அந்த பெயரை வச்சா ஜெயிச்சிரலாம்னு நெனைக்காதீங்க ….
விஜயின் ஜனநாயகன் பட டிரெய்லர், பெரும் ஏமாற்றத்தை அளித்து உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கும் நிலையில், மாநில அரசியல் குறித்து இருக்கும் என நினைத்தால், இது அகில இந்திய (!) அரசியல்.. அதுவும், இந்தியாவை ஒழிக்க நினைக்கும் வில்லன்.. அதை எதிர்த்து போராடும் ஹீரோ.. என வழக்கமான பாணியில் உள்ளது.
தவிர, ஏற்கெனவே ஆந்திரா, தெலுங்கானாவில் ஜனவரி 9 அன்று தெலுங்கு படங்கள் வெளியாக உள்ளதால், `ஜனநாயகன்’ ரிலீஸாவதில் சிக்கல் இருப்பதாக தகவல் வெளியானது.
டிரெய்லர் வெளியான நிலையில், இப்படம், பாலகிருஷ்ணா நடித்த ‘பகவந்த் கேசரி’ தெலுங்கு படத்தின் ரீ மேக்தான் என்பது தெரிந்துவிட்டது. அதையே மீண்டும் தெலுங்கில் டப் செய்து வெளியிடுவது எந்த அளவுக்கு லாபம் தரும் என அங்குள்ள விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் யோசிப்பார்கள்.
டிரெய்லரில், இன்னும் சில சுவாரஸ்யமான விசயங்கள் உள்ளன.
விஜய் கதாபாத்திரத்தின் பெயர், வெற்றிகொண்டான். இந்தப் பெயரைக் கேட்டாலே, தி.மு.க. நினைவுதான் வரும். அக்கட்சியின் (மறைந்த) பேச்சாளர் வெற்றிகொண்டானை மறக்க முடியுமா..?
அவர் இருந்திருந்தால், “தம்பி விஜய்.. உங்களை நினைச்சா பக்கத்து வீட்டுப் பஞ்சாட்சரம் ஞாபகம்தான் வந்துச்சு. காலையிலேருந்து நைட்டு வரக்கும் கண்ணாடி முன்னாடி நின்னு ‘நான் தான் அடுத்த கலெக்டர்’னு சொல்லிக்கிட்டே இருப்பான், அப்புறம் அவனை கொண்டு போயி ஆஸ்பத்திரியில சேர்த்தோம்.

சரி.. என் பெயர்ல நடிக்கிறீங்களாம்.. இனிமேயாச்சும். மீட்டிங்ல சரியா பேசுங்க.! இன்னொரு முக்கியமான விசயம்… அந்த பெயரை வச்சா ஜெயிச்சிரலாம்னு நெனைக்காதீங்க. இத்தனை வருசமா தெருவுக்கு தெரு முட்டி வலிக்க நின்னனு பேசுறதுதான் மிச்சம்.. மத்தபடி ஒன்னும் பிரயோஜனம் இல்லே..” என்று கிண்டலடித்து இருப்பார்.
தவிர, ஜனநாயகன் என்ற பெயருக்கும் தி.மு.க.வுக்குமே தொடர்பு உண்டு. கடந்த 2021ல் தி.மு.க. ஆட்சியைப் பிடித்து மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆன நேரம். திருவாரூர் பத்திரிகையாளர் ஜெயகாந்தன், “ஜனநாயகன்” என்ற பெயரில், மு.க.ஸ்டாலின் அரசியல் வாழ்க்கை குறித்து புத்தகம் வெளியிட்டார்.
அதாவது, முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி எழுதப்பட்ட புத்தக தலைப்பு இப்போது திரைப்பட தலைப்பாகி இருக்கிறது.
டிரெய்லரில் விஜய் வலியுறுத்தும் விசயம்.. “எந்தப் பிரச்சினை வந்தாலும் மக்களோட நிப்பேன். பயந்து ஓட மாட்டேன்…” என்பதுதான். கரூரில் இவர் எஸ்கேப் ஆனதுதான் நினைவுக்கு வருகிறது.
— டி.வி.சோமு, மூத்த பத்திரிகையாளர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.