இருளைக் கிழித்துவரும் நேர்மை ஒளிக்கதிர் சகாயம் ஐ.ஏ.எஸ் ( 6 )
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஜா.சலேத்
“அவர் இப்படித்தான். கூரையைப் பிச்சுகிட்டு கடவுள் கொடுக்கிறார். வாங்கிட்டு வேலையைப் பார்ப்பாரா? அதவிட்டுட்டு… கொஞ்சம் படிச்சுட்டா போதும். தன்னையே கடவுளுன்னு நினைச்சுக்கிருவாங்க போல! போகட்டும். இங்கேயே கிடந்து, என்னமோ செஞ்சுகிட்டே இருக்கட்டும்.”இப்படிகுரல்கள் தன் காதோரமே கேட்டது அந்த மருத்துவருக்கு. யார் அந்த மருத்துவர்? ஆப்ரிக்காவைச் சேர்ந்த இருதய சிகிச்சை நிபுனர் டாக்டர் கிறிஸ்டின் பெர்னார்டு தான் அவர்.
வருடத்திற்கு ஒரு இலட்சம் தருவதாக கனடாவும், மூன்று இலட்சம் தருவதாக இங்கிலாந்தும், ஐந்து இலட்சம் தருவதாக பிரிட்டனும் அழைத்தன. எல்லாவற்றுக்கும் மேலே போய் அமெரிக்கா, மருத்துவர் தம் நாட்டில் வந்து குடியேறி மருத்துவ ஆராய்ச்சியை செய்யலாம். அதற்குத் தேவையான அனைத்தையும் நாங்களே செய்து தருகிறோம். அத்துடன் ஆண்டுக்கு அல்ல மாதம் ஒரு இலட்சம் அமெரிக்க டாலர் சம்பளம் தருவதாகக் கூறி அழைப்பு விடுத்தது.
ஆண்டுக்கு ஒரு லட்சம் என்றபோதும் சரி,மாதம் ஒரு லட்சம் என்றபோதும் சரிபெர்னார்டு ஒன்றை மட்டுமே மீண்டும் மீண்டும் சொல்லி வந்தார். அப்படி என்ன சொன்னார்? “நான் என்ன ஆடா? மாடா? விலை பேசப்படுவதற்கு! என்னுடைய அறிவு, என் தாய்நாட்டிலிருந்து,சேவை செய்வது மட்டும்தான். எனக்கு உங்கள் சாம்ராஜ்ஜியத்தையேஎழுதிக் கொடுத்தாலும் என் நாட்டைவிட்டு வரமாட்டேன்.” இது மட்டும்தான் அந்த மருத்துவருடைய பதில்.அதனால்தான் அவர் காதுபடவே பலரும் அவரைத் திட்டினர்.
இதயத்தில் நோய் என்றால் மட்டும் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. இதய நோய் வந்து விட்டது எனில் இறப்பது மட்டுமே நிச்சயம். கடவுள் தந்த இந்த உலக வாய்ப்பு உங்களுக்கு நிறைவடையப் போகிறது என்று மருத்துவர்கள் கூறிக் கொண்டிருந்த காலத்தில்,மாற்று இருதயத்தை உண்டாக்கி – சோதனையிட்டு – அதைப் பொருத்தி வெற்றி கண்டவர்தான் இந்த மருத்துவர் கிறிஸ்டின் பெர்னார்டு. இருதய மருத்துவத்துறையின் முன்னோடி.

