காவல்துறை அதிகாரியாக சசிகுமார்! ‘வதந்தி சீசன் -2’ வெப் சீரிஸ்!
மதுரையை கதைக் களமாக வைத்து ஆண்ட்ரூ லூயிஸ் எழுதி இயக்கிய ‘வதந்தி சீசன் -2 மிஸ்ட்ரி ஆஃப் மணி’ என்ற எட்டு எபிசோட்கள் கொண்ட வெப் சீரிஸ், வரும் ஆகஸ்ட் 07-ஆம் தேதி அமேஸான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. ‘வால்வாட்சர்ஸ் பிலிம்ஸ்’ புஷ்கர் & காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக இருக்கும் இந்த சீரிஸில் சப்-இன்ஸ்பெக்டர் மூஸா ரசாவாக சசிகுமார் நடிக்கிறார். இவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.
மதுரை ஏரியாவில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை தொடங்கும் போது அங்கே மனித எலும்புக்கூடுகள் கிடைக்கின்றன. இதை விசாரிக்க மூஸா களம் இறங்கும் போது மணி என்கிற பழைய கைதியை நோக்கி சந்தேகம் கிளம்புகிறது. இதற்கான தடயங்களும் கிடைக்க, அதன் பிறகு விறுவிறுப்பாக நகரும் க்ரைம் த்ரில்லர் தான் இந்த வெப்சீரிஸ்.
“எங்களின் ஓடிடி பிளாட்ஃபார்மில் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பான ‘வதந்தி’ வெப் சீரிஸ் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்போது மீண்டும் புஷ்கர்-காயத்ரியுடன் சசிகுமார் சாரும் இணைந்திருப்பது எங்களுக்குப் பெருமை. தமிழில் தயாராகி, தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் டப் செய்யப்பட்டும் ஆங்கில சப் டைட்டிலுடனும் 15 மொழிகளில் உலகெங்கும் ஆகஸ்ட்.07ஆம் தேதி வெளியாகிறது” என்கிறார் பிரைம் வீடியோ இந்தியா இயக்குனர் நிகில் மாதோக்.
“நம் மண்ணின் கலாச்சாரத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் பிரைம் வீடியோவில் மதுரை மண்ணின் மைந்தரான சசிகுமார் முதன்முதலில் வெப் சீரிஸில் நடித்திருப்பது மிகமிக மகிழ்ச்சி. உலகெங்கும் இருக்கும் ரசிகர்களின் வரவேற்பைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்கிறார்கள் புஷ்கரும் காயத்ரியும்.
— ஆண்டவர்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.