?

தற்போதைய எம்.எல்.ஏ. பழனியாண்டியின் செயல்பாடுகளில் பெரிய அளவுக்கு குறை இல்லாத தொகுதியாகவே ஸ்ரீரங்கம் தொகுதி இருக்கிறது. மக்கள் பிரச்சினைகளுக்காக வேட்டியை மடித்துக் கொண்டு களத்தில் இறங்கும் போராடும் எம்.எல்.ஏ. என்ற பெயரையும் எடுத்திருக்கிறார். வண்ணத்துப்பூச்சி பூங்காவை இத்தொகுதிக்குள் கொண்டு வந்தது; நெல் தானிய குடோன் அமைத்தது; பூவிலிருந்து சென்ட் தயாரிக்கும் ஆலைக்காக தொடர்ந்து முயற்சித்து வருவதை சாதனையாக எம்.எல்.ஏ. தரப்பில் சொல்கிறார்கள். எம்.எல்.ஏ. சட்டமன்ற நிதியிலிருந்து தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் நலத்திட்ட உதவிகளையும் செய்திருக்கிறார் என்கிறார்கள். ஆனாலும், சமீபத்தில் கரூர் மாவட்டத்தில் இவரது மகன் பெயரில் இயங்கிவரும் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட சர்ச்சையை காரணம் காட்டி இவருக்கு எதிரான அரசியலை சொந்தக் கட்சியினரே முன்னெடுப்பதாக சொல்கிறார்கள்.

மேலும், நேரு தரப்பில் ஜெ.வை எதிர்த்து போட்டியிட்ட ஆனந்த்-ஐ மீண்டும் களமிறக்க முடிவெடுத்திருப்பதாகவும் தகவல். நேருவின் நிழலாகவே தொடரும் மத்திய மாவட்ட பொருளாளர் துரைராஜ் அந்த சீட்டை தன்வசமாக்க முயற்சிப்பதாகவும் சொல்கிறார்கள்.இந்த முறை மீண்டும் எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் என்பதில் எம்.எல்.ஏ. பழனியாண்டி உறுதியாக இருக்கிறார் என்கிறார்கள்.

அதிமுக தரப்பில் இப்போது வரையில் 49 பேர் போட்டியில் இருக்கிறார்கள். அதில் முன்னாள் அமைச்சர்கள் சீ.வளர்மதி மற்றும் பரஞ்சோதி தலைமை கொறடா மனோகரன் ஆகியோர் முன்னிலையில் இருக்கிறார்கள். மனோகரன் ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாக கொண்டவர். இங்குதான், மூன்று முறை கவுன்சிலராக ஜெயித்திருக்கிறார். சேர்மன் ஆகியிருக்கிறார். கோட்டத்தலைவராகவும் இருந்திருக்கிறார். இடையில், தொகுதி மாறி நின்று வெற்றி பெற்றிருந்தாலும் இந்த முறை சொந்த தொகுதியான ஸ்ரீரங்கத்தில் போட்டியிடவே, தலைமையுடன் மல்லுக்கட்டி வருகிறார் என்கிறார்கள்.

தோழமை கட்சிகளின் சார்பில், இத்தொகுதியில் முதல்முறை போட்டியிட்ட பெருமை கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் வேட்பாளரை களமிறக்க திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்களாம்.

கு.ப.கிருஷ்ணன் அவசரம் அவசரமாக தவெகவில் ஐக்கியமானதற்கு காரணமே, மீண்டும் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதற்காகத்தான் என்கிறார்கள்.

புதுமுகம் காணுமா ஸ்ரீரங்கம்?

தற்போதைய எம்.எல்.ஏ. பழனியாண்டிக்கு எதிரான சர்ச்சையை காட்டி அவரை சொந்தக் கட்சியினரே கழட்டி விட முயற்சித்து வருவதாக

ஸ்ரீரங்கம் அதிமுக
ஸ்ரீரங்கம் அதிமுக

நிலையில், ஒருவேளை கூட்டணி கட்சிக்கு ஸ்ரீரங்கம் தொகுதி ஒதுக்கப்பட்டால் அதற்கான இடத்தை எப்படியும் பெற்றுவிட வேண்டுமென்று இப்போதே காங்கிரசு கட்சியை சேர்ந்த மாநில இலக்கிய அணியின்  பொறுப்பாளர்  ஜெயப்பிரியாவும்  மூச்சைப் போட்டு வருவதாக சொல்கிறார்கள்.

எதிர்முகாமான, அதிமுக தரப்பில் சீ.வளர்மதிதான் களமிறக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும்; பெண்ணுக்கு பெண் போட்டியாளர் என்ற கணக்கும் நேராகிவிடும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறாராம். மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் முன்வைத்ததோடு, மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கையும் சந்தித்து தனக்கான சீட்டை உறுதிபடுத்த மெனக்கெட்டு வருகிறார், ஜெயப்பிரியா என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

கடைசி நேர தலைவலி :

இதுஒருபுறமிருக்க, ஸ்ரீரங்கம் தொகுதியின் நீண்டகால தலைவலி பிடித்த விவகாரமாக நீடித்து வரக்கூடிய, அடிமனை விவகாரம் மீண்டும் முன்னணிக்கு வந்திருக்கிறது. அரங்கநாதனுக்கு அடிமனை சொந்தம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்ட நிலையில், அடிமனையை காக்க ஸ்ரீரங்க வாசிகள் போராட்டங்களை முன்னெடுக்க ஆயத்தமாகி வருகிறார்கள். இவர்களையும் சமாளித்து, தேர்தலில் ஓட்டு வாங்குவதற்குள் தாவு தீர்ந்துவிடும் என்கிறார்கள்.

அங்குசம் தேர்தல் செய்திக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.