விஜய் மாநாடும் எக்ஸிஸ்டென்ஷியல் கிரைசிஸும்!
விஜய் மாநாட்டுக்கு போய் வந்த ஒரு இளைஞனிடம் பேசினேன். தீவிர விஜய் விசிறி.
‘இப்பவும் நான் விஜய் ஃபேன்தான். ஆனா ஓட்டு போட மாட்டேன்’ என்றார். ஏன்?
‘ஏன்னா, அவர் அரசியல் பேசுறார்’
இந்த பதில் எனக்கு வினோதமாக இருந்தது. அவர் ஒரு கட்சி தொடங்கியுள்ளார். அரசியல் பேசத்தானே செய்வார்? அவர் பேசிய அரசியலில் சரக்கு இல்லை, மேம்போக்காக இருக்கிறது என்பது நமது விமர்சனம். ஆனால் இந்த இளைஞர் சொல்கிறார், ‘அவர் அரசியல் பேசுறார். அதனால் ஓட்டு போட மாட்டேன்’.
‘கூட வந்த உன் ஃப்ரெண்ட்ஸ். அவங்க மனநிலை என்ன?’
‘அவங்களும் இப்படிதான் நினைக்கிறாங்க’ எனில் எதை நினைத்து இவர்கள் மாநாட்டுக்குச் சென்றனர்? நடந்தது ஆடியோ லாஞ்ச் இல்லை. கட்சி மாநாடு. அரசியல் பேசாமல் எப்படி?
‘அது தெரியல சார்… இதைத்தானே மத்தவங்களும் பண்றாங்க?’
எனக்கு ஓரளவு பிடிபட்டது. இவர்கள், மற்ற அரசியல்வாதிகள் செய்யாத ஒன்றை விஜய்யிடம் எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் மனவெளியில் ஒரு அரசியல்வாதிக்கு வரைந்து வைத்திருக்கும் சித்திரத்துக்கு அப்பாற்பட்ட ஒன்று தேவைப்படுகிறது. அது எப்படிப்பட்டது என்பதை அவர்களுக்கு விவரிக்க தெரியவில்லை.
‘இதே மாதிரி பேசுறதுக்கு நிறைய பேர் இருக்காங்கல்ல சார்’
எனக்கு தலைசுற்றுவது போல் இருந்தது. ஏற்கெனவே அரசியலுக்கு வந்த நடிகர்கள் யார் மாதிரியும் இல்லாமல், இவர் முரட்டு சவடால் விடுகிறார். பேசி முடிக்கும் வரை மேடையில் உள்ளவர்களையே கடைசிவரை நிற்க வைக்கிறார். மாநாடு முடிந்து ட்விட்டரில் தீர்மானங்களை வெளியிடுகிறார். இவையும் இன்னபிறவும் நம் விமர்சனங்கள். ஆனால் ஒரு விஜய் ரசிகன், மெனக்கெட்டு மாநாட்டுக்கு போய் வந்தவன் இப்படி சொல்கிறான்.
அரசியலே பேசாத ஓர் அரசியல் தலைமையை எதிர்பார்க்கிறார்களா? இதுவே ஓவர் டோஸ் என்றால் இவர்களின் எதிர்பார்ப்புதான் என்ன? ஒரு சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சரா? ஒன்றும் புரியவில்லை. புரிந்தது என்னவென்றால், விஜய்யை மற்ற எல்லா அரசியல்வாதிகளையும் போல பேச வைத்தால், இந்த கூட்டம் கொஞ்சம் சிதறிவிடும். ‘இவரும் மத்தவங்க மாதிரிதான். இவர்ட்ட ஒண்ணும் புது அயிட்டம் இல்லை’ என்ற எண்ணம் வரும்போது, ஒரு பகுதி இளைஞர்களுக்கு மாயை விலகுமோ என்னவோ.
ஆக மொத்தம் ஒரு விஜய் ரசிகனிடம் பேசி முடிக்கும்போது நமக்கு ஒரு எக்ஸிஸ்டென்ஷியல் க்ரைசிஸ் வந்துவிடுகிறது. ‘நாமல்லாம் எதுக்காக வாழ்றோம்? எதுக்கு இந்த அரசியல் பேசுறோம்? இதுக்கு என்ன பொருள்? அரசியல் நீக்கம் செஞ்ச அந்த ’கொட்டை எடுத்த புளி’ எந்த கூமாப்பட்டில கிடைக்குது? இப்ப இவன் பைத்தியமா, நாம பைத்தியமா?’
— பாரதி தம்பி, பத்திரிகையாளர்