ராஜினாமா நெருக்கடியில் விஜயபாஸ்கர்!
குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதுதொடர்பாக குட்கா குடோன் உரிமையாளர் மாதவ ராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ், மத்திய கலால் துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில் முருகன், சுகாதாரத் துறை அதிகாரி சிவக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுத்தும் விசாரித்துள்ளனர். இதுதொடர்பாக கடந்த மாதம் சென்னை சிபிஐ முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை.
மேலும் குட்கா வழக்கை விசாரித்துவந்த சிபிஐ சூப்பிரண்டு கண்ணன், உதவி அதிகாரியாக இருந்த பிரமோத் குமார் ஆகியோர் மாற்றப்பட்டு, கண்ணனுக்குப் பதிலாக சூப்பிரண்டு பாபு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் குட்கா விவகாரம் தொடர்பான விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள சிபிஐ அதிகாரிகள், சென்னை சாஸ்திரிபவனிலுள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது உதவியாளர் சரவணன், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரிடம் கடந்த இரண்டு நாட்களாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். இரண்டாவது நாளாக காலை 10 மணிக்கு ஆஜரான அமைச்சர் விஜயபாஸ்கர், ரமணா ஆகியோரிடம், சிபிஐ அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணையைத் தொடர்ந்தனர்.
இதில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் சிபிஐ வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
சேலத்திலிருந்து இரவோடு இரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பியதையடுத்து, சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள இல்லத்தில், முதல்வரை அமைச்சர் விஜயபாஸ்கர் காலை நேரில் சந்தித்துப் பேசினார். சந்திப்பு 10 நிமிடங்கள் வரை மட்டுமே நடந்ததாகவும், குட்கா வழக்கு தொடர்பாக தன்னை சிபிஐ விசாரித்தது குறித்து முதல்வரிடம் அமைச்சர் எடுத்துரைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு இடையில் அமைச்சர் விஜயபாஸ்கரை ராஜினாமா செய்ய சொல்லி அமைச்சர்கள் தரப்பிலும், மத்திய அரசாங்கத்தின் சார்பிலும் நெருக்கடி கொடுக்கிறார்கள்.






