விருதுநகர் – உடல் உறுப்புகள் தானம் செய்த பட்டாசு கூலி தொழிலாளி உடலுக்கு அரசு மரியாதை!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா, மேட்டமலை கிராமத்தை சேர்ந்த ராமர். (47 ) பட்டாசு ஆலை கூலி வேலை செய்து செய்து வரும் இவருக்கு, துளசி மணி (37) என்ற மனைவியும், 15 வயதுடைய காளீஸ்வரி, என்ற மகளும், 5 வயதுடைய முகில்பாண்டி என்ற ஆண் குழந்தையும் உள்ளார்கள்.
கடந்த செப்.30 –ஆம் தேதி காலையில் இரு சக்கர வாகனத்தில் சிவகாசி -சாத்தூர் செல்லும் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு செல்லும் போது எதிரே வந்த வாகனம் மோதி நிலை தடுமாறி தலையில் அடிபட்டு, படுகாயம் அடைந்தவரை சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விருதுநகர் மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்.
அங்கு அவருக்கு தலையில் அதிக அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்த நிலையில் விருதுநகரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகும் சுயநினைவு திரும்பாத நிலையில் இவர் மூளை சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்து விட்டனர்.
அதன் பின்னர் அங்கு ராமரின் உடலில் இருந்த 2 சிறுநீரகம், கல்லீரல், கணையம் என 4 உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உடனடியாக அது திருச்சி, மதுரை , தூத்துக்குடி பகுதியை சேர்ந்த 6 பேருக்கு பொருத்தப்பட்டது. பின்னர் ராமரின் உடலை விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர், மருத்துவர்கள், செவிலியர்கள், முன்னிலையில், மெழுகுவர்த்தி ஏந்தி மரியாதை செலுத்தி அவரது சொந்த கிராமத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவரது உடலுக்கு சாத்தூர் கோட்டாட்சியர் சிவக்குமார், வட்டாட்சியர் ராமநாதன், வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி,கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தினார்கள்.
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல் முதலாக உடல் உறுப்பு தானம் செய்து 6 பேரின் வாழ்க்கைக்கு ஒளியேற்றி முன்மாதிரியாக விளங்கியுள்ளார்,பட்டாசு கூலி தொழிலாளியான ராமர்.
உடல் உதிர்ந்த உயிர் என்றும்
உடல் சேர்வதில்லை…..
ஆனாலும்
உடல் உறுப்பு தானத்திலே
புதுஉயிர் சேர்வதுண்டு…!.
உடல் உறுப்பை
தானம் செய்வோம்
பிறரின் உடலோடு
உயிராவோம்..!
வாழும்வரை
உடலோடு நாமிருப்போம்.
இறந்தபின் பிறரின்
உயிராக நாமிருப்போம்…
இறந்தாலும் உயிரை
என்றும் இருக்க வைப்போம்…
சாதி மதமில்லா
சமத்துவத்தை
உடல்தானத்தில்
சாதித்திடுவோம்.
– மாரீஸ்வரன்.