டிவிகே தலைவா் விஜ்ய்க்கு 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வழி நெடுகிலும் நின்று தொண்டர்கள் உற்சாக வரவேற்பு !
படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்வதற்கு மதுரை விமான நிலையம் வந்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வழி நெடுகிலும் நின்று தொண்டர்கள் உற்சாக வரவேற்பு…
இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் நடித்து வரும் ஜனநாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் அருகில் உள்ள தாண்டிக்குடி பகுதியில் நடைபெற உள்ளது.
இந்த படப்பிடிப்பிற்கு செல்வதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்த விஜய்க்கு அவரது ரசிகர்கள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். குறிப்பாக விஜயை பார்ப்பதற்காக ரசிகர்கள் விமான நிலையத்திற்கு வந்த போது அவர்களை போலீசார் முன்கூட்டியே தடுத்து விமான நிலையத்தின் வாயிலில் நிறுத்தி இருந்தனர்.
விமான நிலையத்திலிருந்து விஜய் வெளியே வந்ததும் கேரவன் வாகனத்தில் ஏறி நின்று தொண்டர்களுக்கு கை அசைத்தவாறு வாகனத்தில் வந்தார். அப்போது சூழ்ந்து இருந்த ரசிகர்கள் மலர்களை தூவியும், டிவிகே, டிவிகே என கோஷங்களை எழுப்பி ஆரவாரமாக வரவேற்பு அளித்தனர்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு மதுரைக்கு விஜய் வந்ததால் அவரது ரசிகர்கள், தொண்டர்கள் மதுரை விமான நிலையத்தில் இருந்து பெருங்குடி வரை இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு வழி நெடுகிலும் நின்று மலர்களை தூவி கோஷங்களை எழுப்பி ஆரவாரமாக வரவேற்பு கொடுத்தனர்.
ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதிலும் ஒரு ரசிகர் விஜய் வந்து கொண்டிருந்த வாகனத்தின் மீது ஏறி செல்பி எடுக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ரசிகர்கள் காவல்துறையினரின் தடுப்பு வேலிகளை மீறி விஜய் பார்ப்பதற்கு ஓடி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தொடர்ந்து தொண்டர்கள் படை சூழ விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாண்டிக்குடி பகுதியில் படப்பிடிப்பு பகுதிக்கு நடிகர் விஜய் சென்றார். தொடர்ந்து அவரது ரசிகர்கள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பின் தொடர்ந்த வாரே சென்று கொண்டிருக்கின்றனர். பெண்கள் உட்பட ரசிகர்கள் விமான நிலையத்தில் கூடியதால் விமான நிலைய சாலை மற்றும் பெருங்குடி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.