வள்ளல் சீதக்காதி மரைக்காயருக்கு நினைவிடம் அமையுமா ?
வள்ளல் சீதக்காதி மரைக்காயருக்கு நினைவிடம் அமைக்க கோரிக்கை. தொல்லியல் ஆய்வாளர் விஜயராமு இது குறித்து நம்மிடம் பேசும் போது…
அயல் நாட்டினர் இந்தியாவிற்கு வணிகம் செய்யத்தான் வந்தார்கள். அவர்கள் நம் நாட்டைக் கைப்பற்றி நம்மை அடிமையாக்கி இந்திய செல்வங்களை எல்லாம் கொள்ளையடித்துச் சென்றனர் . அவர்களின் வணிகத்தை முதலில் தடை செய்ய வேண்டும் என்று எண்ணிய தியாகி வ.உ. சிதம்பரனார் கி.பி 1906 ஆம் ஆண்டில் ஒரு கப்பலை வாங்கி இயக்கி அன்னியரின் வணிகத்திற்கு தடையாக இருந்தார்.
முன்னதாக அன்னியர்கள் (கி.பி 1600 களில்) வணிகத்தை அதிகரிப்பதற்காக கிழக்குக் கடற்கரை பகுதியில் தங்களது வணிகக் கப்பல்களை இயக்கினர். அப்போது கிழக்கு கடற்கரை பகுதியில் பெரும் வணிகவேந்தராக இருந்தவர் சீதக்காதி மரக்காயர் அவர்கள் . மரக்காயர் அன்னியர்களுக்கு எதிராக தனது கப்பல்கள் மூலம் கீழ்த்திசை நாடுகளுக்கு இந்திய பொருள்களை கீழக்கரை துறைமுகத்தின் வழியாக ஏற்றுமதி இறக்குமதி செய்தார். இதனால் அன்னியர்களின் வணிகம் பெரிதும் தடைபெற்றது . இதன் மூலமாக அன்னியரை எதிர்த்த முதல் இந்திய தேசியவாதி சீதக்காதி மரக்காயர் அவர்கள் எனலாம்.
பண்டகசாலை
ஏற்றுமதி இறக்குமதி செய்த பொருட்களை பாதுகாப்பாக சேமித்து வைக்க சீதக்காதி மரக்காயர் அவர்களால் கட்டப்பட்ட பண்டகசாலை தான் இக்கட்டிடம். மேலும் இப்பண்டகசாலை தான் அவர் தங்கி இளைப்பாறும் வசந்த மண்டபமாகவும் இருந்துள்ளது. தற்போது மத்திய அரசு வசம் உள்ள இக்கட்டிடம் சிதலம் அடைந்து காணப்படுகிறது .
சேதுநாட்டின் வளர்ச்சியில்
மன்னர் கிழவன் சேதுபதி தனது ஆட்சிக் காலத்தில் ஒரு பெரிய அரண்மனையைக் கட்டி இராமநாதபுரத்தை தலை நகராக்கினார். இதற்கு பெரும் உதவிக்கரமாக இருந்த சீதக்காதி மரக்காயர் , மன்னரின் நண்பராகவும் அமைச்சராகவும் இருந்துள்ளார். மரக்காயர் பெரும் வணிகராக இருந்ததால்சேது நாட்டு வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து சேதுபதியின் கஜானாவை நிரப்பினார் என்கிறது வரலாறு..
கி.பி.1686 இல் ஔரங்கசீப் ஆட்சிக்கு உட்பட்டிருந்த வங்கதேசத்திற்கு ஆளுநராக இருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கிறது.
தமிழ் வளர்ச்சியில்
சங்கம் அமைத்து தமிழை வளர்த்தவர்கள் சேது மன்னர்கள். சேது மன்னருடன் செந்தமிழில் உரையாடி மன்னரை தமிழ் பாவால் புகழ்ந்து பரிசுகள் பெற்ற புலவர்கள் கீழக்கரைக்கும் யாத்திரையாக நடை மேற்கொண்டார்கள். அங்கு செந்தமிழ் வள்ளல் சீதக்காதி அவர்களைக் கண்டு செந்தமிழின் மாண்புகளைச் சொல்லி வள்ளலை மகிழச் செய்து பொன்னும் பொருளும் பெற்றுச்சென்றனர். மேலும் தமிழின் மீது பற்று கொண்ட வள்ளல் பல சிற்றிலக்கியங்களை, செந்தமிழ் புலவர்கள் மூலமாக இயற்றவும் செய்தார். மரைக்காயர் கொடுப்பதில் சாதி மதம் பார்க்காமல் வாரி வழங்கிய வள்ளல் “செத்தும் கொடை கொடுத்த” வள்ளல் என்ற பெயரும் பெற்றவர்.
விளையாட்டு மைதானம்
சேதுநாட்டு வளர்ச்சியில் மன்னருக்கு மரக்காயர் பெரிதும் உதவிக்கரமாக இருந்ததால் ,இராமநாதபுரத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்திற்கு சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கம் எனும் பெயரை தமிழக அரசு சூட்டி இந்த தேசியவாதி வள்ளலுக்கு மேலும் பெருமை சேர்த்தது.
வணிக நோக்கில் வந்து நாட்டை பிடித்த அயல் நாட்டினருக்கு முன்னதாகவே சிம்ம சொப்பனமாக இருந்த தேசப்பற்று மிக்கவரும், சேது நாட்டின் கஜானாவை நிரப்பியவரும் செந்தமிழ் வளர்த்த தமிழ் பற்றாளருமானவர் சீதக்காதி. மேலும் கொடுப்பதில் சாதி மதம் பாராத பெரும் வள்ளலாகவும் ,செத்தும் கொடை கொடுத்த வள்ளல் என்ற பெயர் பெற்றவருமான சீதக்காதி அவர்களின் பண்டகசாலை அவருக்கு பின் டச்சுக்காரர்கள் வசம் சென்றது. அதன் பின் கி.பி 1906 முதல் இன்றுவரை மத்திய அரசிடம் உள்ளது. தற்போது சிதைந்து பரிதாப நிலையில் காட்சியளிக்கிறது .
வள்ளல் சீதக்காதியின் இந்த பண்டகசாலையை வள்ளலின் நினைவு இடமாக மாற்றியும், அருகிலேயே நினைவு மண்டபம் அமைத்தும் தரும்படி தமிழக அரசையும், கீழக்கரை நகராட்சியையும் தொன்மை பாதுகாப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகிறார்கள்.
நினைவு மண்டபம் அமைந்தால் , அங்கு முன்னதாக சீதக்காதி காலத்தில் அமைத்த கலங்கரை விளக்கமாகிய கோரியும், தற்போது அமைந்துள்ள புதிய கலங்கரை விளக்கமும் , அழகிய கடற்கரையும் சேர்ந்து கடற்கறை மேலும் அழகுபெற்று சிறந்த சுற்றுலா தளமாக அமையும். கீழக்கரைக்கும் பெருமைசேர்க்கும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
– பாலாஜி