வந்தே பாரத் ஒரு வசதியான ரயில் என்பதில் சந்தேகம் இல்லை ஆனால்…..
வந்தே பாரத் ஒரு வசதியான ரயில் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
கோவையில் இருந்து சென்னைக்கு ஐந்தரை மணி நேரத்தில் போய் சேர்ந்துவிடலாம்.
காலை ஆறு மணிக்கு புறப்பட்டால் பதினோரு மணிக்கெல்லாம் பெரம்பூர் ரயில் நிலையம் கண்ணில் படுகிறது.
எல்லாம் சரிதான். அண்மையில் நான் வந்தே பாரத்தில் பயணம் செய்த பொழுது கம்பார்ட்மெண்ட் நிறைந்திருந்தது. எல்லோருடைய இருக்கைகளுக்கு முன்பாக தமிழ் நாளிதழ்களும் ஆங்கில நாளிதழ்களும் இஸ்திரி போட்ட தினுசில் அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்தன.
ரயில் புறப்பட்டது. ஆனால் பயணிகளில் யாருமே அந்த நாளிதழ்களை எடுத்து படிக்கவோ குறைந்தபட்சம் புரட்டிப் பார்க்க கூட இல்லை. எல்லோரும் செல்போன்களில் பேசிக் கொண்டிருந்தார்கள். அல்லது ரீல்ஸ்களை பார்த்து தங்களுக்குள் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
காலை உணவுக்கு ஆர்டர் செய்திருந்தவர்கள் பாதிக்கு மேற்பட்டவர்கள் தட்டில் உணவை பாதியளவே சாப்பிட்டுவிட்டு,மீதியை குதறிவிட்டு வீணடித்து இருந்தார்கள். பயணிகளில் ஒருவர் மட்டுமே உணவின் தரம் சரியில்லை என்று ஊழியரிடம் சின்னதாக சண்டை போட்டுவிட்டு, தூங்க ஆரம்பித்து விட்டார்.
எந்த ஒரு பயணியும் இன்னொரு பயணியிடம் பேச்சு கொடுக்கவேயில்லை. முன்பெல்லாம் ‘ரயில் சிநேகம்’ என்கிற ஒரு வார்த்தையே உருவாகி, அது ஆழமான நட்பாக மாறிய நிகழ்வுகளும் உண்டு.
இன்றைக்கு பயணிகள் நாட்களைத் தள்ளிக் கொண்டு போகும் நடைவண்டிகளாக மாறிவிட்டார்கள்.
முதல் பி.கு.
ஐந்து வரிசை தள்ளி உட்கார்ந்திருந்த ஒரு பெண் பயணி மட்டும், என்னைப் பார்த்துவிட்டு தன் ஆட்காட்டி விரலால் காற்றில் எழுதுவது போல் அபிநயத்துவிட்டு நீங்கள் எழுத்தாளர்தானே என்று சைகையில் கேட்டு வணக்கம் சொன்னது மட்டுமே வந்தே பாரத் எனக்கு கொடுத்த ஒரு வரம்.
இரண்டாவது பி.கு
நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் என் உருவத்தை ஓவியமாக உருவாக்கியவர் ஒருவாசகர். பெயர் அண்ணாமலை.
அவருக்கு என் நன்றி.
— ராஜேஸ்குமார் – எழுத்தாளர்