“உலகாளும் வள்ளுவமே” பாடல் வெளியீடு !
வள்ளுவத்தின் பெருமை பறைசாற்றும் “உலகாளும் வள்ளுவமே” என்ற பாடல் குறுந்தகட்டை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் ஜன-27 அன்று வெளியிட்டார்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் கன்னியாக்குமரியில் திறந்து வைத்த 133 அடி திருவள்ளுவர் சிலைக்கு இவ்வாண்டு வெள்ளி விழா ஆண்டு . இதனை கொண்டாடும் விதமாக, திருவள்ளுவரை திருக்குறளின் பெருமை பறைசாற்றும் விழாவாக தமிழ்நாடு அரசு இவ்வாண்டு ஜனவரி மாதத்தை திருக்குறள் வார விழா மாதமாக தமிழ்நாடு முழுக்க கடைபிடித்து வருகிறது. அதற்கான அரசாணையும் பிறப்பித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாகத்தான், திருச்சி கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரித் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் கி. சதீஷ் குமரன் எழுதிய உலகாளும் வள்ளுவமே பாடலை மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். பாடலை இசைவாணன் என்கிற ஆகாஷ் பாடியுள்ளார். இவருடன் இணைந்து, நுண்கலைக்கல்லூரி மாணவர்கள் சதீஷ்குமார், ராஜா ஜெய் போஸ்கோ, சிபி ரிச்சர்ட், நேதாஜி, தேவி, சுஷ்மிதா, ஸ்டெபி, வின்சி, பரணிதரன், அனுசியா, துளசி, பூர்ணா, ஆகியோர் குழுவாக பாடியுள்ளார்கள். ஆன்டிரவின் ஸ்டாரி இசையமைத்துள்ளார். அருட்தந்தை தீபன் மற்றும் பரணிதரன் குழுவினர் காணொளியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
கடந்த செப்டம்பர் மாதம் “பனங்காடையின் பாடல்கள் ” என்கின்ற மக்களிசை விழிப்புணர்வுப் பாடல் தொகுப்பை மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் வெளியிட்டிருந்தார். அத்தொகுப்பில் இடம்பெற்ற முதல் பாடல்தான், “உலகாளும் வள்ளுவமே” என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடல் நுங்கு வண்டிக்காரன் வலையொளியில் வெளியிடப்பட்டுள்ளது.
— அங்குசம் செய்திப்பிரிவு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.