வக்பு சொத்துக்கு தடையில்லா சான்று சர்ச்சை ! கே நவாஸ்கனி எம்.பி. விளக்கம் !
தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராக வக்பு வாரிய உறுப்பினர்களால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகள் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் உறுப்பினராக இருந்தும் பணியாற்றி இருக்கின்றேன். வக்பு வாரியத்தால் வழங்கப்படும் தடையில்லா சான்று குறித்தான முறைகளை நன்கு அறிந்தவன் என்ற முறையில் ஒரு சில விளக்கத்தை முன்வைக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
தடையில்லாச் சான்றிதழ் வழங்குவதை நிறுத்தினால் வக்பு சொத்துகளை தனி நபர்கள் தம் பெயரில் பதிவு செய்வதற்கு இது வழி வகுத்து விடுமோ என்று ஒரு சிலர் சந்தேகத்துடன் கேட்டிருக்கின்றனர்.
இந்த நடைமுறை எப்படி உருவானது என்ற விளக்கத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். 1955-1956 காலகட்டத்தில் நடைபெற்ற சர்வேகளின்யின் படி 1959 ல் வெளியிடப்பட்ட அரசிதழ் (Govt. Gazette) அடிப்படையிலான வக்பு வாரியத்தில் மூல ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து வக்பு சொத்துகளையும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜீரோ வேல்யூ செய்யப்பட்டு, அவற்றைப் பதிவு செய்யக்கூடாது என பத்திரப்பதிவுத் துறைக்கு வக்பு வாரியம் சார்பில் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
1959ற்குப் பிறகு பல சொத்துக்கள் சப் டிவிஷன் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், அதில் ஒரு சில இடங்களில் மட்டும் அந்தந்த சர்வே எண்ணில் எவ்வளவு பரப்பளவு சொத்துகள் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது எனத் தெளிவாக, சரியாகக் குறிப்பிடப்படாத நிலையில், தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் ஒரு சர்வே எண்ணில் சப் டிவிஷன் ஆகி இருக்கக்கூடிய பகுதிகளில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலங்கள் தவிர, எஞ்சிய இடங்களையும் பதிவு செய்வதற்குப் பத்திர பதிவு அலுவலகங்கள் தடை செய்திருப்பதினால், அந்த தனிநபர்கள் மட்டும் வக்பு வாரியத்தை அணுகி தடையில்லா சான்று பெறக்கூடிய நிலை இருந்து வருகிறது.
அப்படி அந்த தனிநபர்கள் வக்பு வாரியத்தை அணுகியபோதெல்லாம், உடனடியாக எங்களது ஆவணங்களைச் சரிபார்த்து அவற்றின் அடிப்படையில், “இந்த சர்வே எண்ணில் இத்தனை பரப்பளவு மட்டும்தான் வக்ஃப் இடம், அதைத் தவிர்த்து இதர பகுதிகளிலே பத்திரப்பதிவு செய்வதில் எங்களுக்கு எந்தத் தடையும் இல்லை” என்று தடையில்லாச் சான்றிதழ் வக்பு வாரியம் ஏற்கனவே வழங்கி வந்தது.
வக்பு சொத்துக்கள் இல்லாத இடங்களுக்கு மட்டும் தான் தடையில்லா சான்று கொடுக்கப்பட்டதே தவிர, வக்பு சொத்துகளுக்கு தடையில்லா சான்று வழங்கப்படவில்லை.
வக்பு சொத்துக்களை மட்டும் தெளிவாக அடையாளம் கண்டு பாதுகாக்கும் வண்ணம் தமிழ்நாடு அரசு சர்வேயர்களை நியமித்து, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அளவை இயந்திரங்களை வக்பு வாரியத்திற்குக் வழங்கி, 30 சர்வேயர்களையும் நியமித்து, அந்தப் பணிகள் இப்பொழுது முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
தற்பொழுது இந்தப் பணி கிட்டத்தட்ட முடியும் நிலையில் இருப்பதால், எங்கெல்லாம் சர்வே எண் பிரச்சனை இருக்கின்றதோ அந்த இடங்களில் துரிதமாக அந்தப் பணிகளை முடிந்து அனைத்து வக்பு சொத்துக்களும் முறையாக ஜீரோ வேல்யூ செய்யப்பட்ட பின்பு, தடையில்லா சான்று வழங்க வேண்டிய அவசியம் இருக்காது.
வக்பு சொத்துகளை தனியார் தமக்குப் பதிவு செய்வதற்கு இதுவரை தடையில்லாச் சான்று வழங்கப்படவில்லை, அப்படி வழங்கவும் முடியாது , ஒரு தனிநபரின் சொத்து வக்பு சர்வே எண்ணுடன் சேர்ந்து இருப்பதால் பிறருக்கு ஏற்படும் அவதிகளைத் தவிர்க்கவே இந்த அறிவிப்பு என்பதை தெளிவுபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கே நவாஸ்கனி MP
தலைவர் – தமிழ்நாடு வக்பு வாரியம் .