உள்ளூர் சந்தையில் விலை போகாத காளை … விலை போகுமா ? போஸ்டரால் பாய்ந்த வழக்கு !
2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், சர்ச்சையான வாசகங்களுடன் ஒட்டப்பட்ட போஸ்டரால், இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட விவகாரம் சாத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சாத்தூர் ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரும் தேர்தல் பறக்கும்படை அதிகாரியுமான மகாலெட்சுமி, சாத்தூர் நகரில் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மேம்பாலம் ஒன்றில் நபர் ஒருவர் சுவரொட்டி ஒட்டியதை மேற்பார்வையிட்டனர்.
அந்த நபர் ஒட்டியிருந்த சுவரொட்டியில், “உள்ளூர் சந்தையில் விலை போகாத காளை … சாத்தூர் சந்தையில் விலை போகுமா? அரசியல் பச்சோந்திகளை அடையாளம் காண்போம். கல்வி நிதியில் பாரபட்சம் … ஜி.எஸ்.டி. நிதியில் பாரபட்சம் … பேரிடர் நிதியில் பாரபட்சம் … தமிழகத்தை புறக்கணிக்கும் தாமரையை புறக்கணிப்போம். கடந்த தேர்தலில் நெல்லை. இந்த தேர்தலில் சாத்தூர். அடுத்த தேர்தலில்..?” என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பறக்கும்படை போலீசார், போஸ்டர் ஒட்டிய நபரை விசாரித்தனர்.
போஸ்டர் ஒட்டிய நபரான தாயில் மடத்துப்பட்டியை சேர்ந்த கருப்பசாமி என்பவரை விசாரித்ததில், திமுக கட்சியை சேர்ந்த இராமுத்தேவன்பட்டியைச் சேர்ந்த முன்னாள் அரசு வழக்கறிஞர் K. நல்லதம்பி சொல்லித்தான் போஸ்டரை ஒட்டுவதாக தெரிவித்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் இருதரப்புக்கிடையே, சச்சரவை ஏற்படுத்தும் வாசகங்களுடன் இருப்பதாக கருதிய பறக்கும்படையினர், ஏற்கெனவே ஒட்டி 5 போஸ்டர்களை கிழித்ததோடு, ஒட்டுவதற்காக வைத்திருந்த 145 போஸ்டர்களை கைப்பற்றிக்கொண்டு, சாத்தூர் நகர போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த சாத்தூர் நகர போலீசார், இருவரையும் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்திய நிலையில், இருவரையும் சொந்த பிணையில் விடுவித்துள்ளார் நீதிபதி.
மொட்டை கடுதாசி போல, போஸ்டரை ஒட்டாமல் தனது பெயரையும் முன்னாள் அரசு வழக்கறிஞர் என்ற அடையாளத்தையும் குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதும்; அதில் இடம்பெற்ற வாசகங்கள் சச்சரவுகளுக்கு வழிவகுக்கும் என்று பறக்கும்படையின் வழக்குப்போட்டிருப்பதும் நடப்பு தேர்தல் காலத்தில் கவனத்தை பெற்ற நிகழ்வாக மாறியிருக்கிறது. இன்னும் என்னென்ன கூத்துக்களை தமிழகம் எதிர்கொள்ளப்போகிறதோ?
— அங்குசம் தேர்தல் செய்திக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.