துறையூரில் வரலட்சுமி நோன்பு சிறப்பு வழிபாடு !
துறையூரில் வரலட்சுமி நோன்புசிறப்பு வழிபாடு
திருச்சி மாவட்டம் துறையூர் பெரிய கடை வீதியில் உள்ள வாசவி அம்மன் திருக்கோவிலில் வரலட்சுமி நோன்பு விரதத்தை முன்னிட்டு சுமங்கலி பெண்கள் ஒன்று கூடி கூட்டு பிரார்த்தனை செய்தனர். வருடந்தோறும் வரக்கூடிய வரலட்சுமி நோன்பு விரதத்தன்று சுமங்கலி பெண்கள் அனைவரும் கோவில்களில் ஒன்று கூடி தங்களது திருமாங்கல்யம் நீடித்து நிலைத்திருக்க வேண்டும் எனவும் தங்களது கணவன்மார்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் எனவும் பெண்கள் அனைவரும் ஒன்று கூடி கூட்டு பிரார்த்தனை செய்வது வழக்கம்.
இன்று வரலட்சுமி நோன்பு விரதம் என்பதால் துறையூர் பெரிய கடை வீதியில் உள்ள வாசவி அம்மன் கோவிலில் ஸ்ரீ வரலட்சுமி பூஜை மற்றும் சொர்ண கௌரி பூஜை நடைபெற்றது இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சுமங்கலி பிரார்த்தனை செய்தனர். முன்னதாக விக்னேஸ்வர பூஜையுடன் ஸ்ரீ வரலட்சுமி நோன்பு வழிபாடு துவங்கியது ..கும்பத்தில் வர்ணமாலைகள் கொண்டு அம்பாளை அலங்காரம் செய்திருந்தனர்.
அலங்கரிக்கப்பட்ட அம்பாளுக்கு பெண்கள் அனைவரும் சங்கல்பம் செய்து கொண்டு அம்பாளுக்கு நூற்றியெட்டு போற்றிகளை சொல்லி வழிபாடு செய்தனர்.வழிபாட்டிற்கு வந்திருந்த பெண்கள் அனைவரும் அவரவர்கள் கொண்டு வந்திருந்த மங்கள பூஜை பொருட்களை வைத்தும் திருவிளக்கு ஏற்றியும் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் அம்பாளுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வழிபாட்டின் முடிவில் பிரதானமாக அலங்கரிக்கப்பட்ட அம்பாளிடம் வைத்து பிரார்த்தனை செய்த ,பூக்களுடன் கூடிய மஞ்சள் சரடினை அனைத்து சுமங்கலி பெண்களும் பக்தியுடன் தங்களது கழுத்தில் அணிந்து கொண்டனர் .வழிபாட்டில் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது .