சிட்டு … சில்லை … சிலம்பன் … சங்க இலக்கிய பறவை ! பறவைகள் பலவிதம்- தொடர் – 16
தமிழில் தான் எத்தனை அழகான வார்த்தைகள் இந்த பறவைகளுக்கு. சின்னதாக இருந்தால் சிட்டு. அதைவிட கொஞ்சம் பெரிதாக இருந்தால் சில்லை. அதைவிட, கொஞ்சம் பெரிதாக இருந்தால் சிலம்பன். அப்படியே ஒவ்வொரு பறவையின் அளவைப் பொருத்தும் அதன் பெயரை அழகாக சங்க இலக்கியங்களில் கூட பயன்படுத்தியுள்ளார்கள்.
நம் ஊர்களில் சர்வசாதாரணமாக சிட்டுக்குருவி அளவேயான இந்த புள்ளி மார்பு சில்லைகளை பார்க்க முடியும். உங்கள் தெருக்களில் உள்ள மின்சார கம்பிகளில் அவ்வப்போது, அமர்ந்து விட்டு போகும். சற்று உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே இதன் உடம்பில் இருக்கும் புள்ளிகளை பார்க்க முடியும். ஆம் இதன் பெயர்தான் திணைக்குருவி என்றும் புள்ளிச் சில்லை என்றும் அழைக்கப்படும் சிட்டுக்குருவி அளவிலான சிறு பறவை.
உடலின் மேற்புறம் பழுப்பு நிறத்தில் இருக்கும். மார்பு, வயிற்றுப்புறம் செதில் போன்ற புள்ளிகளுடன் காணப்படும். அலகு பெரிதாக, கூம்பு வடிவத்தில் இருக்கும். சில்வண்டு போன்று சத்தம் எழுப்பும். கூட்டமாக வாழும். சிறு புற்கள், பூச்சிகள், பழங்கள் போன்றவற்றை உண்ணும். புற்களின் சிறு கிழங்குகளையும் கொத்தி உண்ணும். இதன் அலகு திணை உண்ண ஏற்ற வகையில் அமைந்திருக்கிறது. இதனால் திணைக்குருவி என்றும் குறிப்பிடப்படுகிறது.
தோற்றத்தில் ஒரே மாதிரி தெரிந்தாலும், ஆண் பறவைகளுக்கு புள்ளிகள் அழுத்தமான வண்ணத்திலும், தொண்டைப் பாகம் ஆழ்ந்த பழுப்பிலுமாக இருக்கும். பனை, தென்னை மரங்களில் காய்ந்து தொங்கும் சல்லடை போன்ற நார்கள் சில்லாட்டை என்பர். மென்மையான இந்த சில்லாட்டைகளைக் கொண்டு கூடுகளைத் தயார் செய்வதால், இவற்றுக்குச் சில்லைகள் என்றும் பெயர் உண்டு. புற்கள், வாழைநார்கள், இலைகள், பறவைகளின் இறகுகள் போன்றவற்றைக்கொண்டும் கூடு கட்டும். கூடு அமைக்கும் பொழுது, மிகவும் சுறுசுறுப்பாக ராட்டினம் போல் சுற்றிச் சுற்றி வரும். இருபாலினங்களும் இணைந்தே கூடு கட்டும். ஆறு முட்டைகள் வரை இடும்.
முட்டைகளை ஆண், பெண் பறவைகள் அடை காக்கும். பதினைந்து நாட்களில் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளியில் வரும். குஞ்சுகள் வெளிவரும் பருவ காலத்தைப் பொறுத்து 7 முதல் 18 மாதங்களில் வளர்ந்து இனப்பெருக்கத்துக்குத் தயாராகும். இவை பல வண்ணங்களில் உள்ளன. தமிழகத்தில் பெரும்பாலும் காணப்படுகிறது.
தொடரும்
ஆற்றல் பிரவீன்குமார்