நமக்கெல்லாம் தெரிந்த ஒரு மகத்தான ஆளுமையின் வாழ்க்கை இந்த மருத்துவரோடு ஒத்துப்போகிறது. மாலைநேரம் அது. பள்ளி முடிந்து மாணவர்கள் ஓடி வருகிறார்கள். மழை அப்போதுதான் விட்டிருக்கிறது. தொடர்ந்து அடித்த காற்றால் சாலையில் இலை தழைகளும், சிறு சிறு குச்சிகளும் விழுந்து கிடக்கின்றன. சாலை ஓரத்தில் இருக்கும் அந்த மாந்தோப்பில் காவலுக்கு யாரும் இல்லை. மாம்பிஞ்சுகள் விழுந்து கிடப்பதைச் சிறுவர்கள் பார்க்கின்றனர். ஆளாளுக்கு எடுத்துக்கொள்கிறார்கள். அந்தச் சிறுவனும் எடுத்துக்கொள்கிறான். மாம்பிஞ்சுகளோடு வீட்டிற்கு வந்த அந்தச் சிறுவனிடம் அவன் அம்மா கேட்கிறார்.
“மாம்பிஞ்சுகளை உனக்கு யாரப்பா கொடுத்தார்கள்?”
“வரும் வழியில் செட்டியார் தோப்பில் கிடந்தது. எடுத்தோம்.”
“யாரிடம் கேட்டு எடுத்தீர்கள்?”
“யாரிடமும் கேட்கவில்லை. கீழே கிடந்தது. எல்லோரும் எடுத்தார்கள்.நானும் எடுத்தேன்.”
“எல்லோரும் செய்வதால் தவறு சரியாகிவிடாது. அவர்களே கொடுத்திருந்தாலும் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுவது தவறுதானே!”;
“தவறா! இப்ப நான் என்ன செய்ய அம்மா…?”
“எங்கே எடுத்தாயோ, அங்கேயே கொண்டு போய் கொடுத்துவிட்டு வா!”
தோப்பிற்கு ஓடிய சிறுவன் தோப்பின் காவலாளி இருப்பதைப் பார்த்து, அவர் கையில் மாம்பிஞ்சைக் கொடுக்கிறான். “பரவாயில்லை. வைத்துக் கொள்” என்று அவர் சொல்கிறார். “இல்லை. வேண்டாம்” என மறுத்துவிட்டு வீட்டிற்கு வந்து விடுகிறான் அந்தச் சிறுவன்.
நாட்கள் ஓடிவிட்டன. இந்நிகழ்வு நடந்து ஆண்டுகள் நாற்பதைத் தாண்டிவிட்டன. இருளைக் கிழித்துக்கொண்டு வரும் ஒளிக்கதிர் போல சிறுவயதிலே ஊட்டி வளர்க்கப்பட்ட நேர்மை இன்றும் அவரிடம் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்தச் சிறுவன் இப்போது வளர்ந்து விட்டார்.
“என்னை டிரான்ஸ்பர் செய்யலாம். என் நேர்மையை டிரான்ஸ்பர் செய்ய முடியாது” என இலஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து ஊழல்வாதிகளுக்கு சிம்மசொப்பனமாய் விளங்கும் உ.சகாயம், ஐ.ஏ.எஸ் தான் அந்தச் சிறுவன்.
இவர்கள்தான் போதிமரங்கள். நாம் அவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். விழாக்களில் பார்க்கிறோம். அவர் பற்றி பாராட்டுக்கள், விமர்சனங்கள் நம் காதுகளில் பல நேரத்தில் விழுகின்றன. ஆனால் பல வேளைகளில் நாம் சித்தார்த்தாராக வந்து – சித்தார்த்தாராக அமர்ந்து – சித்தார்த்தாராகவே எழுந்து செல்கின்றோம். அப்படி அல்லாமல் மகரந்தங்களைத் தேடித்தேடி சேகரிக்கும் தேனீக்களைப் போல இவர் போன்ற நல்ல ஆளுமைகளிடமிருந்து பண்புகளை சேகரிக்கப் பழகிக்கொள்வோம். உணர்ந்து கொள்வோம் சகாயம் ஐ.ஏ.எஸ் போன்ற ஆளுமைகள் கண்ணெதிரே நிற்கும் போதிமரங்கள் என்று!
கட்டுரையாளர்
முனைவர் ஜா.சலேத்
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்