இருவாட்சி காவியம் : பறவைகள் பலவிதம் – தொடா் 14
ஆரோக்கியமான மழைக் காடுகளின் அளவுகோல் இந்த இருவாட்சி பறவை. நம் தமிழ் நாட்டில் உள்ள மழைக்காடுகள் இன்னமும் அத்தனை செழுமையாக உள்ளதற்கு சாட்சி இந்த இருவாட்சி.
இருவாட்சி என்பது இருவாச்சி இனப்பறவைகளின் குடும்பப்பெயர் ஆகும். இக்குடும்பத்தை “ஹார்ன்பில்” Horn bill என அழைக்கிறார்கள். இவை அளவில் சற்று பெரிதானவை. பறக்கும்போது ஹெலிகாப்டர் பறப்பதைப் போல இருக்கும். அதேபோல ஒலி எழுப்பக்கூடியவை. பெரிய அலகை உடையவை. அலகுக்கு மேலே கொண்டை போன்ற அமைப்பு இருக்கும். இவை சுமார் 30 முதல் 40 ஆண்டுகள் வாழக்கூடியது. உலகம் முழுவதும் 54 வகை இருவாச்சிகள் இருக்கின்றன. இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகள், அருணாசலப்பிரதேசம், அந்தமான் தீவுகள், நேபாளம் ஆகிய இடங்களில் வாழ்கின்றன. இந்தியாவில் 9 வகை இருவாச்சிகள் உள்ளன. தென்னிந்தியாவில் 4 வகை இருவாச்சிகள் காணப்படுகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலைகளில் காணப்படும் நான்கு வகை இருவாச்சிப்பறவைகள் பெரும்பாத இருவாட்சி, மலபார் இருவாட்சி , சாம்பல் நிற இருவாட்சி . கேரள மாநிலத்தில் இருவாச்சியை மாநிலப் பறவையாக அறிவித்துள்ளனர்.

கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் சாம்பல் இருவாச்சிகள் உள்ளன. இவை அளவில் சற்றே சிறியது.
இருவாட்சிப் பறவைகள் உட்கொண்டு வெளியேற்றும் எச்சத்தில் உள்ள தாவர விதைகள் உயிர்ப்புத்தன்மைமிக்கவை. இப்பறவைகள் எச்சங்களால்தான் காட்டில் இருக்கிற மரங்கள் பெருகுகின்றன. இப்பறவைகள் இருக்கிற காடுகளை மழைக்காடுகள் என அழைக்கிறார்கள். மழைக் காடுகள் இல்லையென்றால் இருவாட்சி பறவைகளும் இல்லை எனப் பறவை ஆர்வலர்கள் கருதுகின்றனர். காடு வளர்வதற்கு முக்கிய காரணியாக இப்பறவைகள் இருக்கின்றன.
இப்பறவைகள் இப்போது அருகி வரும் இனமாக ஐ.நா.வால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதால், இருவாட்சிப் பறவைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாகப் பறவை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மிகவும் உயரமான மரங்களில் வசிக்கும் இருவாட்சி பறவைகள், மரங்கள் அழிக்கப்படுவதன் காரணமாக தன் இனத்தைப் பெருக்கிக்கொள்ள முடியாமல் தவிக்கின்றன. இருவாட்சி பறவை இனம் அழிந்தால் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் பத்து வகை மரங்கள் அழிந்து விடும் என்கிறார்கள் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்.
ஒன்றை இழந்த பிறகு அவை இல்லை இல்லை என வருந்துவதை விட அவை இருக்கும்போது பாதுகாப்பதே சிறந்தது இல்லையா? பறவைகளின் காதலை எந்தப் புனைவும் இல்லாமல் எழுதவேண்டுமானால் இருவாச்சி பறவையை பற்றித்தான் எழுதவேண்டும்.
தொடரும்
ஆற்றல் பிரவீன்குமார்- சூழல் செயல்பாட்டாளா்