மதுரையில் வேதாந்தாவின் டங்ஸ்டன் சுரங்கம் ! பத்து கிராமங்கள் பாதிக்கும் ! ஆட்சியரிடம் ஆட்சேபனை !
வேதாந்தாவின் டங்ஸ்டன் சுரங்கம் 5000 ஏக்கரில் மதுரையில் அமைந்தால் 10 கிராமம் அழியும் இதைத் தடுக்கக் கோரி சூழலியல் ஆர்வலர் முகிலன் தலைமையில் கிராம மக்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருக்கிறார்கள்.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்துக்கு உட்பட்ட நாயக்கர் பட்டி பிளாக்கில் 2015.51 ஹெக்டர், அதாவது 5000 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை கையகப்படுத்தி அதில் டங்க்ஸ்ட கனிம சுரங்கத்தை எடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இதற்காக வேலைகள் நடைபெற்று வருவதாகவும் இது தொடர்பாக பத்திரிக்கைச் செய்தி வெளியானது.
முதல் அட்டவணையில் பகுதி டி பட்டியலிடப்பட்டுள்ள முக்கிய கனிமங்களுக்கு கனிம சலுகைகளை வழங்குவதற்கான ஒன்றிய அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி நடத்தப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசுக்கு நேரடியாக எந்த பங்கும் இல்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த டங்ஸ்டன் சுரங்கம் அமைந்தால் முத்துவேல்பட்டி , குளனிப்பட்டி, கிடாரிப்பட்டி, எட்டி மங்கலம், அரிட்டாப்பட்டி, வெள்ளாளப்பட்டி சிலீப்பியாபட்டி, செட்டியார்பட்டி நாயக்கர் பட்டி எனும் 10 கிராமங்கள் அழியும் நிலை ஏற்படும். மேலும், அரீட்டாப்பட்டி பல்லுயிர் தளமும் அங்கு இருக்கும் தொல்லியல் சின்னங்களும் அழிய வாய்ப்பு இருக்கிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
எனவே, இதனை தடுத்து நிறுத்த அரசு முடிவு எடுக்க வேண்டும் எனக் கூறி தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தில் ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.
இதனையடுத்து, செய்தியாளர்களுடன் பேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் ” மேலூர் வட்டத்தில் ஸ்டெர்லைட் வேதாந்த நிறுவனத்தின் துறை நிறுவனம் 5000 ஏக்கர் பரப்பளவில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 10 கிராமங்கள் அழிந்து மக்கள் அகதிகளாக மாறும் சூழல் ஏற்படும். மேலும், சுரங்கம் விரிவடைந்தால் மேலூர் வட்டத்தில் பெரும்பாலான கிராமங்கள் அழியும் சூழல் ஏற்படும் தொல்லியல் சின்னங்களும் அழியும் நிலை ஏற்படும் எனவே இதனை தடுத்து நிறுத்த வேண்டும்” என கூறினார்.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.