முனைவர் பட்ட ஆய்வை முடிக்க வேண்டுமா? நீயாக என்னை சந்தோஷப்படுத்து…! வீடியோ செய்தி !

0

முனைவர் பட்ட ஆய்வை முடிக்க வேண்டுமா? நீயாக என்னை சந்தோஷப்படுத்து…

“நீ எனக்கு இணங்கா விட்டால் எந்த காலத்திலும் முனைவர் பட்டம் பெற முடியாது என்று சவால் விட்டார். அவர் சவால் விட்டபடியே, இன்று வரையில் முனைவர் பட்டம் பெறமுடியாமலும் வாழ்வாதாரத்தை இழந்தும் நிற்கிறேன். நான் முனைவர் பட்டம் வாங்கி இருந்தால், இன்றைக்கு ஒரு கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருப்பேன். என்னை நம்பி இருக்கும் இரண்டு குழந்தைகளும் என் குடும்பமும் கஷ்டப்பட வேண்டிய சூழல் நேர்ந்திருக்காது.” என கண்ணீர் வடிக்கிறார், தேவசேனா.

 

தேவசேனா
தேவசேனா

வீடியோ லிங்

 

“கடந்த 2016-ஆம் ஆண்டில் முனைவர் பட்டத்திற்காக நான் விண்ணப்பித்து ஆய்வுக்கு வழிகாட்டியாக ஒருவரிடம் சேர முயற்சி செய்து கொண்டிருந்தபோது, தற்போது தமிழ் ஒப்பிலக்கியத் துறையில் முனைவராக பணியாற்றி வரும் ரவிசங்கர் தாமாக முன்வந்து என்னை அணுகினார்.

தன்னிடம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சி மாணவர்கள் இருப்பதாகவும், எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியை ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறினார். என்னுடைய ஆராய்ச்சி புலத்திற்கு தொடர்பு டைய வேறு ஒரு முனைவர் எனக்கு வழிகாட்டியாக இருக்க ஒப்புக்கொண்டு விட்ட சூழ்நிலையில், நான் மேற்படி ரவிசங்கரை மீண்டும் தொடர்பு கொள்ளவில்லை. ஆனாலும், நான் கல்லூரியில் சேர்ந்த நாள் முதலாகவே ரவிசங்கர் தேவைக்கு அதிகமாக என்னிடம் பேச முயற்சித்தார். ”என்னை எப்போதும் எந்த நேரத்திலும் எந்த உதவிக்கும் அழைக்கலாம்” என இரட்டை அர்த்த தொனியில் பேசுவார்.

”உனது அழைப்புக்காக காத்தி ருக்கிறேன். நீ கல்லூரிக்குள் எப்போது நுழைவாய் என்று தினம் ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.” என வரம்பு மீறி வழிந்து பேசுவார்.

புகார் கடிதம்
புகார் கடிதம்

அவர் எல்லை மீறி பேசும் ஒவ்வொரு முறையும் அதனை அனுமதித்ததில்லை. அப்போதே, அதனை கண்டித்திருக்கிறேன். அதையெல்லாம் அவர் ஒருநாளும் பொருட்படுத்தியதே இல்லை. அடுத்த நாளும், அதையேதான் செய்வார்.

காமராஜர் பல்கலை கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் என்பதால், அவரது எல்லை மீறல் பேச்சுக்களை சகித்துக் கொண்டு கடந்து சென்றேன். ஒரு கட்டத்தில், ”எனக்கு ஆசிரியராக இருக்கும் நீங்கள் இப்படி செய்யலாமா? உங்களை என் உடன் பிறந்த சகோதரராகவே கருதுகிறேன்.

வீடியோ லிங்

தயவுசெய்து என்னிடம் தவறான முறையில் பேச முயற்சிக்காதீர்கள்” என்று முகத்துக்கு நேராக சொல்லியும் பார்த்துவிட்டேன். ஆனாலும், அவர் தனது நடவடிக்கையை மாற்றிக் கொள்வதாக இல்லை. மாறாக, அவரது தொந்தரவு நாளுக்கு நாள் அதிகமானது.

“பல்கலைக்கழகத்தில் எனக்கு இருக்கும் செல்வாக்கைப் பற்றி உனக்குத் தெரியாது. என் விருப்பப்படி நீ நடந்து கொண்டால் ஆய்வை முடிப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நான் செய்து தருகிறேன். வரும் மார்ச் மாதம் முடிவதற்குள் என் அறைக்கு வந்து நீயாக என்னை சந்தோஷப்படுத்தாவிட்டால், பல்கலைக் கழக ஆராய்ச்சியை நீ தொடரவே முடியாது. இப்போது மட்டுமல்ல எக்காலத்திலும் முனைவர் பட்டம் பெற முடியாது.” என்று பச்சையாகவும் பகிரங்கமாகவும் மிரட்டினார்.

