திருச்சி மாவட்டத்தில் 104 கிராம உதவியாளர் பணியிடங்கள் ! ஆட்சியர் அறிவிப்பு !
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை திருச்சி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் வெளியிட்டுள்ளார்.
இதன்படி, திருச்சிராப்பள்ளி (கிழக்கு) வட்டத்தில் 01, திருச்சிராப்பள்ளி (மேற்கு) வட்டத்தில் 04, திருவெறும்பூர் வட்டத்தில் 05, ஸ்ரீரங்கம் வட்டத்தில் 18, மணப்பாறை வட்டத்தில் 06, மருங்காபுரி வட்டத்தில் 07, இலால்குடி வட்டத்தில் 22, மண்ணச்சநல்லூர் வட்டத்தில் 08, முசிறி வட்டத்தில் 09, துறையூர் வட்டத்தில் 18 மற்றும் தொட்டியம் வட்டத்தில் 06 பணியிடங்கள் ஆக மொத்தம் 104 கிராம உதவியாளர் காலிப் பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இப்பணியிடங்களுக்கு கல்வித் தகுதியாக குறைந்தபட்சம், தமிழை ஒரு பாடமாக கொண்டு 10-ஆம் வகுப்பு தேர்வை எழுதியிருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர் விண்ணப்பிக்கும் கிராமம் மற்றும் தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் கணவரோ, மனைவியோ உயிரோடு இருக்கும் போது வேறு திருமணம் செய்தவராக இருத்தல் கூடாது.
விண்ணப்பதாரரின் வயதை பொறுத்தவரையில், 01.07.2025 அன்று குறைந்த பட்சம் 21 வயதும் (அனைத்து பிரிவினருக்கும்), OC வகுப்பினருக்கு அதிகபட்சமாக 32 வயதும், BC / BC(M) / MBC & DNC / SC / SC (A) / ST வகுப்பினருக்கு அதிகபட்சமாக 37 வயதும் இருக்க வேண்டும். முன்னாள் இராணுவத்தினரில் OC வகுப்பினருக்கு அதிகபட்சமாக 50 வயதும், BC / BC (M) / MBC & DNC / SC / SC (A) / ST வகுப்பினருக்கு அதிகபட்சமாக 55 வயதும் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் விதித்தளர்வு வழங்கப்படும்.
இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. அதற்குரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சம்பந்தபட்ட தாலுகா அலுவலகங்களில் நேரில் அல்லது அஞ்சலில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பபடிவங்களை https://tiruchirappalli.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது, அருகில் உள்ள ஏதேனும் இ-சேவை மையத்தை அணுகலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தபட்ட தாலுகா அலுவலகங்களை நேரில் அணுகலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 21.08.2025.
— அங்குசம் செய்திப்பிரிவு.