வீட்டுக்குள் பட்டாசு ஆலை ! தொடரும் சட்டவிரோத பட்டாசு ஆலை பலிகள் !
விருதுநகர் மாவட்டத்தில், நாளுக்கு நாள் தொடரும் பட்டாசு விபத்தும் உயிர் பலிகளும் தொடரும் நிலையில், சட்ட விரோத பட்டாசு உற்பத்தியா? இனிமேல் நானே நேரடியாக ஆய்வுக்கு வந்து நடவடிக்கை எடுப்பேன் விருதுநகர் மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
விஜய்கரிசல்குளம் கிராமத்தில் வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது 3 பேர் உயிரிழந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற கிராமத்திற்கு ஆய்வுக்கு சென்ற போது பொதுமக்கள் முன்னிலையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த பொன்னுபாண்டியன் என்பவருக்கு சொந்தமான குடியிருப்பு வீட்டில் அனுமதி இன்றி சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தியில் நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆக-09 அன்று 12 மணியளவில் திடீரென ஏற்பட்ட மின் கசிவினால் உராய்வு ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறி உள்ளது.
இந்த வெடி விபத்தில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த கீழகோதை நாச்சியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் (21), விஜய கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி (70), சண்முகத்தாய் (60) ஆகிய இரண்டு பெண் உட்பட்ட 3 பேர் உடல் சிதறி பலியான நிலையில், மாரியம்மாள் வயது 55 என்ற ஒரு பெண் படுகாயம் அடைந்துள்ளார். அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக சிவகாசி அரசு மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார்.

உடனடியாக தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பலியான 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிப்பு பணி நடைபெற்று வந்த நிலையில், இது குறித்து வருவாய் துறையினர் மற்றும் வெம்பக்கோட்டை காவல் துறையினர் தீவிர விசாரணை நடைபெற்றது.
வீட்டின் உரிமையாளர் பொன்னு பாண்டியன் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டாரா அல்லது வேறு யாரேனும் இந்த வீட்டில் வைத்து பட்டாசு தயாரிப்பு பணி நடைபெற்றதா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பவ இடத்திற்கு ஆய்வுக்கு வந்த விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் இனிமேல் இந்த பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி நடைபெற்றால் நானே நேரடியாக ஆய்வுக்கு வந்து நடவடிக்கை எடுப்பேன் என கடுமையாக பொதுமக்கள் முன்னிலையில் அனைவரையும் எச்சரித்தார்.
— மாரீஸ்வரன்