பேத்தியை பார்க்க வந்த தாத்தா … மாமனாரை வழியனுப்ப சென்ற மருமகன் … லாரி மோதி பலியான சோகம் !
விருதுநகர் மாவட்டம், சிவகாசி திருத்தங்கள் சாலையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் மாமனார் மற்றும் மருமகன் இருவரும் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பாண்டியன் நகரில் பாண்டியன் நகரில் குடியிருந்து வரும், சார்லஸ் பொன்ரசல் ( 28 ) பிரிண்டிங் பிரஸ்ஸில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் கேரள மாநிலம் மூணாறை சேர்ந்த விவசாயி ஜோதிராஜ் ( 60 ) என்பவரின் மகள் சந்தியாவை (25 ) காதலித்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் ஆகி உள்ளது.
இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் பவ்யா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சந்தியாவின் அப்பா தனது மகள் பேத்தி பவ்யாவையும் பார்ப்பதற்காக திருத்தங்கள் பகுதிக்கு ஜோதிராஜ் வந்துள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் மூணாறுக்கு செல்ல மருமகனின் இருசக்கர வாகனத்தில் சிவகாசி பேருந்து நிலையத்திற்கு செல்வதற்கு திருத்தங்கல் சாலையில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது மருமகன்
இருசக்கர வாகனத்தை ஓட்டி வரவே மாமனார் பின்னால் அமர்ந்திருந்த நிலையில், இவர்களது பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே ஜோதிராஜ் உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும், உயிருக்கு போராடிய சார்லஸ் பொன்ரசலும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விடுகிறார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து தொடர்பாக சிவகாசி நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து , விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் கணேஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
— மாரீஸ்வரன்