பட்டா பெயர் மாற்ற லஞ்ச வழக்கு! வசமாக சிக்கிய வி.ஏ.ஓ!
திருச்சி மாவட்டம். முசிறி வட்டம், மாவிலிப்பட்டி, கீழத்தெருவைச் சேர்ந்த நடராஜன் மகன் தியாகராஜன் என்பவரிடம், அவரது தகப்பனார் பெயரிலிருந்த நிலத்தினை, தியாகராஜன் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்துதர ஏற்பாடு செய்வதற்காக, திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், பைத்தம்பாறை கிராம நிர்வாக அலுவலர் ந.செல்வராஜ் என்பவர், ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு, பின்னர் ரூ.700/- ஆகு குறைத்து கேட்டுள்ளார்.
மேற்படி லஞ்சம் கேட்டது தொடர்பாக கடந்த 16.12,2008ந்தேதி திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் தியாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் செல்வராஜ் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 17.12.2008ந் தேதியில் மேற்கொண்ட பொறிவைப்பு நடவடிக்கையில், புகார்தாரர் தியாகராஜனிடம் லஞ்சப்பணம் ரூ.700/-ஐ VAO செல்வராஜ் கேட்டு பெற்றபோது திருச்சி லஞ்ச ஒழிப்பு போலிசாரால் கைது செய்யப்பட்டார்.
மேற்படி வழக்கானது திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுற்று 25.11.2025ந் தேதி திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற சிறப்பு நீதிபதி புவியரசு அவர்கள், செல்வராஜ் வயது 71/25, த/பெ நமச்சிவாயம், முன்னர் கிராம நிர்வாக அலுவலர், பைத்தம்பாறை கிராமம், பொறுப்பு மாவிலிப்பட்டி கிராமம், முசிறி வட்டம், திருச்சி மாவட்டம் என்பவருக்கு லஞ்சப்பணம் கேட்ட குற்றத்திற்காக ஈராண்டு சிறை தண்டனையும் ரூ.1,000/- அபராதமும், அபராதத்தை கட்டத்தவறினால் மூன்று மாதம் சிறை தண்டனையும், அரசு பதவியை தவறாக பயன்படுத்தி கையூட்டு கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக ஈராண்டு சிறை தண்டனையும் ரூ.1,000/- அபராதமும், அபராதத்தை கட்டத்தவறினால் மூன்று மாதம் சிறை தண்டனையும் விதித்தோடு, மேற்கண்ட தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
மேற்படி வழக்கினை DSP மணிகண்டன், Inspector சக்திவேல் ஆகியோர் திறம்பட சாட்சிகளை ஆஜர் செய்து ஒத்துழைப்பு வழங்கியும், அரசு தரப்பு வழக்கறிஞராக திரு.கோபிகண்ணன் அவர்கள் திறம்பட வழக்கை நடத்தியும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்துள்ளார்கள்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.