‘உசுரே’ விழாவில் உசுரை வாங்கிய உதயகுமார்! கலகலப்பாக்கிய ‘மிர்ச்சி’ சிவா! பி.ஆர்.ஓ.வுக்கு ஷாக் கொடுத்த பி.ஆர்.ஓ.க்கள்!
மெளலி எம்.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் நவீன் டி.கோபால் டைரக்ஷனில் உருவாகியுள்ள படம் ‘உசுரே’. இதில் ஹீரோவாக டி.ஜே.அருணாச்சலம், ஹீரோயினாக ‘பிக்பாஸ்’ ஜனனி ஆகியோர் நடிக்கின்றனர்.
படத்தின் பாடல்கள் & டிரெய்லர் வெளியீட்டு விழா, 14—ஆம் தேதி காலை சென்னை பிரசாத் லேப்பில் நடந்தது. விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக டைரக்டர்கள் ஆர்.வி.உதயகுமார், சுப்பிரமணிய சிவா, பேரரசு, நடிகர் ‘மிர்ச்சி’ சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
படத்தின் தயாரிப்பாளர், ஹீரோ, ஹீரோயின், ஆகியோர் மிகவும் சுருக்கமாக பேசி அமர்ந்தனர். மியூசிக் டைரக்டர் மட்டும் இழுஇழுவென இழுத்தார்.
”நான் இப்ப பேசுறேன் பாரு. உங்களை தெறிச்சு ஓடவிடுறேன் பாரு”ன்னு மனசுக்குள் நினைச்சுகிட்டு மைக் முன் வந்திருப்பார் போல ஆர்.வி உதயகுமார். “நான் எப்போதுமே கவிஞர்களை பெருசா மதிப்பவனில்லை. என்ன பெரிய கவிஞன், நான் நினைப்பதை, என்னோட உணர்வுகளை எந்தக் கவிஞனாலும் பாடல்களாக எழுத முடியாது. அதனால தான் என் படத்தின் பாடல்கள் எல்லாத்தையும் நானே எழுதினேன். இங்கே இருக்கும் கவிஞன் எவனுக்கும் அறிவில்லை” இப்படி ’நான் ஸ்டாப்’பாக நான்பது நிமிடங்கள் பேசி அரங்கில் இருப்பவர்களின் உசுரை வாங்கினார் உதயகுமார்.
உதயகுமாரே பரவாயில்லை போல என்கிற ரேஞ்சுக்கு பேசி டென்ஷனாக்கினார் பேரரசு.
இந்த இருவரால், அரங்கில் ஏ.சி.யையும் மீறி உஷ்ணக் காற்று அடித்த போது, மிர்ச்சி சிவாவின் பேச்சு தான் அனைவரையும் கலகலப்பாக்கி, குளுகுளுப்பாக்கியது.
படத்தின் பி.ஆர்.ஓ.சாவித்ரிக்கு சக பி.ஆர்.ஓ.க்களான டைமண்ட் பாபு பெரு.துளசி. பழனிவேல், சிங்காரவேலன், பாலன், ஆகியோர் பொன்னாடை போர்த்தி ஸ்வீட் ஷாக் கொடுத்தனர்.
-மாறன்