“அன்னமழகி” “திருவாழி” இரு நாவல்கள் அறிமுக கூட்டம் !
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநகர் மாவட்டம் சார்பில் இரு நாவல்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்வில் அண்டனூர் சுரா எழுதிய “அன்னமழகி” நாவலை பேரா.சதீஷ் குமரன் அறிமுகம் செய்தார்.மீரான் மைதீன் எழுதிய “திருவாழி” நாவலை கவிஞர் கோ.கலியமூர்த்தி அறிமுகம் செய்தார்.மாவட்டத் தலைவர் திரு.எம்.செல்வராஜ் தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில் தாமரை இதழாசிரியர் சி.மகேந்திரன் வாழ்த்துரை வழங்கினார், அவர்தம் வாழ்த்துரையில் காலந்தோறும் சமூகத்தை நெறிப்படுத்துவது மானுடத்தைப் பண்படுத்துவது சிறந்த இலக்கியப் படைப்புகள்தான், இலக்கியம் படைக்கவும் வாசிக்கவும் சமூகம் ஆர்வமுடன் முன்வரவேண்டும், படைப்பாளிகள் தமிழ்ச் சமூகத்தின் திசைமானிகளாகத் திகழ வேண்டும். மொழி, பண்பாடு, தமிழர் மரபு இவற்றை ஆராய்ந்து படைப்புகளில் பதிவு செய்ய முனைப்புடன் உறுதியுடன் எழுத்தாளர்கள் செயல்பட வேண்டும், மக்களின் வாழ்வியலை, பாடுகளை, உரிமைகளை மீட்க எழுத்து துணை நிற்றல் வேண்டும். அவ்வாறு உருவாகும் படைப்புகளே காலம் கடந்தும் போற்றப்படும். இலக்கியங்கள் மானுடத்தின் நாற்றங்கால்கள் என்றார்.
அதனைத் தொடர்ந்து “அன்னமழகி” நாவல் பற்றி பேரா.சதீஷ் குமரன் பாரம்பரிய நெல் ரகமான அன்னமழகி நெல்லின் மகத்துவத்தை உணர்ந்து அவற்றைத் தேடிப் போகும் தந்தை ஒருவரின் வாழ்வியல் குறித்தும் நெல் ரகங்கள் தனிமனிதன் தொடங்கி சமூகத்தை மலடாகமல் மீட்டெடுத்த கதை மற்றும் மற்றொருபுரம் உடல் இச்சை அதிகமான தந்தையின் நிலையை மாற்றும் மற்றொரு மரபு நெல்லான “கூளமாதோரை “நெல் குறித்த கதைக்களம்தான் இந்நாவல் என்றார்.

“திருவாழி” நாவல் குறித்து கோ.கலியமூர்த்தி அவர்கள் மீரான் மைதீனின் படைப்புகள் குமரி மாவட்ட மக்களின் மனக் கண்ணாடியை மொழியில் வெளிப்படுத்துபவை. சாமானிய மக்களின் வாழ்வியல், மனதில் வெளிப்படும் ஆசைகள், கனவுகள், சிதைவுகள் உள்ளிட்டவற்றை பேசுபவை, இவர் உருவாக்கும் பாத்திரங்கள் உயிர்ப்போடு சமூகத்தை நகர்த்தும் நடுத்தர மக்கள்.
இவருடைய படைப்புகள் ஒவ்வொன்றும் தனித்துவத்துடன் சிறந்த விளங்குகின்றது என்றார். பேரா.பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்