அபசகுணமாக நினைக்கும் ஆந்தைகள் நமக்கு நண்பன் ! எப்படித் தெரியுமா? – தொடா் 03
உலகம் முழுவதும் உள்ள ஆந்தைகளை பாதுகாக்கவும்; அது பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் -4 ஆம் நாள் சர்வதேச ஆந்தைகள் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
நாம் அபசகுணமாக நினைக்கும் ஆந்தைகளுக்கென்று உலகம் முழுவதும் ஒரு தனி நாளே இருப்பது ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா!!
இதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளில் பல கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் சின்னமாக ஆந்தைகள் உள்ளன.
உலகெங்கிலும் 244 வகையான ஆந்தைகளும், ஆசிய அளவில் 104 வகை ஆந்தைகளும், இந்தியாவில் மட்டும் 32 வகை ஆந்தைகளும் இதுவரை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கையில் 75 வகை ஆந்தைகள் சிவப்பு பட்டியலில் (Red List) இடம்பிடித்துள்ளது.
ஆந்தைகளை ஏன் பாதுகாக்க வேண்டும்?
அபசகுணக்குருவி, சாவுக்குருவி என பல மூடநம்பிக்கை பெயர்களால் அழைக்கப்படும் ஆந்தைகள் நமக்கு நண்பன், எப்படித் தெரியுமா?
வயல்களிலும் உணவுக் கிடங்குகளிலும் உணவுப் பொருட்களுக்கு பெருத்த சேதம் விளைவிப்பது எலிகள். எலிகளால் ஓர் ஆண்டுக்கு சராசரியாக 5-10% பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. ஓர் ஆண்டுக்கு எலிகளினால் 20 மெட்ரிக் டன் வயலிலும், 33 மெட்ரிக் டன் சேமிப்பு கிடங்குகளிலும் வீணாகிறது.
எலி ஒரு ஆண்டில் ஐந்து ஆறு முறை குட்டிகள் போடும். ஒவ்வொரு முறையும் சுமார் 10-12 குட்டிகள் வரை ஈன்றும். ஒரு ஜோடி எலிகள் அதன் வாழ்நாளில் சுமார் 500 முதல் 2000 குட்டிகள் போடுகிறது. இப்படி அளவுக்கு அதிகமாக பெருகும் எலிகளை கட்டுக்குள் வைத்திருப்பதில் ஆந்தைகளின் பங்கு அளப்பரியது.
இந்தியா விவசாயம் சார்ந்த நாடு. இங்கு விவசாய நிலங்கள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தும் எலிகளையும், கொறித்துண்ணிகளையும், பூச்சிகளையும் வேட்டையாடுவதால் ஆந்தைகள் விவசாயிகளின் நண்பனாக திகழ்கிறது.
ஆனால், ஆந்தைகளின் மீதுள்ள மூட நம்பிக்கையால் அவைகள் இங்கு பெருமளவு அச்சுறுத்தல்களை சந்தித்து வருகின்றன. அதுவும் வட இந்தியாவில் மாந்திரிகம் என்ற பெயரில் பெருமளவில் ஆந்தைகள் வேட்டையாடப்பட்டும், அழிக்கப்பட்டும் வருகின்றன.
2018-ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் மாந்திரிகம் என்ற பெயரில் சுமார் 17000 ஆந்தைகள் அழிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.
இதனை காப்பாற்ற இந்தியாவில் 2018-ஆம் ஆண்டு பூனாவில் உள்ள “சாவித்திரி பாய்பூலே பூனே பல்கலைக்கழகம்”, “மாநில வனத்துறை” மற்றும் “WWF” இணைந்து இந்தியாவில் 6-ஆவது ஆந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு மாநாடு நடத்தப்பட்டது. ஆந்தைகளை பாதுகாக்கவும், அதுசார்ந்த ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்தவும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் ஆண்டுதோறும் உலக அளவில் உள்ள ஆந்தைகள் ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொண்டு தங்களின் ஆராய்ச்சி அறிக்கைகளை பகிர்ந்து கொள்வார்கள்.
மேலும், பூனே மாவட்டத்தில் உள்ள பிங்கோரியில் இந்தியாவிலேயே முதல்முறையாக “ஆந்தை திருவிழா” 2018 நவம்பர் 29-இல் தொடங்கப்பட்டு 2-நாள் விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அண்டார்க்டிகா தவிர, மற்ற எல்லா நிலப்பரப்புகளிலும் ஆந்தைகள் உள்ளன. இரவாடிப் பறவையான ஆந்தைக்கு மூன்று இமைகள் உள்ளன. ஒன்றை மூடித் திறக்கவும், மற்றொன்றைத் தூங்குவதற்கும், இன்னொன்றைக் கண்ணை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்திருக்கப் பயன்படுத்திக் கொள்ளும்.
ஆந்தை அலறுவது அதன் இணையை ஈர்ப்பதற்க்காகத்தானே தவிர, அது மனிதர்களின் மூடநம்பிக்கையான அபசகுணம் அல்ல.
மேலும், ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது என்ற கருத்தும் இங்கு நெடுங்காலமாக இருக்கின்றது. ஆனால், ஆந்தைக்கு பகலில் நன்றாகவே கண் தெரியும். ஆந்தைகளின் கருவிழித்திரை நம்மை விட 5 மடங்கு பெரியது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இது இரவில் மட்டும் வருவதற்குக் காரணம் இவைகளின் பிரதான உணவான எலிகள் இரவில் தான் அதிகமாக நடமாடும் என்பதாலும், பகலில் வேட்டையாடும் பறவைகளிடம் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளவும் ஆந்தைகள் பகலில் வெளியில் வருவதில்லை.
மூடநம்பிக்கைகளைத் தவிர்த்து, விவசாயிகளின் நண்பனாகத் திகழும் ஆந்தைகளை பாதுகாப்போம்!! விவசாயம் காப்போம்!! இயற்கையை காப்போம்!!
— ஆற்றல் பிரவீன்குமாா், சூழல் செயல்பாட்டாளா்.
தொடரும்.
மேற்கொள் :
* ஆந்தை அலறுவது அதன் இணையை ஈர்ப்பதற்க்காகத்தானே தவிர, அது மனிதர்களின் மூடநம்பிக்கையான அபசகுணம் அல்ல.
* ஆந்தைக்கு பகலில் நன்றாகவே கண் தெரியும். ஆந்தைகளின் கருவிழித்திரை நம்மை விட 5 மடங்கு பெரியது.