விஜய் சுற்றுப்பயணமும் சனிக்கிழமைக்கு வந்த சோதனையும் !
ஒரு வேளை “சனிப் பெருக்காக” இருக்கலாமோ…??? த.வெ.க. தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதுமான (இந்தப் போஸ்டரில் திருச்சி To மதுரை என்றிருக்கிறது. அது தவறு). தனது பரப்புரைக்கான சுற்றுப் பயணத்தின் அட்டவணையினை அறிவித்திருக்கிறார்.
13.09.2025 சனிக்கிழமை முதல்… 20.12.2025 சனிக்கிழமை வரை… என அந்த அட்டவணை நீள்கிறது. இதில் ஒரேயொரு சனி – ஞாயிறு தவிர மற்ற எல்லா பரப்புரை நாட்களுமே சனிக்கிழமை மட்டுமே வருவதாக அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளி – கல்லூரிகள் பெரும்பாலும் சனிக்கிழமை விடுமுறை என்பதால் இது ஒரு வகையில் “சனிப் பெருக்காக” வும் அமையலாம். குறிப்பிட்ட அந்த செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் என நான்கு மாதங்களில் வருகின்ற சனிக்கிழமைகளில் த.வெ.க. தலைவர் விஜய் அவர்களின் பரப்புரைக் கூட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
தமிழ்நாடு முழுதுமான இந்தச் சுற்றுப் பயணம் ஆனது… 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன் கூட்டியே நிகழவிருக்கின்ற “வெள்ளோட்டம்” ஆகவும் அமைந்திட நேரலாம்.
திமுக அரசின் தமிழகக் காவல் துறைக்கு சீரிய வேண்டுகோள்… த.வெ.க. தலைவர் விஜய் அவர்களின் தமிழகம் முழுதுமான பரப்புரைக் கூட்டங்களுக்கு தமிழ்நாட்டில் எந்த நகரில் எந்த இடத்தில் அனுமதி கோரினாலும் மறுக்காமல் அனுமதி தந்து விடுங்கள்.
அனுமதி மறுப்பது காவல் துறைக்கும் ஆளும் தி.மு.க. வுக்கும் அவப் பெயரையும் தேவையற்ற விமர்சனங்களையும் மீடியாக்களுக்கு பரபரப்பையும் மட்டுமே பரிசாகத் தரும். நகர நெருக்கடி சிறிய பரப்பளவு இடம் என்பதெல்லாம் பரப்புரைக்கு இடம் தேர்வு செய்பவர்களுக்கு தெரியாதா என்ன ??? மேலும், குறிப்பிட்ட இடம் தான் வேண்டும் என்று அடம் பிடித்தால் காவல் துறை அனுமதி தராது என்றும் அவர்களுக்குத் தெரியும்.
ஒவ்வொன்றிலும் தடுத்துக் கொண்டே போனால்… த.வெ.க. தலைவர் விஜய் அவர்களின் அரசியல் பரப்புரை அதிர்வலைகளால் ஆளுகின்ற தி.மு.கழகம் மிரண்டு போனது பயந்து விட்டது என்கிற தேவையற்ற “மாய பிம்பமே” கட்டமைக்கப்படும்.
— ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு, உழைக்கும் மூத்த பத்திரிகையாளர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.