ரவிசங்கர்
ரவிசங்கர்

இதற்குமேல், பொறுத்து பலனில்லை என்று முடிவு செய்து உடனடியாக பல்கலைக்கழக பதிவாளரிடமும் துணை வேந்தரிடமும் எனது புகாரை கடிதமாக கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. அதன்பின்னரே, நேரடியாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தேன்.

அப்போதும்கூட, என் புகாரில் உண்மை இருப்பதை ஒப்புக்கொண்ட பல்கலைக் கழக நிர்வாகம், குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியர் ரவிசங்கருக்கு கொடுத்த தண்டனை என்ன தெரியுமா? வெறும் பணியிடமாற்றம். ஒப்புக்கு கொடுக்கப்பட்ட அந்த தண்டனையும் முடிந்து தற்போது, பழையபடி பல்கலைகழகத்திற்கே வந்துவிட்டார். இன்றுவரையில், எனது ஆராய்ச்சி ஆய்வை சமர்ப்பிப்பதற்கு பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறார்.

என் புகார் மீதான உரிய விசாரணை மேற்கொண்டு, அவரை சிறையில் தள்ளி தண்டிக்க வேண்டும்” என்கிறார் தேவசேனா.

கணவர் முருகேசன்
கணவர் முருகேசன்

”ஆரம்பத்தில் இந்த பிரச்சினைகளை தேவசேனா என்னிடம் சொல்லவே இல்லை. என்ன பிரச்சினை என்று கோபமாக கேட்டபிறகே நடந்தவற்றை சொன்னார். உடனே, ரவிசங்கர் வீட்டுக்கே சென்று கண்டித்தேன்.

அதன்பிறகு, ரவிசங்கர் அவனது மனைவி குழந்தைகளுடன் நேரில் வந்து, ”அண்ணே நான் தவறு பண்ணி செஞ்சுட்டேன் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். நாம் எல்லாம் ஒரே இனம், ஒரே ஊர்” என கதறி அழுது எனது குடும்பத்தார்கள் அனைவர் காலிலும் தனித் தனியாக விழுந்து மன்னிப்பு கோட்டார். இன்றுவரை, ரவிசங்கர் இடைஞ்சலாக தான் உள்ளார். சைவ சித்தாந்த தத்துவ துறை யில் என் மனைவியால் முனைவர் பட்டம் பெற முடியவில்லை. இப்போது புதிதாக பொறுப் பேற்றுள்ள பதிவாளரிடமும், சிண்டிகேட் உறுப்பினர்களிடமும் முறையிட்டுள்ளோம்.

முன்னாள் மாணவர்கள் ஒட்டிய போஸ்டர்
முன்னாள் மாணவர்கள் ஒட்டிய போஸ்டர்

எனது மனைவிக்கு நேர்ந்தது போல் படிக்க வரும் யாருக்கும் இந்த மாதிரி கொடுமைகள் நடக்கக்கூடாது.

வீடியோ லிங்

அப்படி நடந்தால், ரவிசங்கர் போல் இருக்கும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கொடுக்கும் தண்டனை ஒரு பாடமாக அமைய வேண்டும்.” என்கிறார், தேவசேனாவின் கணவர் முருகேசன். பேரா.ரவிசங்கர் குறித்து கடந்த அங்குசம் இதழில் வெளியான செய்தியை போஸ்டராக அடித்து மதுரை நகர் முழுவதும் ஒட்டியிருக்கின்றனர், மதுரை காமராஜர் பல்கலை முன்னாள் மாணவர்கள். நகர் முழுவதும் ஒட்டிய போஸ்டர்களை, ஆள்வைத்து இரவோடு இரவாக கிழித்து தள்ளியிருக்கிறார், பேரா.ரவிசங்கர்.

“அன்றைக்குத்தான் ஆதாரம் இல்லை. இன்றைக்கு வாட்சப் சாட்-ல இருந்து எல்லாமே வெளிய வந்துருச்சு. இன்னும் நடவடிக்கை எடுக்காம, ஏன் வேடிக்கை பார்க்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை” என வெளிப்படையாகவே, புலம்புகிறார்கள் பல்கலை கழக மாணவர்களும் பேராசிரியர்களும்!

– ஷாகுல், படங்கள்: ஆனந்த்

Leave A Reply

Your email address will not be published.