”சின்னப் படங்கள் சிக்கி சின்னாபின்னமாகுது” – ‘வள்ளிமலை வேலன்’ விழாவில் கொந்தளித்த உதயகுமார்!
‘எம்.என்.ஆர். பிக்சர்ஸ்’ பேனரில் எம்.நாகரத்தினம் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம் ‘வள்ளிமலை வேலன்’. எஸ்.மோகன் டைரக்ஷனில் உருவாகியுள்ள இப்படத்தின் ஹீரோயினாக இலக்கியா நடித்துள்ளார். மொட்டை ராஜேந்திரன், செம்புலி ஜெகன், முத்துக்காளை உட்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : மணிகண்டன், இசை : ஆல்ட்ரின், எடிட்டிங் : ராஜேந்திர சோழன், ஸ்டண்ட் : ‘இடி மின்னல்’ இளங்கோ, பி.ஆர்.ஓ.கேப்டன் எம்.பி.ஆனந்த்.
படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினரை வாழ்த்த, டைரக்டர்கள் வீ.சேகர், ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர். ஹீரோ நாகரத்தினத்தின் சொந்த ஊரான வேலூர் மாவட்டம் வள்ளிமலை கிராம மக்களே திரண்டு வந்திருந்ததால், விழா நடந்த பிரசாத் லேப் தியேட்டரே திக்குமுக்காடியது.
“ஜாம்பவான்கள் கோலோச்சும் திரையுலகில் புதியவனான நானும் காலடி எடுத்து வைத்துள்ளேன். உங்களின் மேலான ஆதரவைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என சுருக்கமாக பேசி முடித்தார் நாகரத்தினம்.
இயக்குனர் வீ.சேகர்,
“இப்பல்லாம் முருகன் தான் சீசன் போல. அவர் பெயரில் மாநாடு நடத்தினார்கள். இப்போது ‘வள்ளிமயில் வேலன்’ வருகிறான். இப்படத்தை நல்ல நாளில், நல்ல தியேட்டர்களைப் பார்த்து ரிலீஸ் செய்யுங்கள்”.
ஆர்.வி.உதயகுமார்,
“சினிமா இப்போது மோசமான நிலையில் தான் இருக்கிறது. சின்னப்படங்களை ரிலீஸ் பண்ணுவதற்குள் அப்படத்தின் தயாரிப்பாளர்கள் பெரும்பாடுபடுகிறார்கள். தியேட்டர்காரர்களிடம் சிக்கிச் சின்னாபின்னமாகிறது சின்னப் படங்கள். தயாரிப்பாளர்கள் சங்கம் இதற்கொரு வழியைக் கண்டு பிடிக்காவிட்டால் தமிழ் சினிமாவின் நிலை படுமோசமாகிவிடும், ஜாக்கிரதை” என கொந்தளித்தார்.
படத்தின் இயக்குனர் மோகன், ஹீரோயின் இலக்கியா, மியூசிக் டைரக்டர் ஆல்ட்ரின் ஆகியோர் படத்தில் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
— மதுரை மாறன்